அதி வேக சிறுகோள்!

சூரிய மண்டலத்தில் அதிக வேகமாகச் சுற்றிவரும் சிறுகோளைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கார்னெகி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதி வேக சிறுகோள்!
Published on
Updated on
1 min read


சூரிய மண்டலத்தில் அதிக வேகமாகச் சுற்றிவரும் சிறுகோளைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கார்னெகி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களைப் போன்று சிறுகோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் சூரியனைச் சுற்றி வருகின்றன. சுமார் 530 கி.மீ. விட்டம் கொண்டதுதான் பெரிய சிறுகோளாக கருதப்படுகிறது. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தின் ஆரம்பகால அமைப்பிலிருந்து எஞ்சிய, பாறை வடிவம்தான் இந்தச் சிறுகோள்கள்.

சுமார் ஒரு லட்சம் சிறுகோள்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் "2021 பிஹெச்27' எனப் பெயரிடப்பட்ட சிறுகோள் சூரியனை அதிக வேகமாகச் சுற்றி வருவதாக வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது 113 பூமி நாள்களில் இந்தச் சிறுகோள் சூரியனைச் சுற்றி வருகிறது. புதன் கிரகத்தைத் தவிர சூரிய மண்டலத்தில் கண்டறியப்பட்ட பொருள்களில் குறைந்த நாள்களில் சூரியனைச் சுற்றி வருவது இந்தச் சிறுகோள்தான். புதன் கிரகமானது சூரியனை 88 நாள்களில் சுற்றி வந்து விடுகிறது.

ஒரு கி.மீ. விட்டம் கொண்ட இந்தச் சிறுகோள் சூரியனுக்கு வெகு அருகில் அதாவது தோராயமாக 20 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது. புதன் 46 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியனுக்கு இத்தனை நெருக்கமாக சுற்றிவரும் இந்தச் சிறுகோளின் தரைப்பரப்பு வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ஸ்காட் ஷெப்பர்டு.

"டார்க் எனர்ஜி கேமரா' என்ற அதிநவீன கருவியைப் பயன்படுத்தி இந்தச் சிறுகோளை 2021, ஆக. 13-ஆம் தேதி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சர்வதேச வானியல் யூனியனின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறிய கிரகங்களைக் கண்காணித்து அறிக்கை அளிக்கும் "மைனர் பிளானட் சென்டருக்கு' இந்தப் புதிய சிறுகோள் பற்றிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுகோளின் சுற்றுப்பாதை நிலையானதாக இல்லாத நிலையில், சூரியன், புதன், வியாழன் கிரகங்கள் மீது சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் மோதக் கூடும் எனவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com