குரூப் - 1 தேர்வு: மாற்றங்கள் அவசியம்! (03/03/2020)
By DIN | Published On : 03rd March 2020 08:26 AM | Last Updated : 03rd March 2020 08:26 AM | அ+அ அ- |

சென்ற இதழ் தொடர்ச்சி...
ஓய்வு பெற்ற பாராளுமன்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் என்.எம்.பெருமாள் தொடர்ந்து நம்மிடம் கூறியதாவது:
"இந்தியாவில் மாநில அரசு வேலைகளுக்கு தாய்மொழியும் தேர்வின் ஒரு பகுதியாக விளங்கும். அநேக மாநிலங்களில் இந்தி கண்டிப்பாக எழுத்துத் தேர்வின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. சமீபத்தில் அசாம் மாநிலத்திலும் 10- ஆம் வகுப்பு வரை அசாமில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழில் ஓர் எழுத்துக் கூட பள்ளிகளில் படிக்காதவர் தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
எனவே குரூப்-1 முதன்மைத் தேர்விலும் பொதுத்தமிழ் என்ற ஒரு தாள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இத்தேர்வு 10-ஆம் வகுப்பு நிலையில் இருக்க வேண்டும். ஆனால் இதை ஒரு தகுதித்தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.
கட்டுரை எழுதுவது என்பது மத்திய அரசின் பல்வேறு நிலை தேர்வுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அரசு அதிகாரிகள் பல நேரங்களில் அரசுப்பணியில் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இந்நேரங்களில் சிந்தித்து திறனாற்றும் செயல்திறன் நிறைந்த அளவில் வேண்டும். இதற்கு கிட்டத்தட்ட முன்பின் தெரியாத தலைப்புகளில் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவுகளிலோ கட்டுரை எழுத பயிற்சி அளிப்பது தகுந்த திறனை வளர்க்கும்.
கட்டுரை என்பது விளக்கமான விடை என எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கித் தேர்வுகளில் வெறும் கொள்குறி வகையில் மட்டுமே தேர்வு நடத்தி வந்தார்கள். தேர்வு பெற்றவர்களில் அநேகருக்கு கோர்வையாக ஓரிரு பத்திகள் கோப்புகளில் எழுத முடியவில்லை. எனவே மத்திய அரசும் வங்கிகளும் நடத்தும் தேர்வுகளில் விளக்கவுரை வடிவில் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்காகவே தனியாக ஒரு தாளை ஒதுக்கி விட்டார்கள்.
எனவே கட்டுரை வடிவில் இளைஞர்கள் எழுதப் பழகிக் கொண்டால் அது பல்வேறு துறைகளில் அவர்கள் முன்னேற வாய்ப்பாக இருக்கும். ஆகவே குரூப் - 1 தேர்வில் ஒரு கட்டுரைத்தாளும் இருப்பது மிகவும் நல்லது.
தற்பொழுது ஐ.ஏ.எஸ் தேர்வில் மூன்று மணிநேரத்தில் இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும்.
பொது ஆங்கிலம் எப்படித் தகுதித் தேர்வாக இருக்க வேண்டும் என முந்தைய பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதே மாதிரி கட்டுரைத்தாளும் ஒரு தகுதித் தேர்வாக அமையலாம்.
பொதுவாக முன்பின் தயாராக இல்லாத நிலையில் பக்கம் பக்கமாக ஒரு தலைப்பில் கட்டுரை எழுதுவது என்பது எளிதான காரியம் அல்ல. எனவே தகுதித் தேர்வில் கட்டுரையில் குறைந்தது 25 விழுக்காடு எடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். விருப்பப் பாடங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் விருப்பப் பாடங்களின் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
1970 - களில் ஐ.பி.எஸ்-க்கு இரண்டு விருப்பப்பாடங்கள், அஞ்சல்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய அரசு சேவைகளுக்கு மூன்று விருப்பப்பாடங்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை சேவைக்கு ஐந்து விருப்பப்பாடங்கள் என்றிருந்தன.
1979 - ஆம் ஆண்டிலிருந்து கடந்த சில ஆண்டுகள் வரை நான்கு தாள்களைக் கொண்ட இரண்டு விருப்பப்பாடங்கள் இருந்தன. இன்றைய நிலையில் இரண்டு தாள்களைக் கொண்ட ஒரு விருப்பப்பாடம் உள்ளது.தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளிலும் விருப்பப்பாடங்கள் நிறைந்த அளவில் இருந்த காலங்கள் உண்டு. 1970-களில் குரூப் - 1,2,3 என இம்மூன்றுக்குமே குறைந்தது மூன்று விருப்பப்பாடங்கள் எடுக்க வேண்டியிருந்த நிலை இருந்தது.
குரூப் - 3 என்பது அக்காலத்தில் கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர் போன்ற பதவிகளுக்குத் தெரிவு செய்வதற்கான தேர்வாகும். மூன்றாம் நிலைத் தேர்வுக்கே விருப்பப்பாடங்கள் இருந்தன. இன்று முதல் நிலைத் தேர்வுக்குக்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் குரூப்-1 தேர்வு ஐ.ஏ.எஸ் தேர்வினை அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளது. அம்மாநில குரூப்-1 தேர்வில் இரண்டு தாள்களைக் கொண்ட ஒரு விருப்பப்பாடம் அமைந்துள்ளது.
விருப்பப்பாடம் குரூப்-1 தேர்வில் அமைவது தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெருந்துணையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சிவில் என்ஜினியரிங்கை எடுத்துக் கொள்வோம். ஓரிரு ஆண்டு
களாக குரூப்-1 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் சிவில் இன்ஜினியரிங் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தால் அது ஐ.ஏ.எஸ் இந்திய வனத்துறை சேவைத்தேர்வு, கேட் தேர்வு, இந்திய பொறியியல் சேவைத் தேர்வு போன்ற தேர்வுகளில் வெற்றி பெற வசதியாக இருக்கும்.
குரூப்-1 சேவைகள் கிடைக்காவிட்டாலும், நநஇ நடத்தும் இளநிலை பொறியாளர் தேர்வு, ரயில்வே நடத்தும் பல்வேறு நிலை சிவில் என்ஜினியரிங் தேர்வுகளுக்கும் பேருதவியாக இருக்கும். இது போன்ற பல்வேறு விருப்பப்பாடங்களை எடுப்பவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டாலும் மற்ற மாநில, மத்திய அரசு பதவிகள், ஆசிரியத் தொழில் போன்ற தொழில்களுக்கு வரும்பொழுது ஆழ்ந்த பாடப் புலமையுடன் வருவார்கள். இது ஒட்டு மொத்தமாக தமிழகத்துக்கே நன்மை பயக்கும்.
குரூப்-1 தேர்வு என்பது தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தேர்வினால் நிரப்பப்படும் பதவிகள் தமிழ்நாடு அரசின் ஊதிய நிலைகளில் கீழிருந்து 22-வது நிலையில் உள்ளது. படிகள் இல்லாத ஆரம்ப ஊதியமே ரூ.56,000-ஆக உள்ளது. எனவே இத்தேர்வு மிக எளிதாக இல்லாமல் சற்று கடினமாக இருந்தால் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைகளைப் பெற உதவியாக இருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள பொதுத்தமிழ்,பொது ஆங்கிலம், கட்டுரை,விருப்பப் பாடபகுதி தாள்களை போட்டித் தேர்வுத் தாள்களாக அமைவதற்குப் பதிலாக தகுதித்தேர்வுகளாக அமையலாம். ஒதுக்கீடுகளின் அடிப்படையில் 15%(பழங்குடியினர்), 20% (தாழ்த்தப்பட்ட பிரிவினர்), 25%(மிகப்பின்தங்கிய வகுப்பினர்), 30% (பின் தங்கிய வகுப்பினர்), 35% (பொதுப் பிரிவினர்) என்று தகுதித் தேர்வு மதிப்பெண்களை தமிழக அரசும், தமிழ்நாடு தேர்வாணையமும் முடிவு செய்யலாம்.
குரூப்-4 தேர்வை ஆண்டுதோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். ஆனால் குரூப்-1 தேர்வை பொதுவாக இரண்டு லட்சம் இளைஞர்களே எழுதுகின்றனர். (2019- ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வை (முதல் நிலை) இரண்டே கால் லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள்) இந்த இரண்டு லட்சம் தேர்வர்களை சற்று ஆழ்ந்த புலமை உடையவர்களாக ஆக்குவது நல்லது.
கல்வியில் உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. தமிழக இளைஞர்கள் அகில இந்திய அளவில் கொடி கட்டிப் பறக்க மேலே கூறப்பட்ட மாற்றங்கள் வழிவகுக்கும். தமிழக அரசும் தமிழக தேர்வாணையமும் மாற்றங்களைக் கொண்டு வந்தால் நலம் பயக்கும்'' என்றார் என்.எம்.பெருமாள்.
- வி.குமாரமுருகன்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...