முந்தி இருப்பச் செயல் - 23
By சுப. உதயகுமாரன் | Published On : 17th November 2020 06:00 AM | Last Updated : 17th November 2020 06:00 AM | அ+அ அ- |

"இளங்கன்று பயமறியாது' என்பதற்கிணங்க, இளைஞர்களாகிய நீங்கள் தகராறுகளைக் கண்டு ஓடி ஒளியமாட்டீர்கள். ஆனாலும் அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளைக் கைக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தகராறுகளை எதிர்கொள்ளும்போது, கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்:
முதலில், உங்களிடமே ஐந்து கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்:
இந்தத் தகராறில் எது என்னைக் கரிசனம் கொள்ளச் செய்கிறது?
இது எப்படி என்னைப் பாதிக்கிறது?
இது ஏன் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது?
எதிர்த்தரப்பைப் பற்றி நான் சந்தேகங்களையும், அனுமானங்களையும் கொண்டிருக்கிறேனா? அவை என்னென்ன?
இந்த நிலைமையை எது எனக்கு ஏற்புடையதாகச் செய்யும்?
இரண்டாவது, உங்களோடு தகராறு செய்பவர் நெருக்கமானவராக இருந்தால், அந்த உறவு முக்கியமானதாக இருந்தால், நேரடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுங்கள். அவரிடம் உங்களின் நோக்கங்களைத் தெளிவாக எடுத்துரையுங்கள். (இதனை நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன்; இந்த உறவு தொடர்ந்து நீடிக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன் போன்ற நேர்மறை வாக்கியங்களை, அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்).
மூன்றாவது, மேற்படி கருத்துப்பரிமற்றத்தின்போது உங்கள் உள்ளக்கிடக்கையை கோபம், வெறுப்பு, அச்சம் ஏதுமின்றி மென்மையான மொழியில் விவரித்த பிறகு, உங்கள் ஈடுபாடுகளை, இலக்குகளைத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டு, எதிர்த்தரப்பைப் பேச அனுமதியுங்கள். அவர் பேசும்போது இடைமறிக்காது, கவனமாகக் கேளுங்கள். அவருடைய ஈடுபாடுகளை, இலக்குகளைக் கண்டறியுங்கள். தேவைப்பட்டால் மட்டும், இரு தரப்பாரின் அனுமானங்களை, சந்தேகங்களை, விழுமியங்களை விரிவாக விவாதியுங்கள்.
நான்காவது, மேற்படி கருத்துப் பரிமாற்றத்தின் காரணமாக, உங்களிருவரிடையே ஒரு புதிய புரிதல் ஏற்பட்டால், அதனை மற்றவரிடம் சுருக்கமாக விவரித்து, சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஐந்தாவது, உங்கள் முன்னிருக்கும் பல தெரிவுகளைக் கண்டுணர்ந்து, ஒவ்வொன்றின் சாதக, பாதகங்களையும் ஆய்வு செய்யுங்கள். இவற்றுள் உங்களுக்கும், எதிர்த்தரப்புக்கும் ஏற்புடையதாக இருக்கும் குறிப்பிட்ட, தெளிவான, நியாயமான தீர்வைத் தேர்ந்தெடுங்கள்.
ஒருவேளை, நீங்கள் எதிர்கொள்வது சாதாரண குடும்ப, சமூக, பணியிடத் தகராறாக இல்லாமல், நுண்மங்களும், சிக்கல்களும், பகைமையும் நிறைந்த ஒரு நீண்டநாள் தகராறாக இருந்தால் என்ன செய்வது? அதேபோல, எந்தவிதமான நீதி நியாயங்களுக்கும் கட்டுப்படாத, ஒரு சமூகவிரோதியோடு எப்படிக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவது?
இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தகராறு கட்சிகள் துருவ நிலைகளுக்குத் தள்ளப்படுவதோடு, மனிதநேயம் மறுக்கப்படுவதும் நிகழ்கிறது. உங்களின் உயர்ந்த விழுமியங்களை, உன்னதமான அணுகுமுறைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒரு துருவம் நோக்கி உங்களை உந்தித்தள்ளும்போது, அந்த சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாதீர்கள்.
உங்கள் விழுமியங்களில் நீங்கள் உறுதியாக நிற்பது மிக முக்கியம்.
இப்போது உங்களுக்குத் தேவை பரிவுணர்வு, மென்முறை மற்றும் படைப்புத்திறன் எனும் மூன்று அம்சங்களே. இவற்றோடு சிக்கலான தகராறு ஒன்றை மாற்றியமைப்பதற்கு உரிய கால அவகாசமும், பொறுமையும், தொடர் முயற்சிகளும் அவசியம்.
எதிர்மறை உணர்வுகளுக்கு, குறிப்பாக கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
(குறள் 308)
பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவர் செய்தபோதிலும், கூடுமான வரை அவர் மேல் சினங்கொள்ளாதிருத்தல் நல்லது. கோபத்திற்குள்ளாகும்போது தவறான வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம்; அல்லது தவறான நடவடிக்கைகளைக் கைக்கொண்டு விடுகிறோம்.
யதார்த்தத்தில் கோபப்படாமல், கொதிப்படையாமல், அன்பின் வடிவமாய், அமைதியின் சிகரமாய் விளங்க, நாம் உணர்வற்ற கற்களோ, புற்களோ அல்ல; புத்தபிரானாய் உயர்ந்தவர்களும் அல்ல. கோபத்தை வெளிப்படுத்தும் தேவை எழுந்தால், ஒரு கடிதத்தை அல்லது அறிக்கையை எழுதுங்கள். அல்லது நெருங்கிய நண்பர்களிடம், உறவுகளிடம் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டித்
தீருங்கள்.
ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் கோபம் விபரீதமாய் வெடிக்க விட்டுவிடாதீர்கள்.
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
(குறள் 203)
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுகிறார் திருவள்ளுவர். பிறரைத் தண்டிக்கும் அல்லது பழிவாங்கும் உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு, தொடரும் இந்தப் பிரச்னையை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது பற்றி மட்டும் தொடர்ந்து சிந்தியுங்கள்.
ஒத்துழைக்காத ஒரு நபரோடு, ஒவ்வாத ஒரு சூழலோடு உழலும்போது, உங்கள் பொறுமையை பலவீனமாகவோ, பயந்தாங்கொள்ளித்தனமாகவோ எதிர்த்தரப்பு கருதினால், அது தவறான புரிதல் என்பதைத் தவறாமல் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்காக நீங்கள் எழுந்து நிற்பது, குரல்கொடுப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் ஆகும்.
எதிர்த்தரப்பு தனக்கு வேண்டியதைத் தான்தோன்றித்தனத்துடன் எடுத்துக் கொள்வதற்காகச் செய்யும் தகிடுதத்தங்களைக் கவனமாக அவதானியுங்கள். அதற்கு எக்காரணம் கொண்டும் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருங்கள். தேவைப்பட்டால் அதற்குத் தடை போடுங்கள்.
உங்கள் எதிர்வினை தீர்க்கமானதாக, ஆனால் தீயதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்னையின் நீடித்த நிலைத்த தீர்வுக்கு வன்முறை உதவாது என்பதை நீங்களும் உணர்ந்து, பிறரையும் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
எதிர்த்தரப்பை நேரடியாகச் சந்தித்து, கருத்துப் பரிமாற்றம் நடத்தி, நிவர்த்திசெய்ய முடியாத தகராறுகளை, மூன்றாம் நபர் தலையீட்டோடுதான் மேலாண்மை செய்தாக வேண்டும். ஊர்ப் பஞ்சாயத்து, சமூகப் பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், காவல் நிலையம், நீதிமன்றம் என பல்வேறு தலையீட்டு வழிமுறைகள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றோடு சில வேளைகளில் கட்டப்பஞ்சாயத்தும் கலக்கப்படுகிறது. இவற்றுள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வழிமுறைகளே சாலச் சிறந்தவை.
அடுத்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, சமூக -பொருளாதார--அரசியல் தகராறுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து சிந்திப்போம். இவை அவதூறுகளையும், அதிரடியான வழக்குகளையும், துன்பங்களையும், துயரங்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. இம்மாதிரி அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் பிரச்னைகளை உருவாக்குகிறவர்கள் அல்ல; மாறாக சமூகத்தில் புதைந்து கிடக்கும் பிரச்னைகளை வெளிக் கொணர்கிறவர்கள் என்று வாதிடும் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், இம்மாதிரியான பொதுவாழ்வுத் தகராறுகளை வேனல்கட்டிகளோடு ஒப்பிடுகிறார்.
""வேனல்கட்டிகள் மூடிப் பொதியப்பட்டிருந்தால், வலியும் துன்பமும் அதிகரிக்கும். எனவே அவற்றை வெட்டிப் பிளந்து, உள்ளிருக்கும் அழுக்குகளை வெளிக் கொணர்ந்து, இயற்கை மருந்துகளான வெளிச்சத்தையும், காற்றையும் அவற்றின் மீது பாய்ச்சுகிறோம். அதேபோல, சமூக அநீதிகளைப் பட்டவர்த்தனமாக்கி, மனித மனசாட்சி எனும் வெளிச்சத்தையும், மக்கள் கருத்து எனும் காற்றையும் அவற்றின் மீது விழச்செய்ய வேண்டும்'' என்கிறார் டாக்டர் கிங்.
பன்முகத்தன்மையும், பெருத்த வேறுபாடுகளும் கொண்ட நமது இந்திய சமூகத்தில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தகராறு கடக்கும் பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, பல்வேறு தகராறுகளும், படைபலப் போட்டியும், அணுவாயுதங்களும் ததும்பி வழியும் நமது தெற்காசியப் பிராந்தியத்தில், நமது நாளையத் தலைவர்களுக்கு தகராறு கடக்கும் கலையைக் கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். "புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' எனும் பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாக, தகராறு தீர்க்கும் கல்வி ஒன்றே உரிய வழி.
தகராறுகளைக் கடந்து செல்வது என்பது ஓரிரு வாரங்களில் படித்து முடிக்கும் முதலுதவி சிகிச்சையோ அல்லது நீச்சல் பயிற்சியோ அல்ல. வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து பயிலும் வாழ்வியல் முறை.
உங்களை நீங்களே பயிற்றுவிக்க ஒரு சில வழிகளைப் பார்ப்போம். ஒரு தகராறை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள், கையாள்கிறீர்கள் என்பது குறித்த கட்டுரைகளை எழுதி, ஓரிரு நாட்கள் கழித்து அவற்றைப் படித்துப் பாருங்கள். உங்களின் தனிப்பட்ட தகராறு கலாசாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்தியுங்கள்.
அதேபோல, உங்கள் வாழ்வில் நடந்திருக்கும், அல்லது உங்கள் பகுதியில் நடந்து உங்களை ஆழமாகப் பாதித்திருக்கும் தகராறுகளைப் பற்றி சிறு கட்டுரைகள் எழுதி, உங்கள் நண்பர்களோடு விவாதியுங்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...