கூகுள் லாரிபேஜ்

கூகுள் லாரிபேஜ்

"நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவர் கூறியதுபோல், இணையத்தில் தகவல்கள் தேடுவதற்கு "கூகுள் இன்றி எதுவும் இயலாது' என்று சொல்லும் அளவுக்கு நிறையத் தகவல்களைக் கொண்டிருக்கிறது கூகுள் வலைதளம்.


வெற்றியாளர்கள்!


"நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவர் கூறியதுபோல், இணையத்தில் தகவல்கள் தேடுவதற்கு "கூகுள் இன்றி எதுவும் இயலாது' என்று சொல்லும் அளவுக்கு நிறையத் தகவல்களைக் கொண்டிருக்கிறது கூகுள் வலைதளம். அது இன்றைய உலகில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியிலும் 23 இலட்சம் தடவைகள் ஏதாவது ஒரு தகவலுக்காக உலகெங்கும் இணையத்தில் மக்கள் தேடுகின்ற உலகின் நெ.1. இணைய தேடல் தளமாக கூகுள் நீடித்து வருகிறது.

இந்த கூகுளின் தோற்றம், வளர்ச்சி குறித்து பார்ப்போம். கூகுள் நிறுவனர் லாரிபேஜ் 1973- இல் அமெரிக்காவில் மிச்சிகன் அருகில் உள்ள லான்சிங் என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை கார்ல் விக்டர் பேஜ் கணினி அறிவியல் பேராசிரியராக மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தாயார் குளோரியாவும் ஒரு கணினி ஆசிரியரே. ஆகவே, இவர் பிறந்தது முதலே வீடு முழுவதும் நிரவிக் கிடந்த கணினி புத்தகங்கள், கருவிகள் இடையில்தான் வளர்ந்தார். ஆகவே, கணினி அறிவியல் தொழில்நுட்ப உணர்வு இவரது உடலில் ஊறித் திளைத்துக் கிடந்தது.

பள்ளிப் பருவத்தில் ஆறு வயதிலேயே வீட்டுப் பாடங்களை அன்றைய ஆரம்ப நிலையில் இருந்த வேட்பிராசசர் என்ற சிறு கணினியில் செய்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற பின் கணினி துறையில் தொழில் முனைவோர்கள் அதிகமாக உருவான உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்ட போதுதான் கூகுளின் முதல் விதை உருவானது.
1990-களில் இணையம் என்னும் உலகளாவிய வலைப்பின்னல் தோன்றி அசுர வேகத்தில் வளர்ந்து வந்தது. அப்போது யாகூ, ஆல்டா விஸ்டா, அமெரிக்கா ஆன்லைன் போன்ற ஏராளமான வலைதளங்கள் இணையத்தில் தேடுபொறிகளாக இருந்தன. ஆனாலும், அளவற்ற வலைதளங்களில் தரவுகளைத் தேடி எடுத்தபோது பல்வேறு வகையான தகவல்கள் திரும்பத் திரும்ப வந்ததேயொழிய அவற்றில் சிறந்ததை, முதன்மையானதைக் கண்டறிந்து வரிசைப்படுத்தி வழங்கும் தொழில்நுட்பம் இல்லாமல் இருந்தது.
இந்த இடைவெளியை நிரப்ப லாரிபேஜ் முயன்றார். இவரது ஆராய்ச்சியில் இவருடன் இணைந்து களத்தில் இறங்கியவர் செர்ஜி பிரின் என்ற இவருடன் படித்த ஆராய்ச்சியாளர்.

இவர்கள் இருவருமே கூகுளின் இணை நிறுவனர்கள் ஆவார்கள். இணைய வலைதளங்களில் ஊடுருவிச் சென்று அவற்றைச் சிலந்திவலை போன்று ஒன்று சேர்த்துத் தொகுத்தனர். ஏறக்குறைய ஏழரை கோடி இணைய வலைதளங்களை இணைத்து பட்டியலிட்டு முதன்மையான, நம்பகமான தகவலை முதலில் வழங்கும் ஒரு க்ராலர் தொழில்நுட்பத்தை இருவரும் கண்டு பிடித்தனர். அதற்கு "பேக்ரப்' என்று ஆரம்பத்தில் பெயரிட்டனர். இவர்கள் கண்டுபிடித்த "பேஜ்ரேங்க் அல்காரிதம்' என்ற தொழில்நுட்பம் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேடன்ட் காப்புரிமை பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாரிபேஜ், செர்ஜி பிரின் ஆகிய இருவரது கண்டுபிடிப்பையும் செயல்படுத்தி, ஒரு தொழில் நிறுவனமாக உருவாக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் நிதி தேவைப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் அவர்களுக்கு கை கொடுக்க சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனமும், அமேசான் ஜெஃப் போஸ், ராம்ஸ்ரீராம் என்ற தொழிலதிபர் போன்ற சிலர் முன் வந்தார்கள் என்பதால் கூகுளின் தொடக்கம் சாத்தியமானது.

அந்நிறுவனத்திற்கு பொருத்தமான பெயரை வைக்க எண்ணியபோது 1 என்ற எண்ணைத் தொடர்ந்து 100 பூஜ்யங்கள் சேர்ந்தால் அதை அழைக்கும் சொல்லான "கூகோல்' என்ற ஆங்கிலச் சொல்லைத் தேர்வு செய்தனர். அதில் சிறிய மாற்றம் செய்து "கூகுள்' என்று பெயரிட்டு பதிவு செய்தனர். இன்று வரை அப்பெயரே சில உருவ, நிற மாற்றங்களுடன் நிலைத்து நிற்கிறது.

1998 - செப்டம்பரில் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக கூகுள் முறையாகத் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டே அமெரிக்க இணைய தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் இது நிலையாக நிறுவப்பட்டது. கைதேர்ந்த கணினி தொழில்நுட்ப நிபுணர்களைச் சேர்த்தும் தேடல்முறைகளில் நவீனத்துவத்தையும், புதுமைகளையும் நுழைத்தும் கூகுள் படிப்படியாக மக்கள் விரும்பும் தேடல் இணைய தேடல் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது.

2005- இல் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் இதன் பங்குகள் முதன்முதலில் விற்பனை செய்யப்பட்டன. 52 பில்லியன் டாலர்களுக்கு பங்குகள் விற்பனை ஆகி லாரிபேஜ், செர்ஜிபின் ஆகிய இருவரும் இளம் வயது பில்லியனர்கள் ஆனார்கள். அடுத்த நிலையில் படிப்படியாக பல துணை நிறுவனங்களை கூகுள் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கூகுளுடன் முதலில் இணைந்து வளர்ச்சி பெற்ற முக்கிய இணைய நிறுவனம் "யூடியூப்'.

எழுத்து வடிவில் தன் கருத்துக்களை, உணர்வுகளை வெளிப்படுத்தி வந்த மனிதர்கள் இணையத்தில் ஒளி வடிவில் யூ டியூப்பில் அவற்றை வெளிப்படுத்த தொடங்கினர். யூ டியூப் காணொலிகள் மிகவும் பிரபலம் ஆனதும் 2006- இல் அந்நிறுவனத்தை கூகுள் வாங்கியது. இப்போது உலகெங்கும் இணைய தேடல்களில் 27% யூ டியூப்பில்தான் நடைபெறுகிறது. குறிப்பாக, திரைப்படம், பாடல்கள், செய்திகள் போன்ற பல்வகைகள்.

ஆண்டி ரூபன் என்ற கண்டுபிடிப்பாளர் உருவாக்கிய "ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பத்தை கூகுள் அதன் தொடக்கத்திலேயே 18 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. ஸ்மார்ட் ஃபோன் துறையில் பலவகை தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு இப்போது உலகில் இயங்கிவரும் கையடக்க செல்லிடப்பேசிகளில் 70% ஆண்ட்ராய்டு செயலியே இயங்கி வருகிறது. அலைபேசி துறையில் மோட்டாரோலா நிறுவனத்தையும் வாங்கி கூகுள் இணைத்துக் கொண்டது. இந்தியாவில் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

அத்துடன், 2005- ஆம் ஆண்டில்கூகுள் மேப் என்ற நிலப்பட தகவல்கள் தரும் அமைப்பை கூகுள் நிறுவனம் உருவாக்கியது. செயற்கைக்கோள்கள் மூலம் இந்த பூமியின் அனைத்துப் பகுதிகளையும் படம் பிடித்து பொதுமக்கள் தேவைக்கு உதவும் வகையில் பலவிதமான வசதிகளுடன் கூகுள் அளித்து வருகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குப் போகும் வழிகள், 360டிகிரி கோண தோற்றம், அடிக்கடி பயன்படுத்தும் இடங்களைக் குறித்து வைத்து நினைவுபடுத்தல், சாலைகளில் நெரிசல் உள்ள பகுதிகளை அடையாளமிடல் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. ஊபர், ஓலா போன்ற வாடகை வாகன சேவைகளுக்கும், வாகனங்களில் பயணம் செய்ய சாலை வழிகளை எளிதாகத் தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது. கூகுள் மேப்பில் புதிய அடையாளங்களைச் சேர்த்தல், தவறானவற்றை நீக்குதல் ஆகியவையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இணைய வழி கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற பல மின்னஞ்சல் முகவரிகள் இருந்தபோதிலும் ஜி மெயில் அளிக்கும் வசதிகள், எளிமை, தொடர்புடைய நபர்களைப் பற்றிய தகவல்களை அதிக அளவில் சேமிப்பது போன்ற பலதரப்பட்ட வசதிகளால் ஜி மெயில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் மின்னஞ்சலாக உருவெடுத்துள்ளது.

கூகுளில் ஒரு சொல்லைத் தேடும்போது அதற்கு விளக்கம் காட்டப்படும் இடத்திற்கு அருகிலேயே அச்சொல் குறிக்கும் பொருளை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் வருமாறு லாரிபேஜ் அதன் பக்கத்தை வடிவமைத்தார். இது நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. கூகுளின் வருமானத்தில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் கிடைக்கிறது.

இங்கிலாந்திலிருந்து டீப்மைண்ட் என்ற நிறுவனத்தை வாங்கி கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகிறது. கூகுள் பிளே, ஆவணங்கள், கூகுள் மூலம் பணப்பரிமாற்றம் போன்ற பல்துறைகளில் இயங்கியும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வாங்கியும் இணைத்தும் இணைய உலகில் தனது முதலிடத்தை நிலைநிறுத்தி வருகிறது. கூகுள் வைஃபி என்ற பொது இடங்களில் இணைய டேட்டா வசதிகள் நூற்றுக்கணக்கான இரயில் நிலையங்கள், பொது இடங்களில் இந்தியாவிலேயே வழங்கப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு ஃபோன்களில் கூகுள் உதவியாளர் என்ற செயலியை இயக்கினால் நாம் வாயால் சொல்லும் ஆணைகளை அது நிறைவேற்றி வைக்கிறது.

கூகுள் பிளே என்ற அமைப்பில் மொபைல் ஃபோனில் நிறுவக்கூடிய செயலிகளை(ஆப்) தொகுத்து வழங்குகிறது. குரோம்காஸ்ட் என்ற செயலியின் மூலம் நம் கையில் உள்ள செல்பேசியில் ஓடுகின்ற யூ டியூப் காணொலிகள், திரைப்படங்களை ஆண்டிராய்ட் தொலைக்காட்சிகளிலும் மாற்றி ஓட வைக்கும் தொழில்நுட்பத்தையும் கூகுள் உருவாக்கி உள்ளது.

பெருகி வரும் கூகுளின் தரவுகளைச் சேமித்து வைக்கவும் தொகுத்து தருவதற்கும் உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்கள், சர்வர்களை நிறுவியுள்ளது. கூகுள் குழுமத்தின் பல நூறு பிரிவுகளுக்கும் தாய் நிறுவனமாக "ஆல்ஃபபெட்' என்ற நிறுவனத்தை 2015- இல் உருவாக்கி அக்குழுமத்தின் நிர்வாகப் பராமரிப்பை சிறப்புடன் நடத்தி வருகின்றனர்.

அதுவரை இணைய இலச்சினைகளில் முதலிடத்தில் இருந்த ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் அதிக மதிப்பு மிக்க பிராண்ட் என்ற இடத்தை கூகுள் 2017- இல் பிடித்தது.

மதுரையில் பிறந்த தமிழர் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் 2004-இல் சேர்ந்தார். கூகுள் டிரைவ், குரோம் போன்ற செயலிகளை மேம்படுத்தி படிப்படியாக வளர்ந்து கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டிற்கும் தலைமை நிர்வாக அலுவலராக இருந்து வருகிறார். எதிர்காலத் தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் நிறுவனங்களின் பங்களிப்பு மனித வாழ்க்கையை பலவழிகளில் மேம்படுத்தும் என்பது உறுதி.

உலகின் பல நாடுகளில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ள கூகுள் சமீபத்தில் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் அதாவது 75,000 கோடி ரூபாய்களை கல்வித்துறை, வணிகம், சிறு-குறு நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பல்துறைகளில் முதலீடு செய்ய உள்ளது என்று அதன் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com