கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!  - 11: பஞ்ச பூத தாண்டவம்!

இன்னும் இருபது ஆண்டுகளில் புவி வெப்ப உயர்வால்  இந்தியாவில்  கடலோர நகரங்களின் கணிசமான  நிலப்பரப்பைக் கடல் விழுங்கும் என்ற செய்தி நமக்கு இப்போதாவது ஒரு விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும்.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!  - 11: பஞ்ச பூத தாண்டவம்!
Updated on
4 min read


இன்னும் இருபது ஆண்டுகளில் புவி வெப்ப உயர்வால் இந்தியாவில் கடலோர நகரங்களின் கணிசமான நிலப்பரப்பைக் கடல் விழுங்கும் என்ற செய்தி நமக்கு இப்போதாவது ஒரு விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும்.
முழுமையை உணர முடியாத அளவில் பிரபஞ்சம் பரந்து விரிந்த பிரம்மாண்டம்! அதில் பல நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன்கள். சூரியன் சஞ்சரிக்கும் "மில்கி வே' என்ற பால்வெளி மண்டலம் பல நட்சத்திரங்களைக் கொண்டது. அதில் ஒன்றான சூரியன், அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது கிரகங்கள். அதில் ஒன்று நாம் வசிக்கும் பூமி . நாள் ஒன்றுக்கு தனது அச்சில் ஒருமுறையும் சூரியனைச் சுற்ற ஒரு வருடமும் தானியங்கி இயந்திரமாகச் சுழன்றுகொண்டு புவியில் வாழும் ஜீவராசிகளைத் தாங்கி காப்பாற்றி விண்வெணியில் பயணிக்கும் மகத்தான விண்வெளி கப்பல் பூமி. "கழ்வாரையும் தாங்கும்' பூமித்தாயைத் துகளிலும் துகளான மனிதன் கொடுமைப்படுத்துவது கொஞ்ச நஞ்சமல்ல!

பூமி அன்போடு வளம், கோபித்தால் பூகம்பம்,
காற்று மிதமாக தென்றல், சீறினால் புயல்,
நெருப்பு நலமாக தீபம், குரோதம் காட்டுத்தீ ,
நீர் தெளிவான ஊற்று, புரண்டால் வெள்ளம், சுனாமி,
ஆகாயம் இதமாக வெப்பம்... மிதமான மழை,
வெகுண்டால் ஓசோன் துளை!

உலகின் கால நிலையை ஆராய்வதற்காக சர்வதேசக் கூட்டமைப்பு (ஐபிசிசி), 1988- இல் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. அதில் வெப்பநிலை, இயற்கையைச் சூறையாடும் மனிதனின் அழித்தொழிப்புச் செயல்களால் உற்பத்தியாகும் நச்சு வாயுக்களின் அளவு, அதனால் உயரும் வெப்பநிலை, வெப்பநிலை உயர்வால் உருகும் பனிக்கட்டிகள், அதைத் தொடர்ந்து உயரும் கடல் அளவு ஆகியவை விலாவாரியாக ஆராயப்படுகின்றன. அதன் அடிப்படையில் உலக நாடுகள் வெப்பநிலையைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு ஐ பி சி சி கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா, கடல் மட்ட உயர்வால் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி கூராய்வு செய்துள்ளது.

கடலின் சராசரி மட்டம் வருடத்திற்கு 3.7 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. கடந்த நூறு வருடங்களில் இந்த உயர்வு சற்று அதிகமாகவே இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இமாலய மலைத்தொடரில் மலைகளின் கீழ் பகுதியில் அதிகமாக பனிக் கட்டிகள் உருகுகின்றன். பனி உறைவது மலைத்தொடரின் மேற்பகுதிக்குச் சென்று விட்டது.

இதன் விளைவு, கடலோரப் பகுதிகளில் அதிக வெள்ளம், கடல் அரிப்பு, சேதாரம் உண்டாகும். நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய பேரிடர் வருடா வருடம் வந்து பெருத்த சேதத்தை விளைவிக்கும்.

இந்தியாவில் 12 கடலோர நகரங்களில் கடல் அரிப்பு பேரிடர் வரக்கூடும் . அந்த பன்னிரண்டு நகரங்களில் சென்னையும் ஒன்று .

இதற்கு ஒரே மாற்று வழி, கடுமையான மாசு கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசு 2018 - ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் மரங்கள் நடுவது, பராமரிப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பது முக்கிய கருத்து . இதைத்தான் நடிகர் விவேக் ஈஷா மையத்தோடு இணைந்து லட்சக்கணக்கான மரங்கள் நடும் பணியை முனைப்போடு நிறைவேற்றினார்.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு தொழில் புரட்சி, உற்பத்தி பெருக்கம், வணிகமயமாக்கலில் திளைக்கின்றன. நவீன வாழ்க்கை முறை, இயற்கை வளங்களை சிந்தனையின்றிப் பாழடித்து, சுற்றுப்புறச் சூழலுக்கே உலை வைக்கும் அரக்கனாக உருவெடுத்துள்ளது.

"காடு விளைஞ்சென்ன மச்சான்... நமக்கு கையும் காலும் தானே மிச்சம்'' என்று விவசாய மக்களின் விரக்தியை விளக்குகிறது, பட்டுக்கோட்டையார் பாடல்.
காடுகளே அழிவுப்பாதையில் சூறையாடப்பட்டால் கையும் காலும் இருந்து என்ன பயன்!
1969- ஆம் வருடம் உலக அமைதிக்காக போராடும் சமூக ஆர்வலர் ஜான் மெக்கனீல் நாடுகளிடையே இயற்கை வளங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதற்கு புவி தினம் அனுசரிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானம் போட்டது. அப்போது ஐ நா சபையின் செக்ரட்டரி ஜெனரல் யூ தாண்ட், அண்டை நாடான பர்மாவைச் சேர்ந்தவர்.
அவருக்கு அப்போது துணை அதிகாரியாக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் ஐசிஎஸ்.
இருவரது செய்திகளும் அடிக்கடி ஊடகங்களில் வரும். அதனால் யூ தாண்ட் தமிழ்நாட்டில் பிரபலமானார். இந்த இரு தலைவர்களும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு தீர்மானம் நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
அதன்படி எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்ற வகையில் ஏப்ரல் 22 - ஆம் நாள் புவி நாளாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
உலக நாடுகள் எல்லா பேதங்களையும் மறந்து, நாம் எல்லாரும் இயற்கை அன்னையின் குழந்தைகள்; நம்மைத் தாங்கும் அன்னையைப் போற்றுவோம்; பாதுகாப்போம் என்று எல்லாரும் இணைந்து இயற்கை அன்னையை வழிபட வேண்டும். முதல் ஆண்டு 1970 - ஆம் வருடம் அமரிக்காவில் பல லட்சக்கணக்கான மக்கள், தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கலந்து கொண்டனர்.

வசந்த காலம் இதமான பருவம், உத்தராயண காலத்தில் சூரியன் புவியின் நடுக்கோட்டில் சமமாக கிரணங்களைப் பகிரும் மாதங்கள் மார்ச், ஏப்ரல். இதன் அடிப்படையில் புவி நாள் ஏப்ரல் 22 என்று தெரிவு செய்யப்பட்டது. மேலும் இந்த மாதங்களில் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள முடியும்.

தமிழர்களும் உத்தராயண மகத்துவத்தை உணர்ந்து சித்திரை மாதத்தைத் தமிழ் புத்தாண்டாக காலம் காலமாக அனுசரிக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் புவி நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் மைய கருத்து கொடுக்கப்படும். 2017 - ஆம் வருடம் சுற்றுப்புறச்சூழல் கல்வி , 2018 - ஆம் வருடம் ப்ளாஸ்டிக் ஒழிப்பு, 2019 -ஆம் வருடம் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பால் அழிந்து வரும் உயிரினங்கள் ஆகியவை பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. கழிவுப் பொருட்களை கடலோர பகுதிகளில் போடுவதால் கணக்கில்லா கடல் வாழ் உயிர்கள் அழிகின்றன. இந்தியாவின் கடலோரப் பகுதியின் நீளம் 7516 கி மீ, அதில் தமிழக பகுதியின் நீளம் 1050 கி மீ. கடலில் டன் கணக்காக கழிவுகள் மிதக்கின்றன!

2020 - ஆம் ஆண்டு ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த புவி நாள் அதிக பங்கேற்போடு அனுசரிக்கப்பட்டது. நமக்கு நேரமில்லை என்று ஒதுங்கும் மக்களை ஒருங்கிணக்க , நேரம் கடந்து விடும் என்று எச்சரிக்க, 192 நாடுகளில் சுமார் பத்து கோடி மக்கள் பங்குகொண்டனர்.

கடந்த ஒரு வருடம் உலகமே கரோனாவால் சோகத்தில் மூழ்கியுள்ளது. புவியை மீட்டெடுக்கும் வேளையிது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்து 2021 - ஆம் ஆண்டு புவி நாள் அனுசரிப்பு தொடங்கப்பட்டது.
"கழிவுகளையும், பொருள்களையும் வீணடிப்பதைப் பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது' என்றார் அன்னை தெரசா. கழிவுகளைப் பதப்படுத்தி உரமாக்கலாம்; கழிவு என்று நாம் தூக்கியெறிவதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் ஐயாயிரம் டன் கழிவுகள் உண்டாகின்றன. சராசரியாக ஒரு நபர் 600 கிராம் கழிவிற்குக் காரணமாகிறார். மற்ற பெரு நகரங்களை விட இது அதிகம். மாநகராட்சி, "மக்கும் குப்பை'... "மக்காத குப்பை' என்று தரம் பிரித்து போட எவ்வளவு அறிவுறுத்தினாலும் மக்கள் செவி சாய்ப்பதில்லை. பொறுப்பின்றி குப்பையைத் தெருவில் வீசும் பழக்கம் சென்னையில் தான் அதிகம். எவ்வளவுதான் தூய்மைப் பணியாளர்கள் குப்பையை அகற்றினாலும் நொடிப்பொழுதில் மக்கள் குப்பைத் தொட்டியை நிரப்பி விடுவார்கள்! தயவு தாட்சண்யம் இன்றி அபராதம் விதிப்பது ஒன்றுதான் மக்களைத் திருத்த ஒரே வழி.
"பொன்னியின் செல்வன்' என்ற அமர காவியத்தைப் படைப்பதற்காகவே பிறவி எடுத்த கல்கி கிருஷ்ணமூர்த்தி வீர நாராயணம் ஏரியை காவியத்தின் கதாநாயகன் வந்தியதேவன் மூலம் அழகாக விவரிப்பார்:
"ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி?
எத்தனை நீளம்? எவ்வளவு அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளை எல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட கா
வேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்?'
அந்த வீராணம் தண்ணீர்தான் சென்னை வாசிகளின் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. குடகு மலை
உச்சியில் பொழியும் மழையைச் சுமந்து, வெள்ளப் பெருக்காக ஓடி வரும் காவிரி நதி நீரை பொன் போல காத்து, ஏரிகளிலும் குளங்களிலும் கால்வாய்களிலும் சேமித்தனர் சோழ மன்னர்கள். பருவ மழையைச் சேகரிப்பதில்
பிற்காலத்தில் நாம் தவறி விட்டோம். 33% மழைநீர் தான் சேகரிக்கப்பட்டு நிலத்தடியில் செல்கிறது; மக்கள் குடலில் கலக்க வேண்டிய மிச்ச நீர் கடலில் கலக்கிறது!
காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறு பல ஓட என்று தமிழ்நாட்டில் பாயும் நதிகளைப் பற்றி பெருமைபட பாரதியார் பாடியுள்ளார். இந்த ஆறுகளை இணைக்க பல ஆண்டுகளாக போடப்பட்ட திட்டம் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. ஆனால் அந்த காலத்தில் எப்படி கடல் போன்ற வீராணம் ஏரியைக் கட்டி முடித்தார்கள்!
அதுவும் வடக்கில் உள்ள ராஷ்டிரகூட நாட்டினரோடு யுத்தம் வரக்கூடும் என்று தயார் நிலையில் இருந்த போர் வீரர்களின் நேரத்தை வீணடிக்காது, அவர்களது உழைப்பினால் உருவானது வீரநாராயண ஏரி. பிரம்மாண்ட சாதனை. இப்போது ஏரியின் பரப்பளவு சுருங்கியது, பெயரும் வீராணம் என்று சுருங்கியது போல் !
"பொழுது புலர்ந்தது நாம் செய்த தவத்தால்' என்ற எதிர்ப்பார்ப்பு மறைந்து, "பொழுது தூர்ந்தது நாம் செய்த பாவத்தால்' என்ற அபாயம் உலகை அச்சுறுத்துகிறது.
சென்றதினி மீளாது. ஆனால் "இன்று புதிதாய் பிறந்தோம்' என்று இளைய சமுதாயம் இப்புவியைப் பாது காக்கப் போராட வேண்டும்.

சென்ற வார கேள்விக்குப் பதில்:

மாடர்ன் ஒலிம்பிக்ஸ் ஸ்தாபகர் பியரி கூபர்டின் உலகின் ஐந்து கண்டங்களை குறிக்கும் ஐந்து வளையங்கள் இணைந்த ஒலிம்பிக் லோகோவை 1912- ஆம் வருடம் வடிவமைத்தார்.

இந்த வார கேள்வி: சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்விற்கு வித்திட்ட அமெரிக்க அரசியல் தலைவர் யார்?

(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com