கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 7: இளைய பாரதம் என்றும் உன்னதம்!

சாதாரண மக்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது உழைப்பால்தான் வருகிறது. அதிர்ஷ்டம் என்பது என்ன? உழைப்பின் மூலம் வரும் வாய்ப்புகளை சாதகமாக புனைபவரே அதிர்ஷ்டக்காரர்.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 7: இளைய பாரதம் என்றும் உன்னதம்!

சாதாரண மக்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது உழைப்பால்தான் வருகிறது. அதிர்ஷ்டம் என்பது என்ன? உழைப்பின் மூலம் வரும் வாய்ப்புகளை சாதகமாக புனைபவரே அதிர்ஷ்டக்காரர். "வெற்றி புனையும் வேலே போற்றி' என்று உழைப்பு போற்றப்படுகிறது! உழைப்பு, விடாமுயற்சி, வாய்ப்புகளின் சங்கமமே அதிர்ஷ்டம் .

வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை. "எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்' என்ற வகையில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தினால் தான் வாய்ப்புகள் பெருகும். 

மக்களை உழைக்கத் தூண்டும் வகையில் சமுதாயத்தில் மனநிலையை உருவாக்க வேண்டும். 

இளைய சமுதாயம்தான் உழைக்கும் வர்க்கத்தின் அடித்தளம். நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளமைக்கும் வலிமையான இளைய சமுதாயம் இன்றியமையாதது. புரட்சி மூலமாக - அது அரசியல் புரட்சியோ, விஞ்ஞானப் புரட்சியோ அல்லது கலையுலகப் புரட்சி இவை எல்லாம் இளைஞர்களாகிய புதிய வார்ப்புகள் மூலம் தான் சாத்தியமாகிறது. 

இளைஞர்கள் மேம்பாட்டிற்கான தேசிய அளவிலான கொள்கை "யூத் பாலிசி 2014' - ஆம் ஆண்டு மத்திய அரசால் வறையறுக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் இதற்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் மாற்றம், ஏற்றம், முன்னேற்றம் வளர்ச்சிக்கு அடிப்படையானவை. அவற்றை உருவாக்கும் சக்தி இளைஞர்களிடம் தான் உள்ளது.ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைய சமுதாயத்திற்கான முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால் செயலாக்கத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. இதைச் சரி செய்து தொடர்ச்சியாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு உயர் மட்டக் குழு அமைத்து முறைப்படி பிரச்னைகள், 

அதற்கான தீர்வுகள் ஆராயப்பட்டன. 

ஐக்கிய நாடுகள் சபை 15வயதிலிருந்து 24 வயது உள்ளோர் இளைஞர்கள் என்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் 15 வயதிலிருந்து 29 வயதிலானவர் இளைஞர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞர்கள் இந்திய ஜனத்தொகையில் 27.5%. அவர்களது உழைப்பால் நாட்டின் பொருளாதார வருமானத்தில்பங்களிப்பு 34%.உழைக்கும் இளைஞர்களின் செயல் திறனை சிறப்பான பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி,வருமானத்தை பன்மடங்கு பெருக்க முடியும்.

மேலை நாடுகள் மற்றும் சைனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் தரமான உழைப்பை குறைவான நேரத்தில் பெறுகிறார்கள். நமது உழைப்பாளிகளின் செயல்திறன் மேலை நாடுகளோடு ஒப்பிடுகையில் அதற்கு நிகராக இல்லை என்பதால் திறன் மேம்பாடு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

மத்திய அரசு பட்ஜெட்டில் வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இளைஞர் நலதிட்டங்களுக்காக ஒதுக்குகிறது. வருடத்திற்கு சராசரி ரூ.3000 ஒவ்வோர் இளைய நபருக்காக கல்வி, ஆரோக்கியத்திற்காக அரசு செலவிடுகிறது. இதைத் தவிர, மாநிலங்களும் தனியே திட்டங்கள் செயல்படுத்துகின்றன. 

மத்திய அரசின் "யூத் பாலிசி'யில் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் முறையே,திறமையான உழைப்பாளிகளை உருவாக்கல் - வளரும் சந்ததியினரை வலிமை, ஆரோக்கியத்தோடு வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் நிலைப்படுத்தல்- நல்ல சமூக மதிப்பீடுகள் மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்த்தல் - அரசாளுமையில் இளையோருக்கு உரிய பங்களிப்பு- எல்லா இளைய சமூகத்தினர், நலிந்தவர் பிற்படுத்தப்பட்டோரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வித்திடல் - ஆகியவை திட்டமிடலுக்கு வழிகாட்டிகள். அதனை அடைய பதினொருமுன்னுரிமைப் பகுதிகள் பட்டியிலிடப்பட்டுள்ளன. 

இளைஞர் மேம்பாட்டு கொள்கையின் தொலை நோக்கு கண்ணோட்டம் : "இளைய சமுதாயத்தினர் தமது முழுத் திறமையை வளர்த்துக்கொள்ள எல்லாவிதமான சாதகமான சூழல்களையும் உருவாக்குதல், அவர்களது உழைப்பின் மூலம்மற்ற நாடுகளுக்கிடையில் இந்தியா உன்னத நிலை எய்தவழிவகுத்தல்' என்பதாகும் .

மக்கள் தொகையின் பயனளிப்பைப் பெறுவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மாநிலங்களுக்குள் ஜனத்தொகையில் ஏழாவது இடம், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பெற்று முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

தமிழ்நாடு யூத் பாலிசியில் 15 வயதிலிருந்து 35 வயது நிரம்பியவர்கள் இளைஞர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலானது. பதினைந்து வயதிலிருந்து ஐம்பத்தொன்பது வரையிலான உழைப்பாளிகள் ஜனத்தொகையில் 74% என்பதை ஆதாரமாக வைத்து அதன் முழுப் பயன்பாட்டை பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்கள் விகிதம் ஜனத்தொகை பயன்பாட்டிற்கு சாதகமாக உள்ளது. 15- 35 வயது வரம்பை மூன்று பகுதிகளாக 15 -21, 21-28, 28-35 என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது மனநிலை, தேவைக்கு ஏற்றவாறு பயனளிப்பு அளிக்கப்படுகிறது .நகர்ப்புற இளைஞர்கள் பிரச்னை ஒருவகை, கிராமப்புறங்களில் வேறு விதமான சவால்கள். இவற்றை ஆராய்ந்து தீர்வு அளிக்க வேண்டும். 

தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மேம்பாட்டு கண்ணோட்டத்தில் மாணவர்கள், சமுதாயத்தில் நலிந்தவர்கள், பழங்குடியினவர், வேலையில்லாதவர், தெருவில் வசிக்கும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பிற மாநிலங்களிலிருந்து குடியேறியவர், ஆபத்தின் விளிம்பில் வாழும் ஏழைகள் என்று அந்தந்த நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு நடவடிக்கைகள் அவர்களது தகுதி உயர்வுக்கும் அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகளைக் களையும் வகையிலும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

2016- இல் இருந்து ஏழு வருட தொடர் திட்டத்தில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு பல துறைகளில் திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் ரூ.11000 செலவில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அம்சம் உயர் கல்வியில் 50 % 
மாணவர் சேர்க்கை என்ற இலக்கை அடைய வேண்டும். 2030- இல் இந்திய அளவில் ஐம்பது சதவிகிதம் மாணவர் உயர் கல்வி சேர்க்கை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டை தமிழகம் 2020 - இலிலேயே அடைந்து விட்டது! இந்த தொடர் நடவடிக்கையால் இளைய உழைப்பாளிகளின் பங்களிப்பு தமிழக பொருளாதார வளர்ச்சியை 2023 -இல் மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளது. 

யூத் பாலிசியின் முக்கிய அங்கமாக விளையாட்டு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான கட்டமைப்பு எல்லா மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டது. அதன்பயனாக நமது இளம் விளையாட்டுவீரர்கள் சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர். 

வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக அளவில் பதக்கங்கள் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகாது. தமிழ்நாட்டிலிருந்து இரு வீராங்கனைகள் நேத்ரா குமணன், பவானி தேவி மற்றும் ஷரத் கமல்சத்தியன், விக்ரம், கணபதி, மாரியப்பன் தேர்வாகியிருப்பது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனளித்திருப்பதைக் காட்டுகிறது. தமிழக அரசு தங்கம் வெல்பவருக்கு மூன்று கோடி ரூபாய் அறிவித்திருப்பது விளையாட்டு வீரர்களுக்கு நல்ல உற்சாகம் அளிக்கும்.

ஜூலை - 15 சர்வதேச இளைஞர்கள் திறன் மேம்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கரோனா காரணமாக கடந்த ஒரு வருடத்தில் முப்பது வாரங்கள் உலகெங்கிலும் மாணவர்களின் கல்வி தடை பட்டுள்ளது. இதனால் சுமார் 90 கோடி மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலையின்மை, இளைஞர்களை அதிகமாகப் பாதித்துள்ளது. போன ஆண்டில் மட்டும் 8.7% இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. 

 ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 15 - ஆம் நாள் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு தினம் அனுசரிக்க முடிவெடுத்து ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. டெக்னிக்கல் அண்ட் வொகேஷனல் எஜுகேஷன் ட்ரெயினிங் (டிவிஇடி) தொழில்நுட்பக் கல்வி , தொழில் கல்வி பயிற்சி ஆகியவற்றை இளைய சமுதாயத்திற்கு அளித்து அவர்களது செயல் திறனை வளர்க்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த தினத்தில் வலியுறுத்தப்படுகிறது. 

தொழில் கல்வி அத்தியாவசியம். "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது போல் பல பட்டதாரிகளுக்கு சாமானிய கை வேலைகள் தெரிவதில்லை. ஒரு எலக்ட்ரிகல் என்ஜினியருக்கு ப்யூஸ் போடத் தெரியாத நிலை உண்டு.

தொழில் கல்வி என்பதைக் குலக்கல்வி என்று திரித்து சொல்லி, அரசியலாக்கி,
அதனைப் பாடதிட்டத்திலிருந்தே எடுத்து விட்டார்கள்! 1954 - ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டு வந்தது, "புதிய கல்வித் திட்டம்'. இப்போதைய "ஷிப்ட்' முறையை அப்போதே அறிமுகப்படுத்த முற்பட்டது அன்றைய ராஜாஜி தலைமையிலான அரசு.தொழில் கல்விக்கும் அன்றைய புதிய கல்வித்திட்டத்தில் முன்னுரிமைவழங்கப்பட்டிருந்தது.

கல்வி தந்தை காமராஜ் ஜெயந்தி ஜூலை 15. தமிழ் நாட்டில் கல்வி புரட்சி செய்தவர். அவர் காலத்தில் பள்ளிகளில் வொகேஷனல் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் பின்பு வந்த அரசுகள் தொழில் கல்வியை நீக்கி விட்டார்கள். பல திறமைகள் பெற்றவருக்குத் தானாக வேலை தேடி வரும் என்பது திண்ணம்.

தலைமுறைகளுக்கிடையே உள்ள இடைவெளி குறுகி வருகிறது. "ஜெனரேஷன் கேப்' இரு தலைமுறைகளுக்கிடையே ஆன கருத்து வேறுபாடுகள், மாற்றங்கள், சிந்தனை முரண்பாடுகள் எப்போதுமே இருக்கும். அதிவேகமான வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக ஒரு தலைமுறைக்குள்ளேயே பல வேறுபாடுகள் முளைக்கின்றன.

ஜென் எக்ஸ்,ஜென்ஒய், ஜென் இஸட் என்று பிரிக்கப்பட்டன. புத்தாயிரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் "மில்லியனல்ஸ்' என்று தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு சந்தைப் பொருட்களிலும் வித்தியாசம்! புது யுகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் கவர்ந்த பொருட்கள் தயாரிப்பு, விற்பனை முறைகள் மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளன. 

சினிமா உலகமும் இதைச் சரியாக புரிந்துகொண்டு விரசமான காட்சிகளை புகுத்தி வக்கிரமாக இளைய சமுதாயத்தின் ஈர்ப்பை அறுவடை செய்கிறார்கள்! 

இளைய தலைமுறையை வைத்து வணிகப் பெருக்கம் நடைபெறும் அதே நேரத்தில் அவர்களது திறமைகளை வளர்க்க அரசு மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயமும் பங்குகொள்ள வேண்டும். 

சாதகப் பறவைகள் சாதகமான சூழலுக்கு ஏற்றவாறு பாதையை வகுக்கும்; மாற்றிக் கொள்ளும் சில அரசியல் வாதிகள் போல்! சாமானியனுக்கு சாதகம் அவனது திறமை ஒன்றே. காலத்திற்குத் தகுந்தால் போல் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். தொழில்நுட்பம்வேகமாக மாறி வருவதால் விஞ்ஞான பட்டப் படிப்புமுடித்தவுடன் அந்த படிப்பு காலாவதியாகிவிடும் நிலை வந்து கொண்டிருக்கிறது!படிப்புக்கு முடிவே இல்லை. தொடர்ந்து நாம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் தான் ஜீவிக்கமுடியும்.

சின்னச் சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி -நம்ம
 தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி
ஒற்றுமையோடு அத்தனை நூலும்
ஒழுங்கா வந்தா வளரும் - இதில்
ஒரு நூலறுந்தால் குளறும்

கைவினைத் திறனை அற்புதமாக விளக்கும் பட்டுக்கோட்டையார் பாடல் இது. திறமைசாலிகள் தமிழர்கள். அந்த பாரம்பரியத்தை காப்பாற்றுவோம்.

போன வார கேள்விக்குப் பதில்;

USAID என்ற வளர்ச்சி திட்டங்களுக்கான அமெரிக்க நிர்வாக அமைப்பின் தலைமை நிர்வாகி திரு வில்லியம் கொளட் "க்ரீன் ரெவல்யூஷன்' என்ற சொற்றொடரை1968 -இல் அளித்தார்.

இந்த வார கேள்வி:

"இளைஞர்கள் திறன் மேம்பாட்டு தினம்' உலகெங்கிலும் அனுசரிக்க எந்த வருடம் அறிவிக்கப்பட்டது? 

(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com