தோப்புக்கரணம் போடுங்கள்!

பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
தோப்புக்கரணம் போடுங்கள்!
Published on
Updated on
2 min read

பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

- பாரதியார்.

""என் பையனை நீங்க அடிச்சீங்களா?'' - பெற்றோர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்விக்கு, பதறிப்போய் ஆசிரியர் ஒருவர் இப்படி பதில் சொல்கிறார்: ""உங்க பையனை நான் அடிக்கவேயில்லேயே. உக்கி போடத்தான் சொன்னேன்.''

அந்தப் பெற்றவருக்கு ஆசிரியரின் இந்தப் பதிலில் திருப்தியில்லை. 

""இப்படி உக்கி போடச் சொன்னதுக்கு, நீங்க என் பையனை அடிக்கவே செஞ்சிருக்கலாம். சரி... எல்லா மாணவர்கள் முன்னாலேயும் உக்கி போடச் சொல்ற அளவுக்கு என் பையன் அப்படி என்னதான் தப்பு செஞ்சான்?'' 

பிரபல கல்விக் குழுமத்தில் ஆசிரியராக பணியாற்றும் தோழி ஒருவரிடம் கேட்டேன்: ஏன், இப்பலாம் மாணவர்களை நீங்க யாரும் உக்கி போடச் சொல்றதில்ல?''என்று.
""யாரு உள்ள போறது?''  என்று அடக்க முடியாத சிரிப்போடு அவரிடமிருந்து பதில் வந்தது. நம் முன்னோர்கள் அறிவுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நமக்கு அறிமுகப்படுத்தியிருந்த  "ஆசிரியர் - மாணவர் - கல்வி' உறவில் ... பயணத்தில், எந்தத் தருணத்தில், காலகட்டத்தில் உக்கிபோடுதல்  (தோப்புக்கரணம்) தண்டனையாக, அவமானமாக உருப்பெற்றது என்று தெரியவில்லை.  

தோப்புக்கரணம் ஓர் உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் அது மிகையாகாது. சற்று உற்று நோக்கினால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை தோப்புக்கரணம் போடுவதை பள்ளிகளில் தண்டனையாகவே பயிற்றுவித்திருக்கின்றனர். அதனால்  ஏற்பட்ட வெறுப்பு, அவமான உணர்ச்சி இன்று நமது மாணவர்கள், இளைஞர்களிடையே தோப்புக்கரணம் போடும் பழக்கம் அல்லது உடற்பயிற்சி வழக்கொழிந்து போயிருக்கிறது. 

மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சரியாக படிக்காத பையனை, இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழுந்திருக்க செய்வதால், அவனது காது நரம்புகள் செயல்பட்டு, மூளைக்கு உற்சாகமான உத்தரவுகள் பறந்து, அவன் நன்றாக படிக்கத் தொடங்குகிறான். இதையே, "உக்கி போடுதல்' அல்லது தோப்புக்கரணம் என்பர். சென்ற தலைமறை மாணவர்கள் யாரும் அவர்களது ஆசிரியர்களிடமிருந்து தலையில் குட்டு வாங்காமல் படிப்பை முடித்திருக்கவே முடியாது.  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குட்டு வைக்கும்போது, மூளைக்கு தரப்படும் சிறு அதிர்ச்சியால், மூளை செயல்படும் என்பது உண்மையாக உணரப்பட்ட காலகட்டத்திலேயே, ஒரு சிலரின் தவறான,  வன்மமான பிரயோகத்தால் "குட்டு வைப்பதும்' தண்டனையாக மாறிப் போனது.

அதிகாலையில் பல் துலக்கி, குளித்துவிட்டு உள்ளம், உடல் நலம் காக்க அதிகாலையில் தோப்புக்கரணம் போடுவது சாலச்சிறந்தது. தோப்புக் கரணம் சுத்தமான சம தளமான இடத்தில் செய்ய வேண்டிய பயிற்சி. அதுவே, உங்கள் வீட்டருகில் மரங்களிருந்து, அவற்றின் கீழோ,  அருகிலோ நின்று இந்தப்பயிற்சியை செய்வது மிகவும் நன்று. 

இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொண்டு,  வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொண்டு, முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழ வேண்டும்.  உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுத்து, எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விட்டு, சராசரியாக தினந்தோறும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் மட்டுமே இதைச் செய்வதால், வேறு உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாமலேயே ஒருவர் பல நன்மைகளைப் பெறலாம். இப்பயிற்சியின் ஆடைகள் தளர்வாக இருத்தல் மிக மிக அவசியம்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இப்பயிற்சியானது மிகப்பெரிய பொக்கிஷம். தோப்புக்கரணம் போடும்போது உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராண வாயுவில் பெரும்பான்மை மூளைக்குச் சென்று உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு, உள்ளத்திற்கு ஒரு நிலையான அமைதியையும், நிதானத்தையும் கொடுக்கிறது. உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள தசைகள் அனைத்தும்  இயங்க ஆரம்பித்து, அதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது. இதயத்தின் தசைகளைப் போன்றே இதுவும் வேலை செய்கிறது. இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகி, நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஒருவரது  ஆரோக்கியம் கூடுவதால், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும்  மூளைச் செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி, அறிவுச்செல்வம் பெருகுகிறது. 

தோப்புக்கரணத்தின் பயன்களையும், அவசியத்தையும் முழுமையாக உணர்ந்திருந்த காரணத்தால்தான் நம் முன்னோர்கள் இதை வழிபாட்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, கடமையாக   நமக்கு வலியுறுத்திச் சென்றிருக்கிறார்கள்.   தோப்புக்கரணம் போடுவதை  தண்டனையாக... அவமானமாக கருதி ஒதுக்குவது மடமையானது. 

மேலைநாடுகளில் "சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில் சொல்லித் தரப்படும் தோப்புக்கரணத்திற்கு அமோக வரவேற்பு. அதுவே "உள்ளூர் உக்கி' யென்றால் அவமானம். யேல் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் அங், தோப்புக் கரணம் போடுவதால், அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப் படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ûஸ சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் ராபின்ஸ், தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறும் என்கிறார். 

ஒருவருக்கு  உண்மையான செல்வம் அவரது ஊக்கமே. அப்படிப்பட்ட ஊக்கமாகிய செல்வத்தைப் பெறாதவர்கள் மனிதர்களைப் போல தோன்றினாலும், அவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்களே என்பதை, உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதிலார் மரம்மக்க ளாதலே வேறு என்று கூறுகிறது குறள். 

எனவே, குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல... அனைத்து வயதினரும் இப்பயிற்சியை மேற்கொண்டு நல்லதொரு திடமான மானுட சமூகம் படைப்போம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com