மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 68: நோய்நாடி... நோய்முதல் நாடி!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவம் உட்பட பலதுறைகளில் விசாலமான அறிவுபூர்வமான வளர்ச்சி கண்டு, இலக்கணம் வகுத்தவர்கள் நாம்.
மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 68: நோய்நாடி... நோய்முதல் நாடி!


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவம் உட்பட பலதுறைகளில் விசாலமான அறிவுபூர்வமான வளர்ச்சி கண்டு, இலக்கணம் வகுத்தவர்கள் நாம். பிற்காலத்தில் வந்த திருவள்ளுவர், மருத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அருமையான குறளை வடித்திருக்கிறார்:

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

- திருக்குறள்

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவம் செய்ய வேண்டும்.

ஆனால், நவீன மருத்துவம் என்ன செய்கிறது, எப்படி அது பிரபலப்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நவீன மருத்துவத்தின் கவனம், அதன் தோற்றத்திலிருந்து இன்று வரை பலவிதமான நவீன மருந்துகளைப் பரிந்துரைப்பதன் மூலம் "நோய்களின் அறிகுறிகளுக்கு சிகிச்சை' அளிப்பதாகவே உள்ளது. உண்மையான விஞ்ஞான அர்த்தத்தில், ஒரு நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் பெரும்பாலும் சிகிச்சையளிப்பது விவேகமற்றது. சிகிச்சைக்கும் (TREATMENT), நோய் குணமாவதற்கும் (CURE) முற்றிலும் வித்தியாசம் இருக்கிறது. நோயின் மூல காரணத்தை அறிந்து அதை குணப்படுத்தாத எந்த மருந்தும் நோயின் அறிகுறிக்கான சிகிச்சையே தவிர, அது உண்மையான நோயை உருவாக்கிய காரணிகளை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அல்ல.

ஒரு மருந்தைக் கொடுத்து, அந்த மருந்தினால் நோய் குணமாகிவிட்டது என்ற நிலை வருமானால், அது நோயைக் குணமாக்கும் மருந்து. நோயை குணமாக்காத எந்த மருத்துவத்தாலும் எவ்விதப் பலனும் இல்லை. அப்போது தான் மாற்று மருத்துவத்திற்கு, மருந்தில்லா மருத்துவத்திற்கு நாம் செல்ல வேண்டும். இதை எப்படி தீர்மானிப்பது- முடிவெடுப்பது?

ஓர் உதாரணத்தை நாம் பார்க்க வேண்டும்.

மாட்டு வண்டியில் பூட்டி, நன்றாக உழைக்கும் மாடு ஒரு நாள் படுத்துக்கொள்கிறது. அதனால் எழ முடியவில்லை என்றால் அது எதனால் படுத்திருக்கிறது என்று அறிந்து அதன் நோயைத் தீர்க்கும் மருந்து கொடுத்தால், அந்த நோய் சரியானதும் தானாக எழுந்து நடக்கும். ஆனால் அதை விடுத்து உடனடியாக மாட்டை வண்டியில் பூட்டி ஒட்ட வேண்டும் என்று சாட்டையால் அடித்தால், அது வலிதாங்காமல் எழுந்துவிடும். சாட்டையால் அடித்தால் மாடு எழுந்து நடக்கும் என்பது தான் சரியான நடவடிக்கை என்று நினைத்து, அது தான் நோய் தீர்க்கும் முறை என்று கருதுவதைப் போன்றதுதான், நோயின் அறிகுறிக்கு மருந்து கொடுப்பது. 100 மாட்டை சாட்டையால் அடித்தாலும், 1000 மாட்டை சாட்டையால் அடித்தாலும் அவை எழுந்து நடக்கும்; ஒடும். 1000 மாட்டிற்கு பரிசோதனை பண்ணிவிட்டோம்; எனவே சாட்டையடிதான் மாட்டிற்கு வந்த நோய்க்கு தீர்வு என்று சொல்வதை எப்படி ஏற்க முடியாதோ அப்படித்தான் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்வதையும் ஏற்க முடியாது. அதாவது, நோய்கேட்டு, அதன் அறிகுறிகேட்டு, நோயின் அறிகுறியை நீக்கும் மருந்து கண்டது நவீன மருத்துவம் என்ற எண்ணம் பெரும்பாலும் நிலவுகிறது. அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறியவேண்டும்.

அவசரச் சிகிச்சை தேவையான நேரத்தில், தேவையான அறுவைச் சிகிச்சை செய்து நோய் திரும்ப வரவில்லை என்ற நிலையிலும், விபத்தினால் ஏற்படும் ஊனம் குணமாகிற போதும், அந்த அறுவைச் சிகிச்சையினால் நல்ல பலன் கிடைக்கிறது என்றால், அறுவை சிகிச்சையில் நவீன மருத்துவம் தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சையினால் நிரந்தர ஊனம் ஏற்படும் நிலையில் இருக்கிறது என்றால் அதனால் எவ்வித பலனும் இல்லை. இது ஒரு சில அறுவை சிகிச்சைகளுக்குப் பொருந்தும்.
நவீன மருத்துவத்தில், சில நேரம் கூடுதலான அளவில் மருந்துகளைப் பரிந்துரைப்பதின் மூலம், பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை அது உருவாக்குகிறது. பெரும்பாலான நோயாளிகள் நவீன மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளிலிருந்து எந்த வித ஆரோக்கிய முன்னேற்றத்தையும் பெற மாட்டார்கள். ஆனால் மருந்து மட்டும் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒரு வேளை அது வாழ்நாளை அதிகரிக்கும். ஆனால் அது ஆரோக்கியமானதா?

ஒரு சில நோய்களுக்குக் கடைசி வரை மருந்து எடுக்க வேண்டும் வேறு வழியில்லை என்று எப்போது சொல்கிறார்களோ, அந்த மருந்துகள் நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்துகளாக இல்லை. குறிப்பாக சில நீரழிவு நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்து, மருந்து மாற்றி எடுத்து, அதன் அளவைக் கூட்டியும், குறைத்தும் எடுத்து வந்தும் நோய் குணமாகாமல், நோய் முற்றி அடுத்த, அடுத்த நிலைக்கு நோய் முற்றி கொண்டே செல்லுமே தவிர, அது குணமாவதில்லை என்ற நிலை காணப்படுகிறது. புகழ்பெற்ற கோச்ரேன் ஒத்துழைப்பின் (Cochrane Collaboration) இணை நிறுவநர் பீட்டர் கோட்ஷே, உலகத்திலேயே இதய நோய் மற்றும் புற்றுநோய்க்குப் பிறகு உலக அளவில் மரணத்திற்கு மிகவும் பொதுவான 3 -ஆவது காரணம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் (Prescribed Medicine) தான் என்று குற்றம்சாட்டுகிறார். நவீன மருத்துவம் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார்.

இங்கிலாந்தில், வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் குறைந்தது ஒரு மருந்திலும், கால் பகுதியினர் குறைந்தது மூன்று மருந்துகளையும் உட்கொள்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில், மருந்துகளின் பயன்பாடு 47% அதிகரித்துள்ளது. நவீன மருத்துவம் என்று அழைக்கப்படுவது உண்மையாயின், அது நோய் குணமாவதற்கான தீர்வுகளை அளிக்கிறது என்றால், மருந்து உட்கொள்ளும் மக்கள் தொகையில் இவ்வளவு பெரிய அதிகரிப்பு ஏன்? அவற்றிலும் பல மருந்துகளை ஏன் வாழ்நாள் முழுவதும் எடுக்கும் நிலை காணப்படுகிறது? பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஆரோக்கியமற்ற அதிகமான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் வயதான மக்கள் தொகைதான் ஒரு நல்ல அரசுக்கு அச்சுறுத்தலே தவிர, ஆரோக்கியமாக இருக்கும் வயதான மக்களுக்கு ஆகும் செலவு அல்ல.

பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை, அடுத்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிக அளவில் உயரும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நவீன வாழ்க்கைமுறையும், மருத்துவமும் உலகை எங்கே அழைத்துச் செலுத்துகிறது? வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நோய்களின் மூல காரணத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, மக்கள் நீண்டகால நன்மைக்கான ஓரளவு நோய் தீர்க்கும் வாய்ப்பை மட்டுமே வழங்கும் மருந்துகளை நாடுகின்றனர். அந்த நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளிலிருந்து சில பக்க விளைவுகளை அனுபவிக்கிறார்கள். மருந்துகளிலிருந்து சிறிய நீண்ட கால ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்காக அவர்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைகிறது என்று பலர் கூறுவதைக் காணலாம். நவீன மருத்துவ முறையை அதிகமாக நம்புவதே இதற்குக்
காரணம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தல், உண்ணா நிலை, எதிர்கால நோய்க்கான ஆபத்தை குறைப்பது மட்டுமல்லாமல் அது வாழ்க்கைத் தரத்தில் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது.

healthjournalism.org ஒரு தரவை பதிவு செய்திருக்கிறது, அதில் Public Citizen's Health Research Group இன் இயக்குநர் Dr. மைக்கேல் ஏ காரோமி M.D. சொல்கிறார்: ""பார்மா மருந்து கம்பெனிகள் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் செயல்பட்டதின் காரணமாக பல்லாயிரக்கணக்கான கோடிகளில் அபராதம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்கு, கடுமையான சட்டங்களை இயற்றி, அதை ஊழலுக்கு இடம் கொடுக்காமல் அமல்படுத்தினால் மட்டுமே நவீன மருந்துகளின் தவறான உபயோகம் தடுத்து நிறுத்தப்படும்'' என்கிறார். ஊழல் இல்லாமல் ஒரு காரியம் நடக்குமா, அது அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள், மக்களின் உணர்வுகளை அறிந்தவர்கள் நாட்டிற்கு தலைமை ஏற்றால் மட்டுமே சாத்தியம். சரி, அது நடக்கும் போது நடக்கட்டும். இப்போது மருந்துகள் எப்படி தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது நோய்க்கான மருந்து என்று நிரூபிக்கப்படாத மருந்துகளைச் சந்தைப்படுத்தி விற்பனையில் ஈடுபடுத்துதல், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு ஆஃப்-லேபிள் மருந்துகளை அறிமுகப்படுத்தி சந்தையில் விற்பது, மருந்தின் மனித பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கைகளை, எதிர்மறை தரவை வெளியிடத் தவறியது, மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை மறைத்து கூறுதல் போன்றவை என்று அறிக்கை கூறுகிறது.

1991-2017 - ஆம் ஆண்டில், நவீன மருந்துகளின் தவறான பரிந்துரை மற்றும் தவறான சந்தைப்படுத்துதலுக்கு மட்டும், அமெரிக்க ஃபெடரல் மற்றும் மாநில அரசுகள் இணைந்து, 412 மருந்து நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக சுமார் 39 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2.80 லட்சம் கோடி) அபராதம் விதித்திருக்கிறது. இந்த காலகட்டத்தில், கிளாக் சோஸ்மித்க்லைன் மற்றும் ஃபைசர் முறையே 7.9 பில்லியன் டாலர் (ரூ 56,000 கோடி ரூபாய் மற்றும் 4.7 பில்லியன் டாலர் (ரூ 33,000 கோடி ரூபாய்) நிதி அபராதங்களில் அதிக கட்டணம் செலுத்தியது - மேலும் வேறு எந்த நிறுவனத்தையும் விட அதிகமான அபராதத்தொகையை (முறையே 32 மற்றும் 34 மருந்துகளுக்கு) செலுத்தியவர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஃபார்மா நிறுவனங்களின் பல நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களைக் கைது செய்த வழக்குகளும் உள்ளன - எடுத்துக்காட்டாக, இன்சிஸ் என்ற மருந்து நிறுவனத்தின் நிறுவுநர், நிறுவனத்தின் ஃபெண்டானில் ஸ்ப்ரே, சப்ஸிûஸ பரிந்துரைத்ததற்கு ஈடாக லஞ்சம் மற்றும் கிக்பேக் கொடுத்ததாக 2016 மற்றும் 2017- இல் கைது செய்யப்பட்டார். இந்த சக்திவாய்ந்த ஓபியாய்டு புற்றுநோய் நோயாளிகளின் வலியைக் குறைப்பதற்கான சிகிச்சையளிப்பதற்காக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்த மருந்துகளை மற்ற நோயாளிக்களுக்கும் பரிந்துரை செய்தற்கு மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் கூட பணவலிமை கொண்ட மருந்து கம்பெனிகள் தங்கள் சக்தியை தவறாகப் பயன்படுத்தும் போது, சட்டத்தின் ஆட்சி கொண்டு அதைத் தடுக்க முடியவில்லை எனும்போது, இந்தியப் பாரம்பரிய மருத்துவம், இந்த பெரிய நவீன மருந்து நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட முடியுமா? கண்டிப்பாக முடியாது.
மூன்றாவதாக, சமீபத்திய ஆய்வுகளின்படி, அமெரிக்காவில் மருத்துவப் பிழைகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக ஆண்டுதோறும் 2.51 லட்சம் இறப்புகள் நடைபெறுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளன. மருத்துவப் பிழைகள் மரணத்திற்கு 3 - ஆவது முக்கிய காரணியாகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற வளர்ந்த நாடுகளை விட மருத்துவப் பிழை விகிதங்கள் அமெரிக்காவில் அதிகம். அதே நேரத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான மருத்துவப் பிழைகள் மட்டுமே பதிவாகி அது வழக்கிற்கு வருகின்றது.

மருத்துவப் பிழைகளால் ஒவ்வோர் ஆண்டும் 138 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுவதாக WHO எச்சரித்தது. ஒவ்வொரு ஆண்டும் 2.6 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் மருத்துவப் பிழைகளால் ஏற்படுகின்றன. நோயறிதலில் பிழைகள், மருந்து பரிந்துரைகள் மற்றும் சிகிச்சையில் பிழைகள் மற்றும் மருந்துகளின் பொருத்தமற்ற பயன்பாடு ஆகியவை பல நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள் என்று WHO நோயாளி-பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். நீலம் திங்க்ரா குமார் தெரிவிக்கிறார். பல மருத்துவமனைகள் அவர்கள் செய்த தவறுகளை மறைக்கின்றன. WHO அறிக்கை நடுத்தர மற்றும் குறைந்த பொருளாதார நிலை கொண்ட நாடுகளில் ஏற்படும் மருத்துவப் பிழைகளை மட்டுமே குறிக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 80% ஆகும். வளர்ந்த நாடுகளில் கூட, ஒவ்வொரு 10 நோயாளிகளில் ஒருவர் மருத்துவத் தவறுகளுக்குப் பலியாகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தவறான மருந்துப் பரிந்துரைகள் தொடர்பான பிழைகளுக்கு மட்டுமே உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு 42 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 3 லட்சம் கோடி) செலவாகின்றன.

உலகளாவிய அளவில் மேற்கண்ட அனைத்து கடுமையான குறைபாடுகள் இருந்தபோதிலும், 19ஆம் நூற்றாண்டில் கடந்த 200 ஆண்டுகளுக்குள் பிறந்த நவீன மருந்துவ முறை (ALLOPATHY) உலகெங்கிலுமுள்ள அனைத்து நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளையும் முறியடிக்கும் வல்லமை பெற்றிருக்கிறது. அதன் அறிமுகத்திலிருந்து, இன்றும் வரை கூட இது பல மருந்துகளைக் கண்டறிந்து நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சையை மட்டும் அதிகமாக நம்பியுள்ளது. நோயைக் குணப்படுத்தும் அளவிற்கு நவீன மருந்துகள் உருவாக்கத்தில் அதிகமாக முன்னேறவில்லை. ஒரு சில உயிர் காக்கும் மருந்துகளை தவிர.

மறுபுறம், பாரம்பரிய மருத்துவ முறைகள் பல ஆயிரம் ஆண்டுகளில் ஆரோக்கியமான மற்றும் வலுவான உலகத்திற்கும், பல ஆயிரம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தலைமுறைகளைக் காப்பாற்றுவதற்கும் பொறுப்பாக இருந்திருக்கிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கொள்ளை நோய்களும், இரண்டு உலக போர்களும் தான் நவீன மருத்துவத்தின் உலகளாவிய வீச்சிற்கு வித்திட்டன.

இன்றைக்கு நவீன மருத்துவம் இல்லை என்றால், உலகம் இல்லை என்று உலகம் நம்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது! ஆனால் நவீன மருத்துவமான அலோபதிக்கு முன்னர், தலைமுறை, தலைமுறைகளாக பாரம்பரிய மருந்துகள் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியுமா? முரண்பாடாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரிய மருத்துவத்தை "மாற்று மருந்து'என்று அழைக்கப்படும் நிலை இருக்கிறது. பன்னாட்டு மருந்துத் துறையின் பணவலிமைக்கும், சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரத்திற்கு இருக்கும் வல்லைமை பாரம்பரிய மருந்துகளை ஓரங்கட்டும் நிலைதான் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய மருத்துவமும், நவீன மருத்துவமும் எப்படி இணைந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்? அதற்கு இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com