

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடக்கும் நகரம், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் சங்கமம்.
"உலக நாடுகளில் உள்ள எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. வாருங்கள் அடுத்த சர்வதேச ஒலிம்பிக்ஸ் நடக்கும் டோக்கியோ மாநகருக்கு வந்து சேருங்கள். உற்சாகத்துடன் விளையாட, புதிய சாதனை படைக்க, பதக்கங்கள் வென்று உங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க வாருங்கள்' என்ற சம்பிரதாய அறைகூவலோடு 2016 பிரேசில் ஒலிம்பிக்ஸ் நிறைவு விழா முடிவுற்றது.
கரோனா தொற்று காரணமாக 2020 -இல் நடக்க வேண்டிய ஒலிம்பிக்ஸ் 2021 - ஜூலையில் விமரிசை
யாகத் தொடங்கியது. பல வருடங்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு நிம்மதி. எப்படியோ விளையாட்டுப் போட்டி தொடங்கியது என்ற திருப்தி. அவர்களது கட்டிப்போட்ட திறமையை மடை திறந்த வெள்ளம் போல களத்தில் பாய்ச்சுவதற்கு வாழ்
நாளில் அரியதொரு வாய்ப்பு!
உலக நாடுகள் பரஸ்பர நட்போடு பங்கேற்கும் தொன்மையான நிகழ்ச்சி என்றால், அது ஒலிம்பிக்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும். முதல் ஒலிம்பிக்ஸ் கிரேக்க நாட்டில் ஒலிம்பியா நகரத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டு நடைபெற்றது. அதன் பிறகு தொடர்ந்து கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை நடை பெற்றது. கிரேக்க நகரங்கள், சமஸ்தானங்கள் இவற்றுக்கிடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். சண்டையை மறந்து வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் உடல் வலிமையை உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய கிரேக்க மன்னன் முயற்சியின் விளைவாக ஒலிம்பியா நகரத்தில் போட்டிகள் தொடங்கப்பட்டது. கிரேக்க கடவுள் "சியாஸ்' முன்னிலை படுத்தி "சியாஸ்' சரணாலயத்தில் கிரேக்க மன்னன் "ஹெராகல்ஸ்' முதல் ஒலிம்பிக் போட்டியைத் தொடங்கினான் என்பது புராணம்.
மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், குதிரை பூட்டிய ரதங்களின் ஓட்டம், கத்திச் சண்டை, ஈட்டிச் சண்டை என்று பல போட்டிகள் அடங்கிய நிகழ்ச்சி உதயமானது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டது. பல "பேகன்' மத சம்பந்தப்பட்ட சம்பிரதாய முறைகள் வகுக்கப்பட்டன. பேகன் வழிபாட்டு முறை நடைமுறையில் இருந்த காலம் அது. விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் மாதங்களில் நாடுகளுக்கிடையே போர் நடத்தக் கூடாது என்ற விதி கடைபிடிக்கப்பட்டது. அந்த விதத்தில் விளையாட்டுப் போட்டிகள்
மனிதனின் ரௌத்திர, ரஜோ குணத்திற்கு மாற்று வடிகாலாக அமைந்தன. மக்களால் வரவேற்கப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் சமுதாயத்தில் பிரபலமானது.
கிறிஸ்துவ மதம் தலை தூக்கிய பிறகு பேகன் வழிபாட்டு முறை மாறியது. அதன் அடிப்படையில் அமைந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தப்பட்டன.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சார்லஸ் பியரி டி குபர்டின் என்பவர் 1894 - ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். இதற்கு முன்னால் கிரேக்க நன்கொடையாளர் "எவான்கலோஸ் சாப்பாஸ்' பண உதவியுடன் 1859- ஆம் வருடம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒட்டோமன் சாம்ராஜ்யம் , கிரேக்க நாடு பங்கேற்புடன் ஏதன்ஸ் நகரில் நடைபெற்றது. தொடர்ந்து 1890- ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியைப் பார்த்து அதை விரிவுபடுத்த குபர்டின் எடுத்த முயற்சியால் தற்கால ஒலிம்பிக் உதயமாயிற்று.
அதற்கு ஒரு குழு அமைத்து விதிகள் அடங்கிய சாசனம் தயார் செய்யப்பட்டது. மாடர்ன் ஒலிம்பிக்ஸ் 1896 - ஆம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் விமரிசையாகத் தொடங்கியது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்ற அதே பழைய முறையில் தவறாமல் நடத்த முடிவெடுக்கப்பட்டது . இடையில் முதலாம், இரண்டாம் உலகப்போர் நடந்த போது 1914, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் போட்டி தடை பட்டது.
மக்கள் ஈடுபாடு அதிகம் இருக்கும் இடத்தில் வணிகம் நுழைந்துவிடும். தொலைக்காட்சி ஊடகங்கள் போட்டிகளை நேரலையில் மக்களிடம் கொண்டு செல்வதால்
ஆர்வம் கூடியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல சன்மானம் கிடைக்கிறது. குளிர்கால ஒலிம்பிக்ஸ்,
இளைஞர்களுக்கு "யூத் ஒலிம்பிக்ஸ்' மாற்றுத் திறனாளிகளுக்கு "பாரா ஒலிம்பிக்ஸ்' என்று சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் விரிவடைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஓர் ஒலிம்பிக்ஸ் போட்டி முடிவுற்ற போதே அடுத்த போட்டி எங்கு நடக்கும் என்பது முடிவு செய்யப்படும். பல நாடுகள் தங்கள் நாட்டில் நடத்த போட்டி போடுவார்கள். நாட்டின் கட்டமைப்பு மேம்படும். சுற்றுலா, வணிகம் விருத்தி அடையும், நாட்டின் பொருளாதாரம் வளரும் என்பன போன்ற பல நன்மைகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாட்டிற்கு கிடைக்கும். மேலும் தங்கள் நாட்டின் கலாசாரம், சமுதாய அமைப்பு, மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை உலகத்திற்கு படம் பிடித்து காட்டவும், பெருமை கொள்ளவும் நாடுகள் ஆர்வத்துடன் போட்டிகளை நடத்த போட்டி போடுகின்றனர். அமெரிக்காவில் ஐந்து முறை ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்தப்பட்டது. பிரெஞ்ச் நாட்டில் மூன்று முறை . நமது நாட்டிலும் வரும் காலத்தில் நடை பெறும் என்று எதிர்பார்ப்போம் .
எந்த ஒரு முயற்சியை மேற்கொண்டாலும் அதற்கு முழு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில் குருகுல படிப்பு ஏழு வருடங்கள் தொடர்ந்து வேறு குறுக்கீடு இல்லாமல் நடக்க வேண்டும் என்ற வகையில் ஏழு வயதில் ஆசிரியரிடம் குழந்தைகளை ஒப்படைப்பார்கள். ஸ்ரீராமன் வசிஷ்டரிடம் ஏழு வருடம் குருகுல வாசம் இருந்து எல்லாக் கலைகளையும் கற்றார் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. நடனம், சங்கீதம் ஏனைய கலைகள் பயில்வதற்கும் சிறு வயதிலிருந்தே குறைந்த பட்சம் ஏழு வருடம் பயின்றால்தான் கற்றது படிமானமாகும்.
விளையாட்டுக்கும் இதே விதி தான். தொடர் பயிற்சி, விடா முயற்சி, அதுதான் வெற்றியின் நீட்சி.
சீனாவில் சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். நீச்சல் போட்டி, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் தான் அதிக பதக்கங்கள் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அதில் பங்குகொள்வோரும் குறைவு. அதைக் குறிவைத்து சீனாவில் எட்டு வயதிலிருந்து பதின்மூன்று வயதிலான இளம் வீரர்களை அவர்களது உடல் வாகிற்கு ஏற்றவாறு தேர்வு செய்து, நவீன பயிற்சி மையங்களில் கடுமையான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டுப் பயிற்சிகளில் விளையாட்டு ஒன்றுதான் பிரதானம். அவர்களுக்கு நல்ல போஷாக்கு உள்ள உணவு, உடல் திறன் வளர்க்க பலவிதமான பயிற்சி சிறந்த நிபுணர்களின் உதவியோடு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு லட்சக்கணக்கில் பயிற்சி பெறும் இளைஞர்களில் ஆயிரத்தில் ஒருவர் தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற உச்ச கட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார். அந்த அளவிற்கு கூராய்வு செய்துதான் தங்கம் வெல்லக் கூடிய வீரர்களை உருவாக்குகிறார்கள். இந்த வீரர்களுக்கு உயர் பயிற்சி அளிக்க முன்னூறுக்கும் மேற்பட்ட நவீன வசதிகள் அடங்கிய ஸ்போர்ட்ஸ்
அகாதெமிகள் உள்ளன. இத்தகைய தொடர் நடவடிக்கையால் வெகு குறைவான பதக்கங்கள் பெற்ற சீனா அதிகமான பதக்கங்களை வெல்லும் நாடாக உயர்ந்திருக்கிறது.
நமதுநாட்டிலும் விளையாட்டு வீரர்களை உருவாக்க பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் நடைமுறைப்படுத்துகையில் அரசியல், பொறாமை, ஊழல் போன்றவை தலை தூக்கி விளையாட்டு வீரர்களைச் சோர்வடையச் செய்கின்றன. நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் வெளிநாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுலா செல்வதையே குறியாக இருப்பதால், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் வசதிகளும் இரண்டாம்பட்சமாக பின்னுக்குத் தள்ளப்படும் அவலம், நமது சறுக்கலுக்குக் காரணம்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் 2010 - ஆம் ஆண்டு நடந்தபோது ஏற்பட்ட பிரச்னைகள் முக்கியமாக தரம் குறைந்த கட்டமைப்பு, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தில் மோசமான வசதிகள், எல்லாவற்றிலும் ஊழல் நுழைந்து நாட்டுக்கு அவப்பெயர் தான் மிஞ்சியது.
சமீப காலமாக இந்த நிலை மாறி வருகிறது. "கேலோ இந்தியா' திட்டம் மூலம் விளையாட்டு கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மேம்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை நல்ல பலன் அளித்துள்ளது. மாநில அரசுகளும் இளைஞர் மேம்பாட்டுத் துறை மூலமாக விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கின்றன. 1991-இலிருந்து தமிழக பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு மற்ற மாநிலங்களை விட அதிகமாக தொகை ஒதுக்கப்பட்டு முதலமைச்சர்கள் தனி கவனம் செலுத்தி மேம்படுத்தும் நல்ல நிலை தொடர்கிறது.
ஒடிசா மாநில முதலமைச்சர் இந்திய ஹாக்கி அணிக்கு பல ஆண்டுகளாகப் பயிற்சிக்கும் போட்டிகளுக்கும் அளித்த ஆதரவின் பலனாக இந்திய ஹாக்கி அணி
பதக்கம் வென்றுள்ளது. சுபேதார் நாயக் நீரஜ் சோப்ராவிற்கு இந்திய இராணுவம் 2016 - இல் இருந்து உயர்தர பயிற்சி அளித்ததின் விளைவு, சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் எறிந்து முதல் முறை ஆத்லடிக்ஸ் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்திருக்கிறார்.
பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம், ரவி குமார் தாஹியா மல்யுத்தம் போட்டியில் வெள்ளி, பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிந்து வெண்கலம், குத்து சண்டையில் லோவ்லினா வெண்கலம்,
பஜ்ரங்க் பூனியா மல்யுத்தத்தில் வெண்கலம், இந்திய ஹாக்கி அணி வெண்கலம் என்று முதல் முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
விளையாட்டு மைதானம் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம். வெற்றி களிப்பில் நிதானம், தோல்வியில் துவளாமை, விளையாட்டின் தாத்பரியத்தை உணர்தல், நடுவரின் தீர்ப்பிற்குக் கட்டுப்படுதல் என்ற முக்கிய பாடங்களை உணர்த்துகிறது.
வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வியை எதிர்கொள்ள நேரிடும். அப்போது விளையாட்டு மைதானம் கற்பித்த பாடம் நமக்கு படிப்பினைகளையும் வழிகாட்டு தலையும் தரும். உலகத்திற்கு நடுவர் கடவுள், அவரது தீர்ப்பை ஏற்றுக் கொள்ள விளையாட்டுத் தளம் கற்றுக் கொடுக்கிறது.
போட்டித் தேர்வுகளில் தோல்வி, அது நீட் தேர்வாகட்டும் அல்லது அரசுப் பணிகளுக்கான தேர்வாகட்டும், தற்கொலை தீர்வல்ல என்ற முக்கியமான பாடம் - மிகத் தேவையான பாடம் - அதை இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் புகட்டுகிறது.
அடக்கத்தை நோக்கிச் சென்றால் பகையும் நட்பாகும் . ஆணவத்தை நோக்கிச் சென்றால் அழிவே உண்டாகும், ஒழுக்கம்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கு வழி. இதைத்தான் வட சென்னையில் பிரபலமான குத்து சண்டையை மையமாக வைத்து வெளிவந்த "சார்பட்டா' படம் உணர்த்துகிறது.
கொல கொலயா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா
கொல கொலயா முந்திரிக்கா
கோலார்பட்டிக் கத்திரிக்கா
கொல கொலயா முந்திரிக்கா
கொழஞ்சு போச்சு கத்திரிக்கா
என்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுற்றிச் சுற்றி ஓட ஊக்குவிக்கும் விளையாட்டு வளர்ந்து ஒலிம்பிக்ஸ் அளவில் உயர, அயராது பாடுபட வேண்டும்.
போன வார கேள்விக்குப் பதில்: விங்க் கமாண்டர் ராகேஷ் ஷர்மா 1984 - ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டின் "சோயுஸ் ப-11' விண்வெளி கலத்தில் பயணம் செய்தார்.
இந்த வார கேள்வி: ஒலிம்பிக்ஸ் சின்னம் எதை குறிக்கிறது, வடிவமைத்தவர் யார் ?
(விடை, அடுத்த வாரம்)
கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.