வீட்டிலிருந்தே விண்கலத்தை இயக்கும் விஞ்ஞானிகள்! 

கரோனா தீநுண்மி காரணமாக உலகமே நிலைகுலைந்தாலும், சமூக இடைவெளி, முகக்கவசம், வீட்டிலிருந்தே வேலை என பல்வேறு முன்னெடுப்புகளுடன் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்திக் 
வீட்டிலிருந்தே விண்கலத்தை இயக்கும் விஞ்ஞானிகள்! 

கரோனா தீநுண்மி காரணமாக உலகமே நிலைகுலைந்தாலும், சமூக இடைவெளி, முகக்கவசம், வீட்டிலிருந்தே வேலை என பல்வேறு முன்னெடுப்புகளுடன் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மனித சமூகம்.

ஆனால் வீட்டிலிருந்தே வேலை என்பது அலுவலகப் பணிகளுக்கே சாத்தியப்படும்போது, விஞ்ஞானத்துக்கு கை கூடாதா என்ன? அந்த வரிசையில் வீடுகளில் இருந்தே பணியாற்றி வருகின்றனர் நாசா விஞ்ஞானிகள். ஆனால், அவர்கள் பணியைச் செயல்படுத்தும் தொலைவுதான் சற்று அதிகம். என்ன புதிராக உள்ளதா? 116 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் கியூரியாசிட்டி விண்கலத்தைத்தான் வீட்டிலிருந்தே இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த விஞ்ஞானிகள்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறி உள்ளதா என்பதைக் கண்டறிய 2011-ஆம் ஆண்டு கியூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது நாசா. அந்த விண்கலமும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அந்த விண்கலத்தின் செயல்பாடுகளை நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தை (ஜேபிஎல்) சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

அந்தப் பணிக்குதான் பெரும் இடையூறாக வந்து சேர்ந்தது, கரோனா நோய்த்தொற்று. கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அந்த ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள், பணியாளர்கள் எவரும் பணிக்கு வர முடியவில்லை. இதைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தே வேலை என்பதைத் திட்டமிடத் தொடங்கியது ஜேபிஎல் குழு.

அதன்படி, விஞ்ஞானிகள் கியூரியாசிட்டி விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் பணியை அவரவர் வீடுகளில் இருந்தே மேற்கொள்ளும் வகையில், ஹெட்செட்டுகள், மானிட்டர்கள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆய்வகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் வீடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது. இருப்பினும் விண்கலத்தை எங்கு இயக்குவது, அதன் இயந்திர கரங்களை எவ்வளவு தொலைவு நீட்டிக்க இயலும் என கண்டுபிடிக்க கியூரியாசிட்டி விண்கலம் ஏற்கெனவே எடுத்து அனுப்பிய 3-டி படங்கள் விஞ்ஞானிகளுக்கு உதவின.

ஆனாலும் அந்த 3-டி படங்களை ஆராய ஆய்வகத்தில் உள்ள உயர் செயல்திறன் கொண்ட கண்ணாடிகள் தேவைப்படும். அந்தக் கண்ணாடிகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், 3-டி படங்களை மடிக்கணினிகளில் சிவப்பு-நீல நிற 3-டி கண்ணாடிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

மேலும், விண்கலத்தின் ஒவ்வோர் அசைவையும் திட்டமிடும் பணியில் வழக்கமாக 20 பேராவது ஈடுபடுவார்கள். ஆய்வகத்தில் ஒரே அறையில் அது எளிதாக இருக்கும். ஆனால், வெவ்வேறு இடங்களில் இருந்து இந்தப் பணியைத் திட்டமிடுவதற்கு விடியோ கான்பரன்ஸிங், மெசேஜிங் ஆப் போன்றவற்றை விஞ்ஞானிகள் பயன்படுத்த வேண்டியிருந்தது.

ஒருவரை மற்றொருவர் புரிந்துகொள்வது அவசியம். வழக்கமாக ஆய்வகத்தில் செய்யும் பணியை வீட்டிலிருந்தே செய்வதற்கு 2 மணி நேரம் வரை கூடுலானது. இவற்றையெல்லாம் சிரத்தையுடன் செய்த பிறகு வீட்டிலிருந்தே அவர்கள் கொடுத்த கட்டளையை ஏற்று, செவ்வாய் கிரகத்தில் "எடின்பர்க்' என்று பெயரிடப்பட்ட இடத்தில் பாறையை வெற்றிகரமாகத் துளைத்தது கியூரியாசிட்டி ரோவரின் இயந்திர கரங்கள்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் "கேல் கிரேட்டர்' என்ற பகுதியில் மவுண்ட் ஷார்ப் என்ற மலைப் பகுதியில் ஆய்வு செய்துகொண்டிருக்கும் கியூரியாசிட்டி விண்கலம், தனது அடுத்த காலடியை எடுத்து வைத்திருக்கிறது. அதாவது, 5 கி.மீ. உயரம் கொண்ட அந்த மலையில் அடுத்த பகுதிக்கு ஏறத் தொடங்கியுள்ளது.

வீட்டிலிருந்தே கியூரியாசிட்டி விண்கலத்தின் செயல்பாடுகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருவது குறித்து அந்த அணியை வழிநடத்தும் அலிசியா ஆல்பாக் கூறுகையில், ""செவ்வாய் கிரகம் நமக்காகக் காத்திருக்கவில்லை; நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்''. ஆம், கரோனா அல்ல எதுவும் நமது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதை நிரூபிக்கிறது கியூரியாசிட்டி ஆய்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com