விண்வெளி-2021 சோதனைகள்... சாதனைகள்!

விண்வெளி என்றாலே ஆச்சரியம்தான். அதிலும், 2021-ஆம் ஆண்டில் விண்வெளித் துறை அளித்த ஆச்சரியங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
விண்வெளி-2021 சோதனைகள்... சாதனைகள்!


விண்வெளி என்றாலே ஆச்சரியம்தான். அதிலும், 2021-ஆம் ஆண்டில் விண்வெளித் துறை அளித்த ஆச்சரியங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

ஏப். 29-ஆம் தேதி சீன விண்வெளி நிறுவனமான தியான்ஹேவுக்கு பாகங்களைக் கொண்டு சென்ற சீனாவின் லாங் மார்ச் 5 பி ராக்கெட் பாதி வழியிலேயே கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி திரும்பியது. மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் அந்த ராக்கெட் விழக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், மே 9-ஆம் தேதி இந்திய பெருங்கடலில் விழுந்தது. சீனா கவனக்குறைவுடன் செயல்பட்டதாக நாசா விமர்சித்தது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) ஜூன் 29-ஆம் தேதி எதிர்பாராதவிதமாக 540 டிகிரி பின்னோக்கி உருண்டது. ஐஎஸ்எஸ்-இன் 21 ஆண்டுகால வரலாற்றில் மிகத்தீவிரமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ரஷிய விஞ்ஞானிகளால் 47 நிமிஷங்களில் இது சரி செய்யப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு பிரான்சன் விண்வெளிக்குச் சென்ற முதல் கோடீஸ்வரர் என்கிற பெருமையை ஜூலை 11-இல் படைத்தார். அவரது விர்ஜின் கலாக்டிக் விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் பிரத்யேக விமானம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸூம் தனது "ப்ளூ ஆர்ஜின்' நிறுவனத்தின் பிரத்யேக விமானம் மூலம் விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்கொண்டார்.

ரஷியா தன் நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை யுலியா பெரஸில்டு மற்றும் இயக்குநர் கிளிம் ஷிபென்கோ ஆகியோரை ஒரு படப்பிடிப்புக்காக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அக்டோபரில் அனுப்பியது. மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உடல்நலம் குன்றிய வீரருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்காக செல்வதுபோன்று அந்தக் காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் 12 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனர்.

ரஷியா நவம்பர் 15-ஆம் தேதி நடத்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனை பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியது. காஸ்மோஸ்-1408 என்ற செயற்கைக்கோளை ஓர் இடைமறிப்பு ஏவுகணை மூலம் ரஷியா தாக்கியது. இச்சோதனை வெற்றி பெற்றாலும் அந்தச் செயற்கைக்கோள் 1,500 துண்டுகளாகச் சிதறியது. இந்தச் சிதறல்கள் வரும் நாள்களில் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் பிற செயற்கைக்கோள்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். இதேபோன்ற சோதனையை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கடந்த காலங்களில் ஏற்கெனவே நடத்தியிருந்தாலும், ரஷியாவின் சோதனை சர்வதேச அளவில்
விமர்சனத்துக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com