உடனடியாக ஒரு மருத்துவமனை!

நாளுக்குநாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடனடியாக ஒரு மருத்துவமனை!

நாளுக்குநாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே உள்ள மருத்துவ மனைகளில் இடம் போதவில்லை. பல கல்வி நிறுவனங்களை கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ முகாம்களாக மாற்றினாலும் அவையும் போதாத நிலையே உள்ளது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும்விதமாக சென்னை ஐஐடி- இல் பயின்ற மாணவர்கள் உடனடியாகப் பொருத்தப்படுகிற மருத்துவமனைகளைஉருவாக்கியிருக்கின்றனர்.

"மாடுலஸ் ஹவுசிங்' என்ற நிறுவனத்தைநடத்தும் அவர்கள், அண்மையில் கேரளமாநிலம் வயநாடு மாவட்டத்தில் இந்த மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கின்றனர். நாடு முழுவதும் நல்ல வரவேற்பை அவர்களின் இந்த முயற்சி பெற்றிருக்கிறது. இது பற்றி மாடுலஸ் ஹவுசிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ரவிச்சந்திரன் மற்றும் கபிலனிடம் பேசினோம்.

அவர்கள் கூறியதிலிருந்து...

""2015 - ஆம் ஆண்டு சென்னையில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்தது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மூழ்கிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வீடிழந்து தவித்தார்கள். அவர்கள் தங்குவதற்காக உடனடியாக வீடு கட்டித் தரவும் முடியாது. அப்போது எங்கள் மனதில் உதித்ததுதான் உடனடியாகப் பொருத்தக் கூடிய வீடுகள். எட்டுப் பேர் கொண்ட எங்கள் குழு, இந்த மருத்துவமனையை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களான எங்களுக்கு, இது குறித்த வழிகாட்டுதல்களை, உதவிகளை சென்னை ஐஐடி அளித்தது. அதன் உதவியுடன் 2018 - இல் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய, உடனடியாகப் பொருத்தக் கூடிய வீடுகளை உருவாக்கினோம். வழக்கமாக எல்லா வீடுகளிலும் உள்ள பாத்ரூம், சமையல் ரூம், படுக்கையறை போன்ற எல்லா வசதிகளும் இந்த வீடுகளில் இருக்கின்றன. எங்களுடைய இந்த வீடுகளை டாட்டா, எல்அன்ட்டி ஆகிய நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்திக் கொண்டன. பெரிய கட்டுமான நிறுவனங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தங்க இந்த வீடுகள் பயன்பட்டன.

தற்போது கரோனா தாக்குதலினால் எல்லா மருத்துவமனைகளிலும் இட நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. புதிய புதிய இடங்களில் எல்லாம் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டாலும், அதிகரித்துக் கொண்டே இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் மருத்துவமனைகள் இல்லை. உடனடியாகப் பொருத்தும் வீடுகளை நாங்கள் தயாரிக்கும் நாங்கள், உடனடியாகப் பொருத்தக் கூடிய மருத்துவமனையை உருவாக்கும் முனைப்போடு செயலில் இறங்கினோம்.

அப்படி உருவாக்கப்பட்ட 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத்தான் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள வரதூரில் பொருத்தினோம்.

இந்த மருத்துவமனையின் மருத்துவ தொழில்நுட்பப் பகுதிகளை, திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ர திருநாள் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிகல் சயின்ஸஸ் அண்ட் டெக்னாலஜி ஆய்வு செய்து சான்றிதழ் மற்றும் அனுமதி வழங்கி உள்ளார்கள். உதாரணமாக ஓர் ஐசியூ எப்படி இருக்க வேண்டும், என்னவெல்லாம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற வரையறைகளுக்குப் பொருந்தும்விதமாக எங்கள் மருத்துவமனை உள்ளதா என்று அவர்கள் ஆய்வு செய்தனர். இதுபோன்று பிறவற்றையும் ஆய்வு செய்தார்கள்.

ஐந்தாக மடித்து எடுத்துச் செல்லப்படக் கூடிய இந்த மெடிகேப் மருத்துவமனையை நான்கு பேர் இரண்டு மணி நேரத்தில் ஓரிடத்தில் பொருத்திவிடுவார்கள். இதில் மருத்துவப் பணியாளர்கள் தங்குவதற்கு தனியாக ஒரு பகுதி உள்ளது. நோயாளிகளை மருத்துவர்கள் சந்தித்து சோதித்துப் பார்க்க இன்னொரு பகுதி உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் தங்க ஒரு பகுதியும், அவசரச் சிகிச்சைப் பிரிவாக ஒரு பகுதியும் உள்ளது.

40 அடி நீளம் 20 அடி அகலம் உள்ள இந்த மருத்துவமனையின் குறிப்பிடத்தக்க அம்சம், இது நெகடிவ் பிரஷர் தொழில்நுட்பத்தில் இயங்குவதுதான். மருத்துவமனையின் ஒரு பகுதியில் உள்ள காற்று வென்டிலேட்டர்கள் மூலம் வெளியேற்றப்படும். வெளியேற்றப்படுவதற்கு முன்பு காற்றிலுள்ள கிருமிகள் வடிகட்டப்படும். மருத்துவமனையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நோய்க் கிருமிகள் உள்ள காற்று செல்லாது.

கேரளாவில் வயநாடு பகுதி அடிக்கடி புயல் காற்று, மழையால் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அதற்கேற்றவிதத்தில் வலிமையான மேற்கூரையை பொருத்தியிருக்கிறோம். துருப்பிடிக்காத ஸ்டீலால் செய்யப்பட்ட இந்த மருத்துவமனை 3 டன் எடையுள்ளது. தரை பிளைவுட்டால் உருவாக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகள், வெஸ்டர்ன் டாய்லெட்ஸ், பெரிய தொழில்நிறுவனங்களில் இருப்பதைப் போன்ற காற்றை வெளித்தள்ளும் மின்விசிறிகள் இந்த மருத்துவமனையில் உள்ளன. 100 படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்காலத் திட்டம்.

எங்களுடைய இந்த மெடிகேப் மருத்துவமனைக்கு நிறைய வரவேற்பு உள்ளது. மேகாலயா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இந்த மருத்துவமனையைத் தயாரித்துத் தர கேட்டிருக்கிறார்கள்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தனது சுட்டுரைப் பக்கத்தில் எங்களின் பணியைப் புகழ்ந்திருக்கிறார்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com