அரசு ஊழியராக ரோபோ!
By அ.சர்ஃப்ராஸ் | Published On : 21st July 2020 06:00 AM | Last Updated : 21st July 2020 06:00 AM | அ+அ அ- |

பணிச்சுமைகளைக் குறைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது ரோபோ.
தொழிற்சாலைகள், பாதுகாப்பு துறை, வங்கிகள், ஹோட்டல்கள் வரை இதன் செயல்பாடு விரிவடைந்துள்ளது.
நேரம் தவறாமை, சொன்னதை மட்டும் கேள்விகள் கேட்காமல் செயல்படுத்துவது ஆகியவற்றால் வெளிநாட்டினர் பல்வேறு துறைகளில் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போதைய கரோனா தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றைப் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கவும், ரோபோக்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்தகட்டமாக ரஷ்யாவில் பெண்ணைப் போன்று தயாரிக்கப்பட்ட ரோபோ அரசு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு அசல் பெண்ணைப் போன்று நீண்ட கூந்தலுடன் காணப்படும் இந்த ரோபோ, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரம் நகரத்தில் அரசு ஊழியராகப் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
ரோபோவின் முகத்தில் உள்ள உதடு, புருவம், கண்கள் ஆகியவை மனிதர்களைப் போன்று சுமார் 600 முகஜாடைகளில் ஈடுபடும் திறன் படைத்தது.
ஆயிரக்கணக்கான ரஷிய பெண்களின் முகஜாடைகளை வைத்து அந்த நாட்டு பெண்ணைப் போன்றே இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியரைப் போன்று உடையணிந்து அமர்ந்திருக்கும் இந்த பெண் ரோபோ, தன்னிடம் வருபவர்களின் அனைத்து தரவுகளையும் சோதனை செய்து அவர்கள் மீது எந்தவித குற்ற வழக்குகள், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் பதிவாகவில்லை என்று அரசு சார்பில் நற்சான்றிதழை அளிக்கிறது. அதற்காக இந்த ரோபோ பிரிண்டர், ஸ்கேனருடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுபோரிடம் கேள்விகள் எழுப்பி பதிலைப் பெறுவதிலும் இந்த ரோபோ படுசுட்டி.
ரஷியா செல்பவர்கள் அரசு பணியில் உள்ள பெண்கள் ரோபோவா, மனிதரா என்று தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.