இணைய வெளியினிலே...

நிலத்தில் வலை போட்டுக் காத்திருக்கும் மீனவன் சிலந்தி.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....

நிலத்தில் வலை போட்டுக் காத்திருக்கும் மீனவன் சிலந்தி.

ஜெயபால் மூக்கன் 

என் கை விலங்குகளை நானே  உடைத்தேன்...
ஒவ்வொரு சங்கிலியும் சிறகு முளைத்து பறவைகளாகின்றது.
என் வானத்தை நீங்கள் தட்டிப் பறிக்க முடியாது.
என் விடுதலையை நான்தான் தீர்மானித்தேன் அதனால்,
பூமியில் வேரூன்றித் தளிர்க்கிறது என் கனவு.

ஆசு சுப்பிரமணியன்


ஓர் அடர் மெளனமும்
உறைய வைக்கும் குளிரும் 
இதமான ஒரு நடையும்
ஏகாந்த என் தனிமையும்
ஒரு கோப்பைத் தேநீரும்
சாலையோர மலர்களும்
பரபரப்பாய் உள்ள 
எம்பொழுதுகளில் இருந்து
என்னைப் புதுப்பிக்க
ஒரு நாளின் அவசியத்
தேவையாய் இருக்கிறது. 

உமாமகேஸ்வரி பால்ராஜ்

எவ்வளவுக்கெவ்வளவு
நவீனமென்கிறீர்களோ
அவ்வளவுக்கவ்வளவு- 
இன்னும் நிறைய கழிவறைகளுக்கு...
கதவுகளில்லை என்பதும் நிஜம். 

பொள்ளாச்சி முருகானந்தம்

சுட்டுரையிலிருந்து...


ஒரு பய புள்ளையும் டயரி எழுதறதில்லே. 
ஆனா நியூ இயர் வந்துட்டா மட்டும், 
""டயரி கிடைக்குமாண்ணே''ன்னு உசுரை வாங்குறானுங்க. 
வேணும்னா டயர் வாங்கித் தாரேன். 
உருட்டிக்கிட்டுப் போங்கடா. 
கடுப்பு ஹைகோர்ட்டைக் கௌப்பிக்கிட்டு.

யுவகிருஷ்ணா

கூடுதல் வெளிச்சத்திற்காய் அதிக ஜன்னல்கள் திறந்திருக்கும் வீடுதான்...
விரைந்து தூசேறுகிறது.

நேசமித்ரன்

அன்பாக  பேசிட்டே இருக்கிற  உறவை விட,
அடிக்கடி சண்டை போட்டு சமாதானம் ஆகின்ற உறவுக்குத்தான் 
அன்பும் ஆயுளும் அதிகம். 

ரஷ்ய துறவி  

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் எலெக்ட்ரீசியன் ஆசை இருக்கும்போல... 
ஆனா என்னனா... 
அதுக ரிப்பேர் பாக்றேன் பேர்வழின்னு உருட்டுறதுல பாதிக்கு மேல 
உருப்படாம போயிரும்.

நட்சத்திரா

வலைதளத்திலிருந்து...

கரோனா லாக்டவுன் காலகட்டம் முடிவடையும் இக்காலகட்டத்தில், நிறையப் பேர் தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்வதைப் பற்றி பேசுகிறார்கள்; யோசிக்கிறார்கள்.   

பொதுவாகவே படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த ஆரம்பகட்டம் என்றால், முழுமையாகவே வேறொரு துறைக்குத் தாவலாம். தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் கேட்டால், அனுபவம் நம்மிடம் இருக்கும்போது அதனை ஏணிப்படி போல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முழுமையாக புதிய கடலுக்குள் குதிக்காமல் ஏற்கெனவே தமக்கு இருக்கும் அனுபவம் சார்ந்த துறைகளில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வது, புதிய நிரல் மொழிகளைத் தெரிந்து கொள்வது, அதன் வழியாக அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாலச் சிறந்தது.

டேட்டா சயின்ஸ், பிஸினஸ் இண்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் மாதிரி பல சூடான துறைகளுக்கு கணிசமான எண்ணிக்கையில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். சற்று முயற்சித்தால் கூடுதலாக ஒரு திறனை வளர்த்துக் கொள்ள முடியும். 

வழக்கமாக அலுவலகங்களுக்குச் சென்று வரும் போது நிறுவனங்களில் ஏதாவது செமினார், பயிற்சி வகுப்புகள், கட்டாயத் தேர்வுகள் என்று அவ்வப்பொழுது செதுக்கியிருப்பார்கள். குறைந்தபட்சம் மதிய உணவின் போது, தேநீர் இடைவேளையின் போது ஒன்றிரண்டு சொற்களாவது காதுகளில் விழுந்திருக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்படியில்லை. மின்னஞ்சலில் வரும் வேலையை செய்து முடிப்பதோடு சரி என்று பலரும் இருந்துவிட்டது கண்கூடாகத் தெரிகிறது. ஓடாத வாகனம் போல ஒரே இடத்தில் தேங்கியவர்களின் எண்ணிக்கை அதிகம். இனி ஓரளவுக்கேனும் சர்வீஸ் செய்து கொள்வது அவசியம். அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கும் போது எந்தவிதத்திலும் பழையவர்கள் ஆகிவிடக் கூடாது. 

http://www.nisaptham.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com