தம்பி... உடம்பு எப்படியிருக்கு?

நடப்பதன் மூலமாகவே பாதைகள்உருவாக்கப்படுகின்றன.
தம்பி... உடம்பு எப்படியிருக்கு?

நடப்பதன் மூலமாகவே பாதைகள்
உருவாக்கப்படுகின்றன.

- ஃபிரான்ஸ் காஃப்கா

சேட்டைகளும், குறும்புகளுமான தங்களது இளமைப் பருவத்தைக் கடந்து வந்தவர்களும், இன்றும் இளைஞர்களாகவே அவற்றைச் செய்து கொண்டிருப்பவர்களும் நாம் தலைப்பில் சொல்லியிருக்கும் கேள்வியை மூத்தவர்கள் பலர் நம்மை நோக்கி சொல்லிக் கேட்டிருப்போம். இன்றும் "உடம்பு எப்படியிருக்கு?' என்றும், "உடம்புக்கு எப்படியிருக்கு?' என்றும்... கேட்கப்படுகிற கேள்விகளுக்கு, அது கேட்கப்படுகிற தொனியிலேதான் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அர்த்தம் புரிந்துகொள்ளப்படுகிறது.

நாம் அலசி, ஆராய்ந்து கொண்டிருக்கும் கேள்வியின் அடிப்படை... ஒருவரது உடல் நன்றாக இருந்தால் அவரது மனம் நன்றாக இருக்கும். அப்படி மனம் தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் அவரால் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கும், பிரச்னையும் வராது என்கிற அறிவியல் உண்மையே. இந்த மகாசூத்திரத்தின் உண்மையை தாங்கி நிற்பதே பாரதியின் "உடலினை உறுதி செய்' என்கிற முழக்கமும், விவேகானந்தர் மற்றும் இன்னபிற ஞானிகள், சித்தர்கள் எல்லாரும் உடல்நலன் குறித்து சொல்லியிருக்கும் வார்த்தைகளும்.

உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் மற்றும் மானுட மேன்மைக்கான தலைவர்கள் எல்லாருமே அவர்களது உடலினை உறுதி செய்ததனாலேயேஉலகப் புகழ் பெற்றார்கள், நமக்கு முன்னோடியானார்கள். இளைஞர்கள் பலர், "உடல் வலிமையைக் காட்டுகிறேன் பார்' என்கிற பெயரில் விபரீதங்களில் சிக்கிக் கொள்கின்றனர். "வித்தியாசம் வேறு; விபரீதம் வேறு' என்கிற வேறுபாட்டை ஒருவர் விளங்கிக் கொள்ளவில்லை என்றால் வித்தியாசமான விபரீதங்களே முடிவாக இருக்கும்.

விடுதலைப் போர் நடத்திய உலக நாடுகளில் எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராட, மகாத்மா காந்தியோ எந்த ஆயுதமும் எடுக்காமல், "இந்த நாடு என்னுடையது. உன்னுடையது அல்ல!' என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முகத்தில் அறைந்ததைப்போல சொல்லிப் போராடினாரே... அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் எப்படி கூர் மழுங்கிப் போயின? நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரால் நசுக்க முடியவில்லையா? என்று கேள்வி எழுந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது:

""காந்தி எந்த ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு போராடவில்லையே! அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நண்பருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார் சர்ச்சில். இங்கே மெல்லிய தேகமாக தோன்றினாலும் காந்தியிடம் இருந்தது உடல் வலிமையும், அதனோடு சேர்ந்த வெளிப்பட்ட ஆன்ம பலமும் தான்.

"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று பொதுவாக வாழ்த்துவதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். இந்தப் பதினாறு பேறுகளைப் பட்டியலிடும் அபிராமி பட்டர், நோயின்மையை இதில் முதன்மையாகவும், "நுகர்ச்சி'யை இறுதியாகவும் குறிப்பிடுகிறார். இந்தப் பதினாறு பேறுகளில் முதன்மைப்படுத்தபட்டிருப்பது நோயில்லா உடம்பு. ஏன்? தேக நலம் சிறப்பாக இல்லாமல் மற்றைய பதினைந்து பேறுகளை ஒருவன் பெற முடியாது என்பதால்தான்.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் இதைத்தான் திருமந்திரத்தில் இப்படிச் சொல்கிறார்: "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'என்று.

மனிதர்களில் எல்லோரும் செய்வதையே தானும் செய்து செத்துப் போகிறவர்களும் இருக்கிறார்கள். எவரும் செய்யாததைத் தான் செய்து... மாறுபட்டு வாழ்ந்து, காலத்தால் அழிக்க முடியாத நிலையை அடைந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் நாம் எந்த வகையாக இருந்தாலும், உடல் நலம் பேணாமல் எதுவுமே சாத்தியமில்லை.

விடியற்காலையில் துயில் நீங்கி விழித்தெழுவது ஆரோக்கியத்தின் முதற்படி. "வைகறை யாமம் துயில் எழுந்து' என்று நம்மை வற்புறுத்துகின்றது நீதிநூல். வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவருமே விடியற்காலையில் விழித்தவர்கள்தானே? "மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' - (குறள்: 942) என்று உடல்நலத்திற்கு உன்னத வழி காட்டியிருக்கிறார் வள்ளுவர்.

தொண்ணூற்று ஆறு வயதான முதியவர் ஒருவர் இளைஞர்களுக்கெல்லாம் சவால்விடும் விதமாக இன்றும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். இதன் ரகசியம் குறித்து கேட்டபோது, அவர் சொன்னாராம், "படுத்து தூங்க மாட்டேன். இருந்து சாப்பிட மாட்டேன்' என்று. "படுத்து தூங்க மாட்டேன்' என்றால், தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கையைத் தேடிச் செல்வாராம். வராத தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்யமாட்டாராம் அந்தப் பெரியவர்.

"இருந்து சாப்பிட மாட்டேன்' என்றால், முன்னர் உண்டது வயிற்றில் ஜீரணமாகாமல் இருக்கும்போது, நேரமாகிவிட்டதே என்பதற்காக உண்ணவும் மாட்டாராம். உடல்நலத்தின் இரண்டு வரி சூத்திரத்திற்கு செயல்வடிவம் தந்தவர் அந்தப் பெரியவர்.

"செரிக்காத உணவும், எரிக்காத சக்தியும் சுடுகாட்டுத் தேரின் சக்கரங்கள்' , "மனிதனைத் தேடி மரணம் வருவதில்லை... மரணம் தேடியே மனிதன் போகிறான்' என்கிற கவிஞர் வைரமுத்துவின் அழுத்தமான வரிகள் உடல்நலத்திற்கு எதிரான நமது வாழ்க்கை முறையை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றன.

இது "கபசுர குடிநீர்' காலம். கரோனோ மனித இனத்தை அச்சுறுத்தவில்லை; கேலி செய்துகொண்டிருக்கிறது. உலகத்தில், நவீன வசதிகளால் அலுங்காமல் குலுங்காமல் பணிகள் முடிக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான விசயமல்ல. அது, நம் ஆரோக்கியத்தைப் பலிகடா ஆக்கி நமது முதுமைக்கால இம்சைகளுக்கு நாமே வழிவகுத்துக்கொள்கிறோம் என்பதே உண்மை.

"உடம்பு எப்படியிருக்கு?' என்று நம்மை யாரும் கேட்டுவிடக்கூடாது. அப்படி வாழ்ந்தால், வெற்றி நிச்சயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com