கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முந்தி இருப்பச் செயல் - 36:  ஆவதறியும் திறன் - 1

""என் மனதுக்கு நன்றாகப்படவில்லை, இதைச் செய்ய வேண்டாம்'' என்று உங்கள் பெற்றோர் ஒருவரோடொருவர் பேசக் கேட்டிருக்கிறீர்களா? "போகாதே, போகாதே,

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:32 pm

சுப. உதயகுமாரன்


""என் மனதுக்கு நன்றாகப்படவில்லை, இதைச் செய்ய வேண்டாம்'' என்று உங்கள் பெற்றோர் ஒருவரோடொருவர் பேசக் கேட்டிருக்கிறீர்களா? "போகாதே, போகாதே, என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்' என்று பாடி, பொல்லாத வேளை முன்னோக்கி இருப்பது அறிந்தும் (போருக்குப்) போவது சரியா? என்று வீரபாண்டியகட்டபொம்மன் திரைப்படத்தில் (1959) வெள்ளையத்தேவனோடு வாதிடும் வெள்ளையம்மா கதாபாத்திரத்தை நீங்கள் அறிவீர்களா?

நம் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு சிறப்புகளுள்முக்கியமான ஒன்று நம்முடைய ஆவதறியும் திறன்,அதாவது ஆகப்போவதை அதற்கு முன்னரே அறியும் திறன். இந்தத் திறனை நம்மில் பெரும்பாலானோர்பெற்றிருக்கக் காரணம், எதிர்காலம் பற்றிய நம்முடைய ஆர்வமும், அக்கறையும்தான்.

குடும்பத்தில் ஒருவரின் எதிர்காலம் மற்றவர்களின் எதிர்காலங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிறதுஎன்பதை நாம் துல்லியமாக உணர்ந்திருக்கிறோம். வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தால், அதன் சாதகத்தைக் கணித்து, தாத்தா வாழப் போகும் காலம், மாமன் பார்க்கப் போகும் வேலை, சித்திக்கு நடக்கப் போகும் திருமணம் என அனைத்தையும் அறிய முயல்கிறோம்.

துல்லியமாக அறிய முடியாத, நமது கட்டுக்குள்முழுமையாக அடங்காத எதிர்காலத்தை இறைநம்பிக்கை, வழிபாடு, பரிகாரம் போன்ற ஆன்மிக வழிகளில் அளந்து விட, அடக்கி விட, அமைத்து விட அதீத முயற்சிகள் மேற்கொள்கிறோம்.


சாதகம், பஞ்சாங்கம், கைரேகை, எண் கணிதம், குறி கேட்டல், கிளி சோதிடம், இராப்பாடிக்காரன் பாட்டு, பூ வைத்தல், பூசை வைத்தல், குலதெய்வ வழிபாடு, அருள்வாக்கு, மாந்திரீகம் என எத்தனையோ வழிகளில் எவருக்கும் தெரியாத எதிர்காலத்துக்குள் எட்டிப் பார்க்க முனைகிறோம் நாம்.

எதிர்காலம் அல்லது வருங்காலம் என்பது முன்னரே தயாரிக்கப்பட்டு விட்ட திரைப்படம் ஒன்றின் அடுத்த காட்சி போல, தன்னியக்கமாக வரும் என்று நம்பு
கிறோம். ஆண்டவன் கட்டளை, பிறவிப்பயன், தலைவிதி, கர்மவினை என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, நம்முடைய எதிர்காலம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு விட்டது என்று உறுதியாக நம்புகிறோம்.

குறும்புக்காரச் சிறுவர்கள் சிலர் அந்த ஊரில் வாழ்ந்து வந்த அறிஞர் ஒருவரின் அறிவைச் சோதிப்பதென முடிள செய்தார்கள். அவர்களுள் ஒருவன் ஒரு சிறு குருவியைப் பிடித்து தன் கைகளுக்குள் மூடிப் பொதிந்து வைத்துக் கொண்டான். அனைவருமாக அந்த அறிஞரிடம் சென்று, ""இந்தக் குருவி உயிரோடிருக்கிறதா, அல்லது இறந்துவிட்டதா என்று சரியாகச் சொல்லுங்கள் பார்ப்போம்'' என்று சவால் விட்டனர்.

ஒருகணம் சிந்தித்தார் அந்த மூதாட்டி. "உயிரோடிருக்கிறது' என்று சொன்னால், அதனை கைகளுக்குள்ளேயே வைத்து நெரித்துக் கொன்று, தான் சொன்னது தவறு என்று நிறுளவார்கள். "இறந்துவிட்டது' என்று சொன்னால், அதனைப் பறக்கவிட்டு தன்னை அறிவற்றவர் என்று கேலி செய்வார்கள். எனவே அறிஞர் சொன்னார்:

""எல்லாமே உன் கைகளில்தான் இருக்கிறது!''

நம் ஒவ்வொருவருடைய எதிர்காலங்களும் (பன்மை மொழியைக் கவனியுங்கள்!) நம் கைகளுக்குள்ளேயே அடங்கியிருக்கின்றன. அவற்றை நம்முடைய அறிள, ஆற்றல், திறமைகளின் உதவியோடு அலசி ஆராய்ந்து, சிறந்ததொரு தெரிவைத் தேர்ந்தெடுத்து, அழகுற அமைத்துக் கொள்வதுதான் சிறப்பு என்று கருதுகிறது எதிர்காலம் குறித்த அறிவியல் அணுகுமுறை.

அறிவியல்பூர்வமாக எதிர்காலத்துக்குள் நம்மால் ஓரளள எட்டிப் பார்க்க முடியும். நாம் விரும்பும் எதிர்காலத்தை நம்மால் பெருமளள அமைத்துக் கொள்ளளம் முடியும் எனக் கொள்ளும் இந்த அண்மை அணுகு முறையின் அடிப்படையில், "எதிர்காலங்களியல்' (ஃபியூச்சர்ஸ் ஸ்டிடீஸ்) எனும் பாடமே பிறப்பெடுத்து, வளர்ந்தோங்கி, ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்ற ஹவாய் பல்கலைக்கழகம் "எதிர்காலங்களியல்' குறித்த உயர்கல்வி ஆய்ளக்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.

மலையேறும்போது நாமே நமது பாதையை வகுத்துக்கொள்வது போல, கடலோடும்போது நாமே நமது படகின் போக்கை நிர்ணயித்துக்கொள்வது போல, நம்முடைய எதிர்காலங்களை நமது எண்ணங்களால், சிந்தனைகளால், விருப்பு வெறுப்புகளால், தெரிளகளால், திட்டங்களால், செயல்பாடுகளால் நாமே அமைத்துக் கொள்கிறோம்; அமைத்துக் கொள்ள முடியும்; அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் "எதிர்காலங்களியல்' கல்வியின், ஆய்வின், துறையின் அடிப்படை.

உலகப்புகழ் பெற்ற "எதிர்காலங்களியல்' பேராசிரியர்களான யொஹான் கால்டுங், ஜிம் டேட்டர், சொஹைல் இனயத்துல்லா போன்றோரோடு சேர்ந்து படிக்கும், பயணிக்கும், எழுதும், எடுத்தியம்பும் அற்புதமான வாய்ப்புகள் எனக்குக் கிட்டின. தனிமனித வாழ்வில் தொடங்கி, உலகளாவிய பிரச்னைகளை உள்ளடக்கி, அண்டசராசரம் வரை அனைத்து விடயங்களின் எதிர்காலங்கள் குறித்தும் சிந்திக்கிறவர்களை "எதிர்காலர்' (ஃபியூச்சரிஸ்ட்) என்றுஅழைக்கிறோம்.

தமிழர்களாகிய நமக்கு வருங்காலம் குறித்து சிந்திக்களம் வழமை போல வள்ளுவமே வழிகாட்டுகிறது:
அறிளடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.
அறிளடையோர் என்போர் ஆகப்போவது என்னவென்று அறிவார்கள்; ஆனால் அறிவில்லாதவரோ அதனை அறிய இயலாதவர்களாக இருக்கின்றனர்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளவல்ல அறிளடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுளமே இல்லை.
ஆக ஆவதறியும் திறனுடையவர்கள் மட்டுமே அறிவார்ந்தவர்கள் என்பதையும், எதிரதாக் காக்கும் அறிள நிரம்பப் பெற்றவர்களால் மட்டுமே வருங்காலத்தை வகுத்தும், பெருக்கியும் கொள்ள முடியும் என்பதையும் நாம் உணர்கிறோம்.
"வருங்காலச் சிந்தனையற்ற, அதற்கு தேவையான முன் தயாரிப்புகளற்ற வாழ்ள அழிந்தே போகும்' என்கிறார் வள்ளுவர்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
ஒரு தீங்கு வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளா தவனுடைய வாழ்க்கை நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட துரும்புபோல அழிந்து விடுமாம்.
இன்னோரன்ன வள்ளுவச் சிந்தனைகளின் துணையோடு, ஆவதறியும் திறனின் ஒருசில அடிப்படைகளை நாம் கண்டுணர முடியும்:
முதலாவதாக, "எதிர்காலம்' என்று ஒருமையிலேயே சிந்திப்பது சரியல்ல, "எதிர்காலங்கள்' என்று பன்மைத்தன்மையோடுப் பார்ப்பதே சிறப்பு என்பதை நினைவிற் கொள்வோம். ஆவது ஆயிரம் வழிகளில்
ஆகலாமே? எதிர்காலம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒற்றை விதிப்பயனை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையல்ல. கடல் போன்ற பரந்து விரிந்த பெருவெளியில் கடிதில் பயணிக்க, உங்கள் முன்னே திறந்து கிடக்கும் எண்ணற்ற பாதைகளின் தெரிளகளே நமது எதிர்காலங்கள்.
இரண்டாவதாக, எழுத்தாளர் தமிழ்வாணன் சொல்வதுபோல, "எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி' என்று நமக்கான வழியைத் தேர்ள செய்து கொள்வது முழுக்க முழுக்க நமது பொறுப்பு. உங்களின் எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது; உங்களின் கைகளில் மட்டும்தான் இருக்களம் வேண்டும். உங்கள் வாழ்வின் வழிகளை இன்னொருவரின் கணிப்பிற்கு, கதையாடலுக்கு, கட்டுப்பாட்டுக்கு விட்டுவிடுவது என்பது அறிளடைமை ஆகாது.

மூன்றாவதாக, வெறும் பாதை மட்டுமே போதாதே? பயணத்தின் இலக்கும் இன்றியமையாததாயிற்றே? நாம் "எங்கே போகிறோம்' எனும் இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு பயணிப்பவர்களுக்கும், "எங்கோ போகிறோம்' என வெறுமனே அலைந்து திரிபவர்களுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே பாதையைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளாமல், எங்கே சென்றடைய விரும்புகிறோம் எனும் இலக்கையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நான்காவதாக, பயணத்தைத் தொடங்குவதும், அதனை தொய்வின்றித் தொடர்வதும் மிகளம் முக்கியம். பாதை, போகுமிடம், பயணம் என்பவைதான் ஏற்புடைய எதிர்காலங்களுக்கு இட்டுச் செல்கின்றன.

ஆவதறியும் திறன் என்பது வரவிருப்பதை முன்னுணர்ந்து கொள்வது மட்டுமல்ல, வர விரும்புவதை வடிவமைத்துக் கொள்வதும்தான். தனிமனிதனுக்கு மட்டுமல்ல, மனித குமுகங்களுக்கும் வருங்காலத்தை வகுத்துக் கொள்ள இதுதான் வழிமுறை. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய கனளத் தமிழ் நாடு பற்றி கடிதில் சிந்திக்கிறார்:

என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்விகற்றுப்
பன்னருங் கலைஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
இப்படி ஓர் அழகிய கனவை இலக்காக்கிக் கொண்டு, எதிர்காலம் நோக்கிய பயணத்தை இன்றே இங்கேயே இனிதே தொடங்குவோம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.