

சாமானிய மனிதராக இருந்தாலும், மிகுந்த வசதி வாய்ப்பு உள்ளவராக இருந்தாலும், நம்பிக்கையுடன் திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றியை எளிதில் தங்கள் வசப்படுத்திக் கொள்ள முடியும்.
தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, தொழில்முறை நிபுணர்களாக இருந்தாலும் சரி, தாங்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் அடைவதற்கு - வயது, அனுபவம், அறிவு - இவற்றையெல்லாம் தாண்டி எதிர்காலத்திற்காகத் திட்டமிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. திட்டமிட்டால் மட்டும் போதாது, அடைய வேண்டிய இலக்கு குறித்த கனவுகாண வேண்டும். இது மிக முக்கியமான ஒன்று.
விளையாட்டு, வர்த்தகம் அரசியல் இது போன்ற பல துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது, ஒவ்வொருவரும் அவர்கள் அடைய விரும்பும் இலக்கை அடையாளம் கண்டு, அதற்கான குறிக்கோள்களை வகுத்து, அதை திட்டமிட்டு நம்பிக்கையுடன் செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.
ஒருவருக்கு பல குறிக்கோள்கள் இருக்கலாம். பல திட்டமிடல்கள் இருக்கலாம். பலவிதமான ஆசைகள் கூட இருக்கலாம். ஆனால் அவருடைய முன்னேற்றப்பாதை அடைபட்டுப் போயிருக்கலாம். அதற்கு திட்டமிடாதது, தெளிவான முன்னேற்ற பாதைகளை வகுக்காமல் இருப்பதே காரணமாக இருப்பதை சற்று கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும். எவ்வாறு செயல்படுத்துவது என்ற புரிதல் இல்லாததாலும் கூட முன்னேற்றப் பாதை தடை பட்டிருக்கக் கூடும். இத்தகைய பிரச்னைகளுக்கு தனிநபர் மேம்பாட்டுத் திறனை வளர்த்துக் கொள்வது பலன் தரக்கூடியதாக இருக்கும்.
தனிநபர் மேம்பாட்டு திறன் என்பது மதிப்புக்கூட்டு பொருளைப் போன்றது. சாதாரணமாக தேங்காய் நாரை பிரித்து எடுத்து அந்த நாரைப் பயன்படுத்தி சோபாவை உருவாக்குவது, கயிறுகளை உருவாக்குவது என்பன போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டு பொருள்களை உருவாக்க முடியும். அதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும். அதுபோல் ஒருவரிடம் இருக்கும் கல்வி அறிவையும், செயல்திறனையும் அப்படியே பயன்படுத்தாமல் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, அதில் வேறுபட்ட பல திறன்களைப் புகுத்தி ஏற்கெனவே உள்ள திறமைகளை மேம்படுத்த வேண்டும். அப்படி மேம்படுத்தும் செயல்முறைகளில் ஈடுபட்டு வெற்றி பெற்று கிட்டும் திறனைத்தான் "தனிநபர் மேம்பாட்டுத் திறன்' என அழைக்கிறார்கள்.
நமது பலம் என்ன? நமது பலவீனம் என்ன? நமக்கு இருக்கும் வாய்ப்புகள் எவை?அவற்றை அடைவதற்கான வழிகள் எவை? என்பதை எல்லாம் கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த தனிநபர் தன் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது திறன்களை ஒருங்கிணைத்து ஒரு செயலில் ஈடுபடும்போது அதில் கிடைக்கும் பலன்கள் அதிகம். ஒருவரின் சொந்த வாழ்க்கையிலும், அவரின் தொழிலிலும் நேர்மறையான சிந்தனைகளை இத்தகைய தனிநபர் மேம்பாட்டுத் திறன் அளிக்கும். தொழில் சார்ந்த போட்டிகளிலும் வெல்வதற்கும் தனிநபர் மேம்பாட்டுத் திறன் உதவும்.
ஒவ்வொருவரின் பண்புகளும், பழக்க வழக்கங்களும், அறிவு, அனுபவம் போன்றவையும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும், வேறுபட்டவையாகத்தான் இருக்கின்றன. அதைப் போன்று, தனிநபர் மேம்பாட்டு திறன்களும் நபருக்கு நபர் வேறுபட்டுத்தான் அமையும்.
நாம் எப்படி இருக்கிறோம் என்பதை இப்பொழுது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதன் மூலம் தான் அறிய முடியும். நீங்கள் எதில் சிறந்தவர்? நீங்கள் எத்தகைய வேலையைச் செய்ய வேண்டும் ?அதற்கு எந்த வகையிலான உதவிகள் தேவைப்படும்? உங்கள் உயர்வுக்கு எது தடைக்கல்லாக அமையும்? என்பன போன்ற விஷயங்கள் தாம் தனிநபர் மேம்பாட்டு திறனை வளர்ப்பதற்கான அடிப்படைகளாக இருக்கின்றன.
திறன்கள் தானாகவே வருவதில்லை. நாம்தான் முயன்று அவற்றை உருவாக்க வேண்டும்.
நமது இலக்கை அடைவதற்காக நம்முடைய முழு திறமைகளையும் நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியம். அத்துடன் நாம் கடக்க வேண்டிய பாதையின் தூரத்தைக் கணக்கிட்டு, தேவையான இடத்தில் தேவையான அளவுகோல்களைப் பயன்படுத்தி நாம் இலக்கை நோக்கி எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
எப்போதும் மிகப்பெரிய இலக்கை மட்டும் குறி வைக்காமல், சிறிய ,நடுத்தர இலக்குகளை நோக்கியும் நாம் பயணிக்க வேண்டும். அது மிகப் பெரிய இலக்குகளை நாம் அடைவதற்குத் தேவையான திறன்களை நமக்கு வழங்கும். அதாவது ஒரு திருமண நிகழ்வில் பல்வேறு பணிகள் இருக்கும் சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியைப் பிரித்துக் கொடுத்து அந்தப் பணியை நமது திறனால் செம்மைப்படுத்தி ஒருங்கிணைக்கும்போது அந்தத் திருமணம் சிறப்பாக நடக்கும். அது போல பெரிய இலக்கை சிறுசிறு இலக்குகளாகப் பிரித்து செயல்படுத்தினால் மிகச் சிறப்பாக அமையும்.
எனவே வரும் காலங்களில் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக செய்வதைக் காட்டிலும் அதில் பல்வேறு திறன்களைப் பயன்படுத்தி திட்டமிட்டுச் செயல்படுபவர்களே மிகச்சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.