வாய்ப்புகளின் கருவூலம் ஃபேஷன் டிசைனிங்!

ஃபேஷன் டிசைனிங் வளர்ந்து வரும் தொழிலாக மாறி வருகிறது. எண்ணற்ற வேலைவாய்ப்புகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உருவாக்கித் தரும் துறையாக அது மிளிர்ந்து வருகிறது.
வாய்ப்புகளின் கருவூலம் ஃபேஷன் டிசைனிங்!

ஃபேஷன் டிசைனிங் வளர்ந்து வரும் தொழிலாக மாறி வருகிறது. எண்ணற்ற வேலைவாய்ப்புகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உருவாக்கித் தரும் துறையாக அது மிளிர்ந்து வருகிறது. தற்போது இத்துறை மிகவும் பிரபலம் அடைந்து வருவதால், ஃபேஷன் டிசைனிங் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இக் கல்வி கற்ற மாணவர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியும் அல்லது தாங்களாகவே புதிய ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தையும் தொடங்கி நடத்த முடியும்.

தாங்கள் உடுத்தும் உடை, அணியும் ஆபரணம் அனைத்திலும் கலைநயம் இருக்க வேண்டும் என்று தற்போதுஎல்லாரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கலை நுட்பத்துடன் உடைகளையும், அணிகலன்களையும் டிசைன் செய்வதற்கான தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருவதுதான் ஃபேஷன் டிசைனிங் கல்வி. பெரும்பாலானோர் உடைகளுக்கு மட்டும்தான் ஃபேஷன் டிசைனிங் பயன்படும் என்று நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. தலை முதல் பாதம் வரை நாம் பயன்படுத்தும் அனைத்திலும் கலை நயத்தைப் புகுத்தி தயாரிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்த முடியும். அதற்கு உதவுவதுதான் ஃபேஷன் டிசைன்கல்வியின் நோக்கமாகும். ஃபேஷன் டிசைன் கல்வி கற்றவர்கள் அத்துறையிலேயே பல்வேறு விதங்களில் தங்களுடைய பணியைச் செய்யலாம். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

ஃபேஷன் டிசைனர்:

அசிங்கமாக இருக்கும் ஒவ்வொன்றையும் அழகாக மாற்றும் திறன் படைத்தவர்கள்தாம்ஃபேஷன் டிசைனர்கள். இடத்திற்கு தகுந்த மாதிரி, கலாசாரத்திற்கு தகுந்த மாதிரியான டிசைன்களை உருவாக்குபவர்கள் ஃபேஷன் டிசைனர்கள். மக்கள் விரும்பும் புதிய கலை நுட்பங்களைத் தெரிந்துகொண்டு அந்த நுட்பத்தை தங்களின் படைப்பாற்றல் சிந்தனைகள் மூலம் செதுக்கி புதிய டிசைன்களில் உடைகள், ஆபரணங்களை உருவாக்குபவர்தான்ஃபேஷன் டிசைனர்.

எனவே ஃபேஷன் டிசைனர்கள், மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்பவராக இருக்க வேண்டியது அவசியம். ஃபேஷன் டிசைன் கற்கும் மாணவர்கள் மிகுந்த படைப்பாற்றல் திறன் உடையவர்களாக இருப்பதுடன், நொடிக்கு நொடி மாறும் டிசைன்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டியதும் அவசியம். அத்துடன் ஓவிய அறிவு, தையல் அறிவு ஆகியவை இருந்தால் இத்துறையில் மிகப் பிரகாசமாக அவர்களால் ஜொலிக்க முடியும். வணிகம் தொடர்பான அறிவு,சந்தைப்படுத்தும் திறன் குறித்த தெளிவான பார்வையும் இருந்தால் இத்துறையில் மிக எளிதாக வெற்றி பெற முடியும்.

ஃபேஷன் இல்லஸ்ட்ரேட்டர்:

ஃபேஷன் டிசைனர் கூறும் நுட்பங்களை, டிசைன்களை, வடிவமைப்புகளை உள்வாங்கி அதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஓவியமாக அல்லது திரைக்காட்சியாக உருவாக்கும் பணியை செய்பவர்தான் ஃபேஷன் இல்லஸ்ட்ரேட்டர் எனப்படுகிறார்.

இவரது பணி தான் ஃபேஷன் டிசைனிங்கில் முதன்மைப் பணியாகும்.

ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்: இவர்கள் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைக்க வேண்டியதோ, புதிய ஆடை அணிகலன்களை உருவாக்க வேண்டியதோ இவர்களுடைய பணி இல்லை. ஒரு வாடிக்கையாளரின் தேவை என்ன அல்லது அந்த வாடிக்கையாளருக்கு எந்த விதமான ஸ்டைல் நேர்த்தியாக இருக்கும் என்பதை அறிந்து அதற்குத் தேவையான வடிவமைப்பை தெரிவிப்பவர்கள்தாம் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் எனப்படுபவர்கள்.

ஃபேஷன் கோ ஆர்டினேட்டர்:

புதிதாக ஆடைகளை வடிவமைத்து, கலை நுட்பங்களுடன் அணிகலன்களை உருவாக்கும் பணியை ஃபேஷன் டிசைனர்கள் செய்தாலும் அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டியது மிக அவசியம். இப்பணியை ஃபேஷன் கோ ஆர்டினேட்டர்கள் மேற்கொள்கின்றனர். விளம்பரப்படுத்தல், ஃபேஷன் ஷோக்களை ஏற்பாடு செய்தல் போன்றவை இவர்களின் பணியாக இருக்கும்.

ஃபேஷன் கன்சல்டன்ட்:

ஃபேஷன் கன்சல்டன்ட் தொழில்துறை குறித்த கூடுதல் அறிவு பெற்றவராக இருக்க வேண்டியது அவசியமாகும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மக்கள் விரும்பும் மாற்றங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுவதுடன் புதிய ஐடியாக்களை செயல்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் ஆலோசனைகளையும் வழங்கும் திறன் பெற்றவராக ஃபேஷன் கன்சல்டன்ட் இருக்க வேண்டும்.

ஃபேஷன் மெர்க்கண்டைஸர்:

ஃபேஷன் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட புதிய டிசைன்களை சந்தைப்படுத்துவதற்கும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் வணிகர்களின் பங்கு மிக அவசியம் .

இத்துறையில் ஈடுபடும் வணிகர்கள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட பொருள்கள் சார்ந்த தெளிவு பெற்றிருந்தால் விற்பனையை எளிதாகச் செய்துவிட முடியும்.

கல்வி நிறுவனங்கள்:

இதற்கான திறன்களையும், புதிய விஷயங்களையும் கற்றுக் கொடுப்பதற்காக இந்தியாமுழுவதும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (நிப்ட்) நிறுவனங்கள் உள்பட பல கல்விநிறுவனங்கள் ஃபேஷன் டெக்னாலஜியைக் கற்பித்து வருகின்றன. இவை தவிர எண்ணற்ற கல்விநிறுவனங்கள் இக்கல்வியை அளித்து வருகின்றன.

தரமான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து ஆடை வடிவமைப்பை மட்டுமல்ல, நமது வாழ்க்கை பாதையையும் சீராக வடிவமைத்து வெற்றி நடை போட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com