தீய நண்பர்கள்... தவிர்ப்பது எப்படி?

"நண்பனில் யார் நல்ல நண்பன், கெட்ட நண்பன் என்பதா?
தீய நண்பர்கள்... தவிர்ப்பது எப்படி?
Updated on
3 min read


"நண்பனில் யார் நல்ல நண்பன், கெட்ட நண்பன் என்பதா?
நண்பன் என்றாலே நல்லவன்தான்' என்ற வசனம் சினிமாவிற்கு
வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் உண்மையில்... நண்பர்களில் கெட்ட குணம் கொண்ட நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கிய உறவாக இருக்கும் நட்பு, வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்றும் கூறலாம். ரத்த பந்தமின்றி, சாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து என பல பாகுபாடுகளைக் கடந்து உதிக்கும் நட்பு, அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.

பலருக்கு பல சூழ்நிலைகளில் ஆதரவாக, உதவியாக நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாடவும், துக்கமான நேரங்களில் தேற்றவும், கடினமான நேரங்களில் உதவி புரியவும் என ஒட்டுமொத்தமாக குடும்பத்தினரைத் தாண்டி - உறவினர்களைத் தாண்டி - வாழ்வில் ஒரு சிறந்த துணையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவதே நட்பு என்று கூறுவது உண்மைதான். எனினும் நட்புலகில் சில தீயநண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நல்ல நண்பர்களால் எந்தஅளவுக்கு நன்மையோ, அதைவிட பன்மடங்கு தீமை தீய நண்பர்களால் ஏற்படுவதும் நிகழ்கின்றது. இன்றைய காலகட்டத்தில் புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபட நண்பர்களே காரணமாக இருக்கின்றனர்.

தீய நண்பர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்களிடம் இருந்து எப்படி ஒதுங்கிக் கொள்வது?

எதிர்மறையாளர்:

முழுக்க முழுக்க எதிர்மறை கருத்துகளை மட்டும் கொண்டிருப்பவர்கள் எந்த நேரத்திலும் உங்களிடமும் எதிர்மறை கருத்துகளை மட்டுமே பேசுவார். அப்படி இருந்தால் அவர் உங்களுக்கு தீய நண்பர். நீங்கள் ஒரு செயலை செய்ய முற்படும்போது "இது உன்னால் முடியாது' என்று எதிர்மறையாகப் பேசுபவர், உங்களின் தன்னம்பிக்கையை குலைப்பவர், எப்படி உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் உங்களைப் பாராட்டத் தயங்குவார்கள். மாறாகஉங்களுடைய செயல்களில் குறை கண்டுபிடித்து கூறுவார்கள்.

எனவே, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவர்களை உங்கள்நண்பர்களாக வைத்திருங்கள்.

தேவைக்கு பழகுபவர்:

சிலர் உங்களின் நட்புக்காக அன்றி உங்களின் திறமை, சமூக அந்தஸ்து, பொருளாதாரம் போன்ற ஏதாவது ஒன்றிற்காக உங்களிடம் பழகலாம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி நட்பு கிடைப்பது அசாதாரணம். தங்களுடைய தேவைக்காகப் பழகுபவர்கள்தாம் இக்காலத்தில் அதிகம். இருந்தாலும் தேவைக்கு மட்டுமே பழகும் நபர் உங்களுக்குஉண்மையான நண்பராக இருக்க வாய்ப்பில்லை.

உங்களை மெச்சுவது போல உங்களிடம் ஒன்றிப்பழகி அவர்களுக்குத் தேவையானவற்றை முழுவதுமாக நிறைவேற்றிக்கொள்வார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக உங்களை நண்பராக வைத்திருப்பார்கள். அன்பு, ஆதரவு, உதவிஉள்ளிட்டவை இரு தரப்பிலும் பரிமாறப்பட்டால் மட்டுமே அது நல்ல நட்பு.

எல்லைக்குள் வைத்திருப்பவர்:

உங்களுடைய நண்பர் அழைக்கும்போதெல்லாம் உங்களுடைய அனைத்து வேலைகளையும் பற்றி கவலைப்படாமல் நீங்கள் அவருடன் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஆனால் அந்த நண்பர்நீங்கள் அழைக்கும்போது வராமல், தன் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்கிறார் என்றால், அவர் உங்களைப் பயன்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அதைவிட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அவர் உங்களை நிறுத்தி வைத்திருக்கிறார் என்றே கருத வேண்டும். அவரின் சொல்லுக்கு நீங்கள் கட்டுப்படுவதைப் போலவே உங்களுடைய சொல்லுக்கும் அவர் கட்டுப்பட வேண்டும். அதுவே உண்மையான நட்பு. இவ்வகையான தீய நண்பர்களிடம் இருந்து விலகாவிட்டால்உங்களின் நேரமும் ஆற்றலும் தேவையின்றி செலவாகும்.

நாடகமாடுபவர்:

சிலர் நீங்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் உங்களைத் தேற்றுவதுபோல நாடகமாடி பின்புறத்தில் நீங்கள் பிரச்னையில் இருப்பதை மனதுக்குள் ரசிப்பார்கள். பல நேரங்களில் கோபமாக பேசி உங்களைக் காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். "சண்டை இடுவதற்கு உன் மீதுள்ள அன்பு தான் காரணம்' என்றெல்லாம் சமாதானம் பேசுவார்கள். நீங்கள் பிரச்னை இல்லாமல் சந்தோசமாக இருக்கிறீர்கள் என்றால் அவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நண்பனின் பிரச்னைக்குத் தீர்வு காண்
பவரே உண்மையான நண்பராக இருக்க முடியும்.

சுயநலமிக்கவர்:

இந்த உலகத்தில் ஒருவகையில் அனைவரும் சுயநலவாதிகள்தான். அந்த சுயநலம் எந்த விகிதத்தில் உள்ளது என்பதைப் பொருத்துதான் பொதுநலம் கணக்கிடப்படுகிறது.

நண்பர்களில் சிலர் சுயநலமாக நடந்து கொள்ளலாம். அவர்களின் பிரச்னைகளை உங்களிடம் கூறுவார்கள், உங்களிடம் உதவிகளைப் பெறுவார்கள். ஆனால், உங்களது பிரச்னைகளை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். நீங்கள் உதவி கேட்கும்போது தட்டிக்கழிப்பார்கள். உங்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிற சிக்கலான சூழ்நிலைகளில் அவர்கள் ஊக்கப்படுத்தத் தயங்குவார்கள்.

உண்மையான நட்பில் சுயநலம் ஒருபோதும் இருக்காது. நண்பனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பண்பு உண்மை நட்பிற்கு வேண்டும்.

தரம் தாழ்த்திப் பேசுபவர்:

நண்பர் ஒருவர் உங்களை மற்றவர்கள் முன்னால் தாழ்த்திப் பேசினால் அவர் உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க முடியாது. நகைச்சுவையாகப் பேசுவது
போல நண்பர்கள் முன்னிலையில் கிண்டல் செய்வது, நக்கலடிப்பது போன்ற
வற்றை உண்மையான நண்பர் செய்ய மாட்டார்.

உண்மையான நண்பர்கள் ஒருவரையொருவர் தாழ்த்திப் பேசுவதில்லை
என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேநேரத்தில் உங்களுடைய தவறுகளை உங்களிடம் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டி திருத்தினால் அவர் நல்ல நண்பர்.

விமர்சனங்களை முன்வைப்பவர்:

மற்றவர்களைப் பற்றி தொடர்ந்து உங்களிடம் விமர்சனங்களை முன் வைப்பவர், வதந்திகளைப் பரப்புபவர் உங்களுடைய நண்பர் என்றால் அவர் உங்களைப் பற்றியும் உங்கள் முதுகுக்குப் பின்னால் பேச வாய்ப்புள்ளது. உண்மையான நணபர்கள் அவ்வாறு முதுகுக்குப் பின்னால் பேசமாட்டார்கள்.

மேலும், இதுபோன்ற நண்பர்கள் உங்கள் ரகசியங்களைக் காப்பாற்றமாட்டார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருவரிடம் குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டும் பிடித்திருக்கிறது என்பதற்காக அவரை நண்பர்களாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாம் மேற்கூறிய தீய பண்புகளில் ஏதேனும் ஒன்றிருந்தாலும் அவரை விலக்கி வைப்பதே உங்களுக்கு நல்லது.

அளவுக்கு அதிகமாக நண்பர்களை வைத்திருப்பதை விட, உங்களுக்கு
உண்மையாக இருக்கக் கூடிய ஒரு சில நண்பர்களைக் கொண்டிருப்பது நல்லது. நல்ல நண்பர்களுடன் பழகும்போது, நம் குணாதிசயங்கள் மேம்படும். நல்ல நண்பனை நீங்கள் எதிர்பார்ப்பது போல, உங்களிடமும் மற்றவர்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். நீங்களும் மற்றவர்களுக்கு நல்ல நண்பனாக இருக்க
முற்படுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com