ஒலிம்பிக் போட்டி... கிராமத்து இளைஞர்!

ராமநாதபுரம் கமுதி அடுத்துள்ள சிங்கப்புளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன். காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஒலிம்பிக் போட்டி... கிராமத்து இளைஞர்!

ராமநாதபுரம் கமுதி அடுத்துள்ள சிங்கப்புளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன். காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இம்மாவட்டத்திலிருந்து முதல் முறையாக இவர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் காவல்துறையினர், நண்பர்கள் அனைவரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்புளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி- பஞ்சவர்ணம் தம்பதியினர் ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் கூலித் தொழில் செய்து வருகின்றவர்கள். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். இரண்டு பெண் பிள்ளைகள். இதில் நாகநாதன் இரண்டாவது மகன் ஆவார்.
நாகநாதன் கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பள்ளிப் பருவத்திலேயே தடகளப் போட்டிகளில் நாகநாதன் ஆர்வமுள்ளவராக இருந்திருக்கிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இவரது உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம், நாகநாதன் விளையாட்டு திறமையைக் கண்டறிந்து அதை வெளிக்கொணர்ந்து, இப்பள்ளியின் சார்பாக மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று இவரை ஊக்க
படுத்தியுள்ளார்.
அதன் விளைவாக, கல்வி மாவட்ட அளவிலும், மற்றும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் 30 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்து கமுதி அடுத்துள்ள கோட்டைமேட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
கல்லூரியில் 2016 -இல் பட்டப் படிப்பை தொடங்கியுள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டாம் ஆண்டிலேயே இவருக்கு காவல்துறையில் பணிகிடைத்ததால், கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 2017 -இல் காவல்துறையில் பணியில் சேர்ந்திருக்கிறார்.
சென்னையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த பிறகு தமிழ்நாடு காவல்துறை சார்பில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பகுதிகளில் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்று காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் காவல்துறை சார்பிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தடகளப் போட்டியிலும், ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மார்ச் 15 முதல் 19 வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்ததால், இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றார்.
இதனையடுத்து வந்த தகுதி சுற்றுக்களில் தேர்ச்சி பெற்று, 32 -ஆவது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீ. ரிலே ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்க நாகநாதன் தேர்வு பெற்றுள்ளார்.
நாகநாதன் உள்பட தமிழக அளவில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் தேர்வாகியுள்ளதாக தமிழ்நாடு தடகள அசோஷியேஸன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகப் அறிவித்துள்ளது.
""ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், எனது கிராமத்திற்கும், நான் பணிபுரியும் தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்கிறார் நாகநாதன்.
""எனது மகன் பள்ளியில் படிக்கும் போதே விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.
அப்போது காலணி வாங்குவதற்குக் கூட வசதியில்லாமல், கடன் வாங்கி காலணி வாங்கி கொடுத்துள்ளேன். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நாங்கள் அவரை படிக்க வைத்தாலும், நாகநாதனின் சொந்த முயற்சியால்,
திறமையால் காவல்துறைக்கு தேர்வாகி தற்போது, தாய்நாட்டிற்காக ஒலிம்பிக்கில் விளையாட உள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இந்தியாவிற்காக ஒட்டப்போட்டியில் தங்கம் வென்று வர எங்களது குலதெய்வத்தை வேண்டி வருகிறோம்'' என்கிறார் நாகநாதனின் தாயார் பஞ்சவர்ணம்.
""தமிழக அரசு நாகநாதனுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது. இது அவரின் குடும்பத்திற்கும் அவருக்கும் பெரும் உதவியாக இருக்கும்'' என்கிறார் நாகநாதனின் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம்.
இந்திய விளையாட்டு துறையில் அரசியல் தலையீடு இல்லாமல், நாகநாதனை போல் கிராமப்புறங்களில் உள்ள திறமைசாலிகளைக் கண்டறிந்து நாட்டிற்காக விளையாட அனுமதித்தால், வரும் காலத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சமமாக பதக்கப்பட்டியலில் நமது இந்திய நாடு
இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com