

""எங்ஙனம் இருந்தீரே'' என்பார் பாரதியார். யாரைப் பார்த்து? சரியான வார்த்தை வராமல் யோசித்து திடீரென்று ஸ்புரிக்கும். ஒரு படைப்பாளிக்கு சிந்தனை ஓட்டத்தில் தடைபட்ட வார்த்தை சரியாக அமைந்துவிட்டால் மூளை கிர்ரென்று வேலை செய்ய தொடங்கிவிடும். அதைத்தான் பாரதியார் வாஞ்சையோடு அந்த வாராதிருந்த சொல்லை வரவேற்கிறார்!
படித்தால் தெரிந்தவன்
விவரித்தால் தெளிந்தவன்
எழுதுபவன் தூயவன்
எழுத்துதான் ஒருவரை முழு மனிதனாக ஆக்குகிறது. கற்றலினால் என்ன பயன் அதை தெளிவுற பகிராவிட்டால்? பாரதியார் தெளிவாக வேண்டுகிறார்:
"தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல
காட்டல், கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல், இங் கியெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற்
கிவையனைத்தையும் உதவு வாயே'
இது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். தாமஸ் ஆல்வா எடிசன் எவ்வளவோ கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் இருந்தவர். ""ஆயிரம் முறை ஆராய்ச்சியில் தவற விட்டேன்; முடிவில் சரியான இலக்கை அடைந்தேன்; தவறுகளும் ஒரு பாடம். ஆயிரம்விதமாக தவறுகள் நேரக் கூடும் என்ற பாடம் கற்றேன்'' என்றார். தாமஸ் ஆல்வா எடிசனுக்கே இந்த கதி என்றால் சாமானியரான நம் கதி என்ன? அதனால் தவறு ஏற்படும் என்று அஞ்சி ஒரு முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதே மிகப்பெரிய தவறு!
"பாரடைஸ் லாஸ்ட்' என்ற மகா காவியத்தை படைத்தவர் ஜான் மில்டன். தனது 44 வயதில் பார்வையை இழந்தார். அவர் எழுதி முடித்த காவியம் லண்டன் பெருந்தீயில் சேதமடைந்தது. அவர் அதை திரும்ப ஞாபகப்படுத்தி மீண்டும் தனது உதவியாளர்களிடம் ஒப்பித்து காவியத்தைப் பூர்த்தி செய்தார். எத்தகைய மகத்தான சாதனை!
கிரேக்க விஞ்ஞானி ஆர்கிமிடீஸ் குளித்து கொண்டிருக்கையில் அவருக்கு தான் செய்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் முடிவு ஸ்புரித்தது. "யுரேகா யுரேகா' அதாவது "கண்டுகொண்டேன்' என்று உற்சாகத்தில் குளியலறையிலிருந்து ஓடினார் என்பார்கள்!
தனியார், பொதுத்துறைகளில் பணியாளர்களை இனம் கொள்ள பளிச்சிடும் அறிவு உதவும். பணிகளுக்குத் தேர்வு செய்வது, ஒரு நிறுவனத்திற்கு மிகப் பெரிய சவால். வேலைக்கு விண்ணப்பம் செய்பவர் தன்னிலை அறிக்கை அளிக்க வேண்டும். அதில் தன்னைப் பற்றி சற்று அதிகமாகவே சொல்லிக் கொள்வார்கள். பல நிறுவனங்களில் எழுத்துத் தேர்வு உண்டு. அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, அதன் பின் நேர் காணல் என்று இரண்டு கட்டம் அல்லது மூன்று கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒருவருடைய அறிவார்ந்த செயலாக்கம் , சாமர்த்தியமான அணுகுமுறை, சமுதாயம் சார்ந்த கோட்பாடுகள் சோதிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் மாமன், மச்சான், உடன்பிறப்புகளுக்கு அரசு பதவி என்று ஊழலுக்கு வித்திட்ட முறை 18 -ஆம் நூற்றாண்டில் இருந்தது. அந்த முறை நிர்வாக நலன் கருதி 1854 -ஆம் வருடம் அரசு பணிகளுக்கான தேர்வு முறை சர் சார்ல்ஸ் ட்ரெவிலியான் அறிக்கை அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்பட்டது. இந்திய தேர்வாணையமும் அதைப் பின்பற்றி தான் அமைக்கப்பட்டது.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வில் நேர்காணலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதிக மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டன. நேர்காணல் நடத்தும் நிபுணர்கள் குழாம் சுமார் நாற்பது நிமிஷத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை ஒரு தேர்வரிடம் நேர்காணல் நடத்துவார்கள். அதில் முக்கியமாக மறைந்திருக்கும் திறன், ஒளிந்திருக்கும் சுபாவங்களை (நான் காக்னிடிவ் ஸ்கில்ஸ் அண்ட் ஆட்டிடியூட்ஸ்) நிபுணர்கள் அந்த ஒரு மணி நேர உரையாடலில் கண்டுகொள்வார்கள். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் நாற்பது ஆண்டுகள் இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஒரு மணி நேர நேர்காணலில் உயர்ந்த மாமனிதர்களை இனம் காணும் திறமைக்ஷணத்தில் திறமைகளை அவதானிக்கக் கூடிய பொறி தட்டும் புத்திக் கூர்மை அவர்களிடம் இருந்தது!
ஆனால் காலப்போக்கில் நேர்காணலுக்கு முக்கியத்துவம் இல்லாமல் எழுத்துத் தேர்வுதான் பிரதானம் என்ற நிலை வந்து விட்டது. சிலர் நீதிமன்றத்திற்குச் சென்று நேர்காணல் மதிப்பெண் சதவிகிதம்,15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற ஆணை பெற்றதின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக சமுதாயத்தில் நல் மதிப்பீடுகள் குறைந்து வருவதை தேர்வு முறைகளிலும் காண முடிகிறது. வெயிலும் மழையும் ஒரு சேர மாறும்போது வானில் ஏழு நிறம் கொண்ட வானவில் தோன்றும். கண்டு களித்திருக்கிறோம். ஒரு ஒளிக்கீற்றில் நிறங்கள் தெரிவதில்லை. ஆனால் அந்த ஒளி ஏதாவது பொருள் ஒன்றின் வழியே செல்கையில் சிதறுகிறது. ஒளிக் கீற்று மேகங்களில் படிந்திருக்கும் நீர் துளிகளில் ஊடுருவி சிதறி வண்ணங்கள் வானவில்லாக வடிவம் பெறுகிறது. சிதறும் ஒளி அலைகளின் தன்மையை சி.வி. ராமன் அவர்கள் ஆராய்ந்து அறிவியல் சார்ந்த அறிக்கையை விஞ்ஞான உலகிற்கு அளித்தார். அவர் கண்டுபிடிப்பிற்கு "ராமன் விளைவு' என்று பெயர். இயற்பியலில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு அகஸ்மாத்தாக நிகழ்ந்தது.
இராமன் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்று மேல் ஆராய்ச்சியில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1921 -ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஓர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கப்பலில் திரும்புகையில் கடலின் நீல வண்ணம் அதில் நீல நிறத்தில் மிதக்கும் பனிகட்டிகள் அவரைச் சிந்திக்க வைத்தன. "வானத்தின் நீலநிறத்தின் பிம்பம் கடலில் நீல நிறத்தைக் கொடுக்கிறது' என்பது சாமானிய விளக்கம். அதற்கு விஞ்ஞான அடிப்படை இருக்க வேண்டும் என்று ஒரு கணத்தில் தோன்றிய சிந்தனையின் விளைவு தான் இராமன் ஒளிச்சிதறல்
கண்டுபிடிப்பில் முடிந்தது. வேதியியலிலும் மருத்துவத்திலும் ராமன் கண்டுபிடிப்பு அதிகமாக உதவுகிறது. போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க இராமன் விளைவு மூலம் போதை பொருள்களைக் கண்டுபிடிக்கலாம். இப்போது பாதுகாப்பு பிரிவிலும் இராமன் அலை சிதறல் நுணுக்கத்தின் அடிப்படையில் கருவிகள்வடிவமைக்கபட்டுள்ளன.
"காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்னவானாள்'
என்ற மறக்க முடியாத இளைஞர்களைக் கவரும் கண்ணதாசன் பாடல். ஏதோ ஒன்றைத் தேடிப் போக வேறு விலை மதிக்க முடியாத பயன் கிடைத்தால் எப்படி இருக்கும்? இரட்டிப்பு மகிழ்ச்சி, முயற்சிக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு திருவினைகள்! இதைத்தான் ஆங்கிலத்தில் "செரின்டிபிடி' என்பார்கள்.
"செரின்டிப்பின் மூன்று இளவரசர்கள்' என்ற விசித்திர கதை; அதில் அந்த இளவரசர்கள் பயணிக்கையில் அனுகூலமான அதிசயங்கள் எதிர்ப்பாராத வண்ணம் நிகழும். எல்லாரையும் கவர்ந்த காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கதை. 1754 - ஆம் ஆண்டு பிரபலமான எழுத்தாளர் ஹொரேஸ் வால்போல் மேற்படி கதையில் வரும் "செரின்டிப்' என்ற சொல்லை வைத்து அகஸ்மாத்தான நிகழ்வுகளைக் குறிக்க "செரின்டிபிடி' என்ற சொல்லை பிரபலப்படுத்தினார். விஞ்ஞான உலகில் இம்மாதிரியான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க என் எஸ் எஃப் கோல்டன் மோல் என்ற விருது வழங்கப்படுகிறது.
நீல நிறம் நம் எல்லோரையும் கவர்ந்த நிறம். "நீல நிற கண்ணா' என்று கிருஷ்ணனைத் தொழும் பக்தர்கள் நீல நிறத்திற்கு தெய்வாம்சத்தைக் கொடுத்து விட்டார்கள். வானம் நீலம், கடல் நீலம் இயற்கை வண்ணங்களில் நீல நிறத்திற்கு தனித்துவம் உண்டு. ஆனால் நீலநிறத்தை தாவரவகைகள் மூலமாகப் பதப்படுத்துவதுகடினமானது.
"கோபால்ட்' உலோகம் மூலம் தயாரிப்பு சுலபமானதில்லை. இரசாயன கலவைகள் மூலமாக தயாரிப்பது அபாயமானதாலும், நிரந்தரமின்மையாலும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாகவே இருந்தது. இவ்வாறு இருக்கையில் ஓர் இந்தியர், தமிழர், இந்த நீல நிறத்தை ஆராய்ச்சி மூலம் உற்பத்தி செய்யும் முறையை செப்பனிட்டார் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். முன்னீர்பள்ளம் அப்பாதுரை சுப்ரமணியன் தான் அவர்.
சென்னையில் வளர்ந்து மதராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், சென்னை ஐஐடி- இல் டாக்டர் பட்டம் படித்து முடித்து மேல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா சென்றார். ட்யூ பாண்ட் ஆராய்ச்சி மையத்தில் பல முக்கிய நிறமி அல்லது வண்ணப் பொருள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி குழாமில் பணியாற்றினார்.
2006 -ஆம் ஆண்டு ஆரிகான் பல்கலைக்கழகப் பேராசிரியராக பணியாற்றியபோது தாதுக்களின் நிறமி சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொண்டார்.
முக்கியமாக எலக்ட்ரானிக் கருவிகள் தயாரிப்பில் எவ்வாறு "பிக்மெண்ட்' உதவக்கூடும் என்று ஆராய்கையில் ஸ்திரமான நீல பிக்மெண்ட் கிடைத்தது. "செரன்டிபிடி' என்று சொல்லக்கூடிய அகஸ்மாத்தான கண்டுபிடிப்பு! அதற்கு அவருக்கு சர்வதேச விருதுகள். ஆனால் தமிழ்நாட்டில் ?
பொறி தட்டும் அறிவாற்றல் காவல்துறைக்கு மிகவும் அவசியம். சில நேர்வுகளில் நொடிப்பொழுதில் முடிவு எடுக்க வேண்டும். நேரம் தாழ்த்த முடியாது. நிபுணத்துவம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் களவு சம்பவ இடத்தை பார்வையிட்டதுமே எந்த குற்றவாளி குற்றம் செய்திருக்கக்கூடும் என்பதை உடனே சொல்லி விடுவார்கள். கலவரம் நிகழும் இடத்திற்குச் சென்ற உடனேயே எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துல்லியமாக கணித்து பிரச்னை இல்லாமல் அமைதிக்கு வழிவகுப்பார்கள். இத்தகைய பொறி தட்டும் அறிவு , அனுபவம் மூலம் வருகிறது. இப்போது இத்தகைய அறிவாற்றலை வளர்க்க பாதுகாப்புப் பிரிவில் விசேஷப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அமரிக்கா மின்னிசோட்டா நகரில் கருப்பர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவலர் பிடியில் உயிரிழந்த சம்பவம் போன வருடம் நடந்தது. அதன் தொடர்பாக பெரும் கலவரம் வெடித்தது. ஏன் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு நடந்து கொண்டனர்? க்ஷண நேரத்தில் அவர்களுக்கு எவ்வாறு எதிர்மறை சிந்தனை வந்தது? ஒரு காரணம் அவர்களிடம் ஊறியிருக்கும் இன வெறி. கருப்பர்கள் எப்போதும் குற்றம் புரிபவர்கள் என்ற தவறான அணுகுமுறை இம்மாதிரி கொடூர வினைக்குக் காரணமாகிறது.
கணப் பொறி அறிவை நாம் வளர்த்துக் கொள்ளலாம். சில வேளை உள்ளுணர்வு தோன்றும். முடிவில் அதுவே சரியான முடிவிற்கு வழி வகுக்கும். ஆழ்ந்த சிந்தனை ஈடுபாட்டுடன் வளர்த்தால் அறிவு பொறிகள் தக்க சமயத்தில் தோன்றி உதவிடும். அவற்றை திடீரென்று தோன்றியவையாக நினைக்கிறோம். ஆனால் எப்போதோ ஸ்புரித்தவை ஒரு தூண்டுதலில் வெளிவரும். இவை சரியான உள்ளத்தில் கால் கொண்டால் வியத்தகு விளைவுகள் தோன்றும். இதைத்தான் பல நிஜ நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
சென்ற வார கேள்விக்குப் பதில்:
1993 -இல் இருந்து 2001 வரை 45 வது அமெரிக்க உப ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஆல்பர்ட் கோரே. சுற்றுப்புறச் சூழல் குறித்து அவர் செய்த பணிகளுக்காக 2007 -ஆம் வருடம் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்த வார கேள்வி: சர் சி.வி. இராமன் எந்த வருடம் நோபல் விருது பெற்றார்? அதை எவ்வாறு நாடு கொண்டாடுகிறது?
(விடை, அடுத்த வாரம்)
கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.