சிற்பக்கலைத்துறை: இவ்வளவு வேலைகளா!
By DIN | Published On : 03rd March 2020 10:05 AM | Last Updated : 03rd March 2020 10:05 AM | அ+அ அ- |

தகவல் தொழில்நுட்பப் படிப்பில் பட்டம் பெற்று ஏதேனும் பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து... முடிந்தால் வெளிநாட்டுக்குப் பறந்து சென்று... வாழ்க்கையில் "செட்டில்' ஆக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களின் நடுவே சிற்பக்கலையைக் கற்று அதில் தீவிரமாக ஓர் இளைஞர் ஈடுபட்டு வருகிறார்.
சென்னைக்கு அருகே உள்ள வேப்பம்பட்டு என்ற ஊரில் A Art studio என்ற ஒரு கலைக்கூடத்தை அவர் நடத்தி வருகிறார். சிலை வடிவமைக்கும் பணி அங்கு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த இளைஞருடன் சேர்ந்து பலர் சிலைகளை வடிவமைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பல்வேறு வகையான சிற்பங்கள் அங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த இளைஞர் சுரேந்திரநாத். நுண்கலையில் சிற்பத்துறையில் முதுநிலைப் பட்டம் (Master of Fine arts) பெற்றவர். அவரிடம் பேசியதிலிருந்து...
"சிற்பம் என்றதுமே எல்லாருக்கும் நினைவில் வருபவை கோயில் சிற்பங்களே. சிற்பக் கலை பயின்றால் என்ன வேலை வாய்ப்பு இருக்கப் போகிறது என்று இகழ்ச்சியாய் நினைப்பவர்களே அதிகம். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைக்குப் பொருந்தக் கூடிய பலவிதமான சிற்பக் கலை வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.
எனக்கு சிறுவயதிலிருந்தே சிற்பக் கலையில் ஆர்வம். காரணம், என் அண்ணன் கோபிநாத் சிற்பி கன்னியப்பனிடம் பயிற்சி பெற்று வந்தார். அதைப் பார்த்த எனக்குச் சிற்பக்கலையில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. நான் பத்தாம் வகுப்பு படிக்கிறபோதே சிற்பி கன்னியப்பனிடம் பயிற்சி பெறச் சென்றேன்.
பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தேன். எனது குருநாதர் சிற்பி கன்னியப்பன் தான் என்னை பிளஸ் டூ படிக்கச் சொன்னார். எனது அப்பா ஓவியர் மாரி ஆனந்த், எனது முயற்சிகளுக்குத் துணையாக இருந்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் சிற்பத்துறையில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றேன்.
சிற்பம் என்றதுமே நமக்கு கல்லில் வடிக்கப்பட்ட பாரம்பரிய சிற்பங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். கல்லை உளி கொண்டு செதுக்கும் முறையிலும் கூட தற்போது மாற்றங்கள் வந்துவிட்டன. நவீன கருவிகளைப் பயன்படுத்தி கற்சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
பாரம்பரிய கல் சிற்பங்கள் தவிர, களிமண் சிற்பங்கள், வெண்கலம், அலுமினியம் போன்ற உலோகங்களில் செய்யப்படும் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், மரத்தில் செதுக்கப்படும் சிற்பங்கள், சுதைமண் சிற்பங்கள் என நிறைய நவீனச் சிற்பங்களும் உள்ளன.
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்குத் தரப்படும் பரிசுக் கோப்பைகள் கூட ஒருவிதமான உலோகச் சிலையே. வீட்டுக்குள் உலோகங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் உள் அலங்காரங்கள் சிற்பக் கலையின் எல்லைக்குள் வருபவை தான். கட்டடங்களை அழகுபடுத்துவதற்காக சிமெண்ட், கற்களைக் கொண்டு உருவாக்கப்படுபவையும் சிற்பக் கலை சார்ந்ததே.
மரத்தைச் செதுக்கி உருவாக்கப்படும் மரச் சிற்பங்கள், மரக்கதவுகளை மிக நுட்பமாக அழகாகச் செதுக்கி அழகுபடுத்தும் பணி, கதவில் செப்புத்தகடுகளைப் பொருத்தி கதவை அழகுபடுத்தும் பணி எல்லாமும் சிற்பக் கலை சார்ந்த பணிகளே.
ஒரு திரைப்படம் எடுப்பதற்கு முன்பு - காட்சிகளைப் படம்பிடிப்பதற்கு முன்பு - ஸ்டோரி போர்டுகளை உருவாக்குவார்கள். அதில் சிற்பக்கலை பயின்றவர்களின் பங்கு உள்ளது. திரைப்படங்களில் வரக் கூடிய செட்களை ஆர்ட் டைரக்டர்களோடு சேர்ந்து உருவாக்குபவர்கள் சிற்பக்கலை பயின்றவர்களே.
திரைப்படம் போலவே விளம்பரப் படத்துக்கும் சிற்பக்கலை தெரிந்தவர்கள் தேவையாக இருக்கிறார்கள்.
அனிமேஷன் துறையில் குறிப்பாக முப்பரிமாண அனிமேஷன் துறையில் (3D Animation) அனிமேஷன்களை உருவாக்க களிமண் மாடல்களைச் செய்து தருபவர்கள் சிற்பக்கலை பயின்றவர்களே.
கட்டுமானத்துறையில் கட்டடத்தின் உள் அலங்கார வடிவமைப்புகளைச் செய்து தருவது, கட்டடத்தின் வெளிப்புறத்தை அழகாக வடிவமைப்பது (Elevation work) எல்லாவற்றிலும் சிற்பக் கலை கற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
பெரிய பெரிய ஹோட்டல்களின் முன்பகுதியில் சிற்பங்களைக் கொண்டு தோட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். செப்புத்தகடுகளால் செய்யப்பட்ட தாமரைப் பூக்கள் நிரம்பிய செயற்கைக் குளங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பெரிய திரையரங்குகளின் வாயிற்பகுதியில் அழகுக்காக சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
விளம்பரத்துக்காகக் கூட சிலைகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக எம்ஆர்எஃப் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் சிலையைச் சொல்லலாம். ஒரு டயரை ஒருவர் இருகைகளிலும் ஏந்தி நிற்பது போன்ற சிலைகளைப் பார்த்திருப்பீர்கள்.
கதவின் கைப்பிடிகளைச் செய்வதிலும் கூட சிற்பக் கலைஞர்களின் பங்கு இருக்கிறது. தனது ராசிக்குப் பொருத்தமான கைப்பிடியை உலோகத்தில் செய்யச் சொல்லி, கதவுகளில் பொருத்துபவர்களும் இருக்கிறார்கள்.
இவை தவிர, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றால் அதற்கு தரக் கூடிய கோப்பைகளை சிற்பக் கலைஞர்கள் உருவாக்கித் தருகிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கட்டுரை, பேச்சு போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளையும் வடிவமைப்பவர்களாக சிற்பக் கலை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
நுண்கலைக் கல்லூரிகள், ஆர்க்கிடெக்ட் கல்லூரிகள் ஆகியவற்றில் ஆசிரியர் பணியும் செய்யலாம்.
நான் ஆவடியிலுள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்கிறேன். தினமும் 2 மணி நேரம் வகுப்பு எடுக்கிறேன். பெரியபாளையத்திலுள்ள ஆர்க்கிடெக்ட் கல்லூரி ஒன்றில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் வகுப்பு எடுக்கிறேன்.
எனவே சிற்பக் கலை பயின்றவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.
சிற்பக் கலையைப் பயின்றவர்கள் தங்களுடைய பணியைச் செய்யும்போது முழுத்திறமையையும் பயன்படுத்திச் செய்ய வேண்டும். முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். வேலை என்று நினைத்துச் செய்யக் கூடாது. தொழில் பக்தி வேண்டும். யார் நமக்கு வேலை தருகிறார்களோ அவர்களுடை மனம் நிறைவடையும் விதமாக வேலை செய்து தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு இந்தக் கலையைக் கற்றுத் தந்த குருவின் மேல் பக்தி இருக்க வேண்டும்'' என்கிறார் சுரேந்திரநாத்.
- ந.ஜீவா
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...