வெற்றியாளர்கள்!: டாடா குழுமம்

இந்திய தொழில்துறை வளர்ச்சியின் ஓர் அடையாளமாக விளங்கும் டாடா நிறுவனங்களின் "பிதாமகர்'  ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாடா.
வெற்றியாளர்கள்!: டாடா குழுமம்


இந்திய தொழில்துறை வளர்ச்சியின் ஓர் அடையாளமாக விளங்கும் டாடா நிறுவனங்களின் "பிதாமகர்' ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாடா. பார்சி இனத்தை சேர்ந்தவரான அவர் குஜராத்தில் நவ்சாரி என்ற ஊரில் 1839-ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது குடும்பம் மும்பையில் குடியேறியபின் அங்கு எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டம் பெற்று அவரது தந்தையின் ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இறங்கினார். அதை மேம்படுத்த இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான்,ஹாங்காங் வரை உலகப்பயணம் மேற்கொண்டு அந்த அனுபவத்தில் தன்னுடைய 29 -ஆம் வயதில் 1868-இல் ஒரு தொழில் விற்பனை நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார்.

ஆலவிதை போன்று 21,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய டாடா தொழில் நிறுவனம் ஒரு பிரம்மாண்டமான ஆலமரமாக விரிவடைந்து விழுதுகளை விட்டு உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளில் கிளை நிறுவனங்களை நிறுவி 160 நாடுகளில் பொருட்களை விற்பனை செய்து 2018-19-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 120 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டும் நிறுவனமாக இப்போது வளர்ந்துள்ளது. அந்நிறுவனங்களில் 7 இலட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று கருதப்படும். ஜாம்ஷெட்ஜி என்.டாடா இந்தியாவில் தொழில் நிறுவனங்களைத் தொடங்க அடித்தளம் அமைத்தார். அவரது நான்கு கனவுகள்: ஒரு இரும்புத் தொழிற்சாலை, நீர்மின்சக்தி திட்டம், ஒரு உலகத்தரமான கல்வி நிறுவனம், ஒரு தலைசிறந்த ஓட்டல். ஜாம்ஷெட்ஜி டாடாவின் முதல் தொழில் நிறுவனம் நாக்பூரில் அவர் தொடங்கிய எம்ப்ரஸ் நூற்பாலை. மும்பையில் அவர் தொடங்கிய நூற்பாலைக்கு சுதேசி மில் என்று தேசிய உணர்வுடன் பெயரிட்டார். அவரது அடுத்த திட்டம்: இந்தியாவில் சிறந்த இரும்பாலை. அதற்காக அமெரிக்காவுக்குச் சென்று அங்கு இயங்கி வரும் பல இரும்பாலைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின் சார்லஸ் பேஜ் கரன் என்ற அமெரிக்க பொறியாளரை தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்து இந்தியாவின் முதல் இரும்பாலையை அன்றைய பிகார்(இப்போது ஜார்கண்ட்) மாநிலத்தில் போதிய கனிம வளமும், இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் நீர்வளமும் மிக்க இடத்தில் 25 சதுர மைல்கள் பரப்பளவில் 1902-இல் நிறுவினார். அந்த இடம் இப்போது ஜாம்ஷெட்பூர்/டாடாநகர் என்று அழைக்கப்படுகிறது.

அவர் உருவாக்கிய நூற்பாலையிலும், இரும்புத் தொழிற்சாலையிலும் அந்த காலத்திலேயே மருத்துவ உதவி, பென்ஷன், பிராவிடன்ட் நிதி, மழலைகள் காப்பகம் போன்ற தொழிலாளர் நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

அடுத்ததாக 1903-ஆம் ஆண்டு மும்பையில் "தாஜ்மஹால் பேலஸ்' என்ற ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலை நிறுவினார். அக்காலத்தில் மின்சார வசதியை முழுமையாகக் கொண்ட முதல் இந்திய ஓட்டல் தாஜ்மகால்தான். இன்று வரை அது உலகின் தரமான ஓட்டல்களில் ஒன்றாக விளங்குகிறது. தனது கனவுகளை முழுமையாக நனவாக்கும் முன்பே 1904-இல் ஜாம்ஷெட்ஜி டாடா மறைந்தார்.

அவருக்குப்பின் அவரது மகன் தோரப்ஜி டாடாவும் அவரது வாரிசுகளான ஜேஆர்டி டாடா, ரத்தன் டாடா இருவரும் ஜாம்ஷெட்ஜி அடித்தளம் அமைத்துக் கொடுத்த தொழில் சாம்ராஜ்யத்தை அவரது திட்டங்களின்படி விரிவாக்கி நடத்தி வருகின்றனர். தோரப்ஜி காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக, "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' என்ற பல்கலைக்கழகத்தை பெங்களூருவில் நிறுவினார். இதற்கான நிலமும், மூலதனப்பணமும் டாடா நிறுவனத்தால் வழங்கப்பட்டது. உள்ளூர் மக்களால் "டாடா இன்ஸ்டிடியூட்' என்றே இது அழைக்கப்படுகிறது.

பல அறிவியல் ஆராய்ச்சி, சமூகவியல் கல்வி நிறுவனங்களையும் மும்பையில் கேன்சர் மருத்துவமனையையும் டாடா அறக்கட்டளைகள் இந்தியாவில் தொடங்கி நடத்தி வருகின்றன. டாடா அறக்கட்டளைகளில் இருந்து 66சதவிகிதம் நிதி வெள்ளம், புயல்போன்ற ஆபத்துக்காலங்களில் உதவுவதற்கும், உயர்படிப்பு, பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்காகவு ம் செலவிடப்படுகிறது. ஒரிசா, கேரளா போன்ற கடலோர மாநிலங்களில் சுனாமி, புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாடா அறக்கட்டளை நிவாரணம் வழங்கியும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்தும் வருகின்றது. கரோனா கால சீரமைப்பிற்கு "பிஎம் கேர்ஸ்' அமைப்புக்குரூ. 2,000 கோடி நிதியுதவி தரப்பட்டுள்ளது.

தோரப்ஜி டாடா காலத்தில் உலகளாவிய தொழில் விரிவாக்கத்திற்கு வசதியாக இலண்டனில் வணிக மையம் தொடங்கப்பட்டது. டாடா ஸ்டீல் இரும்பு, எஃகு ஆலை அதன் முழுமையான வடிவத்தை அடைந்தது. மகாராஷ்டிராவில் காண்ட்லா/லோனாவில் முதல் நீர்மின்சக்தி திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஜாம்ஷெட்ஜி, தோரப்ஜிக்கு அடுத்து டாடா நிறுவனத்தை 1938-முதல் 91வரை தலைமைதாங்கி நடத்தியவர் ஜேஆர்டி டாடா. இந்தியாவின் முதல் பைலட்டாக உரிமம் பெற்ற அவர் "டாடா ஏர்லைன்ஸ்' என்ற விமான சேவை நிறுவனத்தை தொடங்கி பின்னர் அதை "ஏர் இண்டியா'வாக மாற்றினார். 1932-இல் கராச்சியில் இருந்து பம்பாய்க்கு கடிதங்களைக் கொண்டு வரும் சரக்கு விமானத்தை இயக்கினார். 1953-இல் ஏர் இண்டியா தேசிய உடமையாக்கப்பட்டது. இருப்பினும் 1977வரை அதன் தலைவராக இருந்து வழி நடத்தினார். ஜேஆர்டி காலத்தில் 14 நிறுவனங்களாக இருந்த டாடா சன்ஸ் என்ற தாய்நிறுவனத்தின் கிளைகளாக 95 தொழில் நிறுவனங்கள் ஜேர்டியின் தலைமையில் டாடா குழுமத்தில் தொடங்கப்பட்டன.

1945 - ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவப்பட்டது. 1954-இல், டைம்லர்-பென்ஸூடன் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கி வணிக வாகன சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . "டாவூ' பிராண்டு கார்களை 2004-இல் வாங்கினார்கள். அந்நிறுவன தயாரிப்பான டாடா இண்டிகா இந்தியாவில் அந்த பிரிவில் மிக அதிகமாக விற்பனையாகும் வாகனமாக ஆனது. பின்னர் வந்த ரத்தன் டாடா காலத்தில் ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து "ஜாகுவார்', "லேண்ட்ரோவர்' பிராண்டுகளையும் வாங்கி விரிவுபடுத்தினார்கள். லாரிகள், டிரக்குகள், பேருந்துகள், கனரக வாகனங்கள், இராணுவத்துக்கு தேவையான வாகனங்கள் மட்டுமல்லாது சிறிய வணிகர்களும் பயன்படுத்தும் வகையில் "குட்டியானை' என்று அழைக்கப்படும் டாடா ஏஸ் வாகனத்தையும் உருவாக்கி வாகனத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் தனக்கென தனியிடத்தை பெற்றது. உலகின் பல நாடுகளில் டாடா பேருந்துகளும், டிரக்குகளும் இயக்கப்படுகின்றன. நடுத்தர குடும்பத்தினரும் வாங்கி பயன்படுத்தக்கூடிய "நானோ கார்' என்பது ரத்தன் டாடாவின் கனவுத்திட்டம். அதற்காக ஒரு தொழிற்சாலையை மே.வங்கம் சிங்கூரூரில் தொடங்க திட்டமிட்டபோதே அதில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அத்தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றப்பட்டது.
இந்திய அரசு 2030-க்குள் அனைத்து வாகனங்களையும் மின்சக்தியின் மூலம் இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் டாடா வாகனங்களை படிப்படியாக மின்சக்தி வாகனங்களாகவும், இரண்டு வகைகளில் இயங்குபவையாகவும் உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1968 -ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட "டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' இக்குழுமத்தின் முன்னணி நிறுவனமாக கணினி, இணைய சேவைகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அளித்து வருகிறது டிசிஎஸ் உலகின் இணைய சேவை வழித்தடங்களில் 25சதவிகித பங்களிப்பை செய்து வருகிறது.

ஜேஆர்டி காலத்தில் பொதுவுடைமை கோட்பாட்டை நேரு-இந்திரா பின்பற்றி வந்ததால் இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் விரிவாக்கம் அடைவதில் பின்னடைவைச் சந்தித்தது. நரசிம்ம ராவ்-மன்மோகன் காலத்தில் தொடங்கிய உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தவுடன் டாடா சாம்ராஜ்யம் உலகின் பல்வேறு நாடுகளில் தன் விழுதுகளை நிலைநிறுத்தி விரிவாக்கம் செய்து வருகிறது.

1991 முதல் ரத்தன் டாடா இந்நிறுவனத்தின் தலைமை ஏற்றார். அதற்கு முன்பாக டாடா இரும்புத் தொழிற்சாலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக ஓராண்டு பணியாற்றி தொழிற்சாலைகளின் அடிப்படைகளை அறிந்து கொண்டார்.

பல்வேறு தொழில் துறைகளான இரசாயனங்கள், தொழில்நுட்பம், அழகுசாதனப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், சந்தைப்படுத்தல், பொறியியல் மற்றும் உற்பத்தி, தேநீர் மற்றும் மென்பொருள் சேவைகள் போன்றவற்றில் உலகளாவிய அளவில் ரத்தன் டாடா கால்பதிக்கத் தொடங்கினார்.

வோல்டாஸ் குளிர்சாதன வசதியளிக்கும் சேவை நிறுவனம் பல விமான நிலையங்களிலும், உலகின் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட பல இடங்களிலும் சேவை அளித்து வருகிறது. பல நாடுகளில் பெரிய அளவில் நீர்மின்சக்தி சக்தித் திட்டங்களை டாடா நடத்துகிறது. டைட்டன் கடிகாரங்கள், தனிஷ்க் தங்க, வைர ஆபரணங்கள் போன்ற ஆடம்பர நுகர்வோர் பொருட்களையும் விற்பனை செய்கிறது. டாடா நிறுவனத்தின் பெயரில் உப்பு முதல் டாடா ஸ்கை எனப்படும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் வரை அனைத்துத் துறைகளிலும் டாடா தடம் பதித்துள்ளது.

டாடா ஸ்டீல் ஆலையுடன் பிற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க இரும்பாலைகளை நடத்தி வரும் "கோரஸ்' நிறுவனத்தை 10 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கி இணைத்து ஐரோப்பாவில் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி தொழிற்சாலை நிறுவனமாக வளர்ந்துள்ளது. உலகின் 26 நாடுகளில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்திக் கிளைகள் உள்ளன. இந்தியன் ஓட்டல்ஸ் லிமிடெட் என்ற பெயரில் டாடா நிறுவனத்தின் தாஜ் ஓட்டல்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் உலகின் பல பகுதிகளில் நட்சத்திர ஓட்டல்களாக இயங்கி வருகின்றன.

2001-இல் இன்சூரன்ஸ் துறையில் அமெரிக்காவின் ஏஐஜி நிறுவனத்தை வாங்கி இணைத்துக் கொண்டது.

டாடா குளோபல் பீவரேஜஸ் என்ற கிளை நிறுவனம் தொடங்கி இங்கிலாந்தின் மிகப்பெரிய டீ உற்பத்தி, விற்பனை நிறுவனமாக விளங்கிய டெட்லி டீ பிராண்டை ரத்தன் டாடா வாங்கியதன் விளைவாக அமெரிக்கா, கனடா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இத்துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக டாடா விரிவடைந்தது. கேரளாவில் மூணாறில் உள்ள கண்ணன்
தேவன் தேயிலைத் தோட்டங்களும் இப்பிரிவைச் சேர்ந்தவையே.

ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் வருவாயில் 60 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்தே வருகிறது. உலகின் தரமான பிராண்டுகளில் 11-ஆவது இடத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. ரத்தன் டாடா காலத்தில் டாடா சன்ஸ் தாய்நிறுவனத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை அயல்நாடுகளில் வாங்கி இணைத்து அதன் வருவாயை 40 மடங்காகவும், இலாபத்தை 50 மடங்காகவும் வளர்த்துக் காட்டினார்.

இந்திய, உலக பணக்காரர்கள் பட்டியலில் டாடாக்களை பார்க்க முடியாது. அவர்கள் தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்தி அவற்றை முன்னணியில் நிலைநிறுத்துவதிலேயே அக்கறை காட்டி வருகிறார்கள். தொழில் நிறுவனங்கள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை புதிய தொழில்நுட்பத்துடன் அளிப்பதையே தங்கள் இலட்சியமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே அவர்கள் தாரக மந்திரம்.

டாடாக்களின் தொழில்துறை சேவைகளை அங்கீரித்து இந்திய அரசு ஜேஆர்டி டாடாவுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா, ரத்தன் டாடாவுக்கு இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது ஆகியவை அளிக்கப்பட்டன. ஐரோப்பாவின் மிகச்சிறந்த தொழிலாளர்நல நிறுவனம் என்ற பாராட்டையும் இது பெற்றுள்ளது.

ரத்தன் டாடாவை அடுத்து டாடா நிறுவனத்திலேயே தன்பணிகளை தொடங்கி டிசிஎஸ் என்ற அதன் முன்னணி கிளை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சிறப்பாக செயல்பட்ட தமிழர் நாமக்கல்லை அடுத்த மோகனூரில் பிறந்த நடராஜன் சந்திரசேகரன் 2017 முதல் டாடா நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் என்பது தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com