அலுவலகம்... பேசுவது... பேசக் கூடாதது!

கல்வியறிவு  அதிகரிப்பினாலும் தனியார் நிறுவனங்களின் பெருக்கத்தினாலும் இன்றைக்கு ஆண், பெண்  இருபாலரும் வேலைக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.
அலுவலகம்... பேசுவது... பேசக் கூடாதது!

கல்வியறிவு  அதிகரிப்பினாலும் தனியார் நிறுவனங்களின் பெருக்கத்தினாலும் இன்றைக்கு ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதேபோன்று, வேலைக்குச் செல்வதினால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.  

அலுவலகத்தில் அனைவருடனும் எவ்வளவு சகஜமாகப் பழகினாலும்,  யாருடனும் ஒட்டாமல் தனியாக இருந்தாலும் வதந்திகள், தவறான தகவல்கள் என உங்களைப் பற்றி கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சக ஊழியர்களுடன் பேசாமல், யாரையும் சாராமல் அலுவலகத்தில் தனித்து இருப்பது என்பதும் இயலாத காரியம். 

மேலும், வேலைரீதியான நட்புறவுகளை ஏற்படுத்திக் கொள்வது நமது வேலைத் திறனை அதிகரிக்கச் செய்வதோடு புதிய அனுபவங்களையும்  நமக்கு ஏற்படுத்துகிறது.  வேலையில் ஒருவிதமான மனநிறைவையும் ஏற்படுத்துகிறது.  
என்றாலும், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது சில  விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். உங்களுக்கே உரிய சில  ரகசியங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது,  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களைப் பற்றி பேசுவது, நீங்கள் வரும்போது போகும்போதெல்லாம் கிண்டல் செய்வது போன்ற நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க சில யோசனைகள் இதோ...

தனிப்பட்ட ரகசியங்களைப் பகிராதீர்கள்! 

அலுவலகத்தில் வீண் பேச்சுகள், உங்களைப் பற்றி தவறான தகவல்கள் பேசப்படுபவதற்கு காரணம் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை சக ஊழியர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்வதுதான்.  

மன அழுத்தம் அதிகரிக்கும் சூழ்நிலையில் ஒருவரிடம் மனக்குமுறல்களை கொட்டிவிடுவது மனித இயல்பு. உடல், மன நலனை கருத்திக்கொண்டால் அது சரியும் கூட. ஆனால், யாரிடம் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் பகிரப்படுகின்றன என்பது முக்கியமான விஷயம்.  

அலுவலகத்தில் நம்பிக்கையான ஒரு சிலர் இருந்தால் நல்லது. அவர்களைத் தவிர, பிறரிடம்  உங்களுடைய தனிப்பட்ட, குடும்ப ரகசியங்களைப் பகிரும்
போது அது மற்றவர்களுக்கு பேசு பொருளாகிவிடுகிறது.  

அலுவலகத்தில் பேச வேண்டாம்! 

அலுவலகத்தில்   நம்பிக்கையான ஓரிரு நண்பர்கள் இருந்தாலும் அவர்களும் எந்தச் சூழ்நிலையிலும் உங்களின் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் 
பகிரமாட்டார்கள் என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. 

அலுவலகத்தில் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பேசினாலும், மற்றவர்கள் அருகில் இல்லாததை உறுதிசெய்து கொண்டு தனியே பாதுகாப்பான இடத்தில் பேசுங்கள்.   நீங்கள் இருவரும் பேசுவதை மற்றவர்கள் கவனித்து, உங்கள் நண்பரை அவர்கள் தொந்தரவு செய்ய வாய்ப்புண்டு.  

நண்பர்களுடன் பகிருங்கள்! 

பிரச்னையில் இருக்கும்போதுதான் ஒருவரிடம் அதை பகிர்ந்துகொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது. அவ்வாறு பேசும்போது அலுவலகத்தில் வைத்தோ, பொதுவெளியில் வைத்தோ பேச வேண்டாம். முடிந்தவரை அலுவலகத் தொடர்பு இல்லாத ஒரு நபரிடம் குடும்ப விஷயங்கள் குறித்து பேசினால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கும். ஆனால் அலுவலகத்தில் இருந்து கொண்டு  மற்ற நண்பர்களுடன் தொலைபேசியில் பேசும்போது அந்தத் தகவல்களும் கசிய வாய்ப்புள்ளது.  

இடைவேளை நேரத்தைப் பயன்படுத்துங்கள்!  

அலுவலகத்தில் ஒருவரைப் பற்றி பேசப்படும் நேரம் இடைவேளை நேரம். தேநீர், உணவு இடைவேளை நேரங்களில்தான் மற்றவர்களைப் பற்றி  பேசுவது அதிகம். எனவே, இடைவேளை நேரங்களில் நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்னைகள், செய்தித்தாள்களில் படித்தவை, புத்தகங்கள், திரைப்படங்கள் என பொது விஷயங்கள் குறித்துப் பேசலாம்.

இல்லையெனில் யாருடனும் நீங்கள் பேச விரும்பாதபட்சத்தில் தனியே அமர்ந்து பாடல்கள் கேட்பது, செய்தித்தாள் படிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

உங்களுடைய சக ஊழியர்கள், மற்றவர்களைப் பற்றி பேச முற்பட்டாலும் நீங்கள் அதனை மாற்ற முயற்சிக்கலாம்.  

வேலையைப் பற்றி பேசுங்கள்!

நீங்கள் அலுவலகத்தில் இருக்கும்போது உங்களுடைய வேலையில் முழு வதுமாக கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலை குறித்து மட்டும் சக ஊழியர்களிடம் உரையாடுங்கள்.  

வேலைகளை எவ்வாறு சிறப்பாக முடிப்பது, அதில் சந்தேகங்கள், அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கலாம். அவ்வாறு அலுவலக வேலைகள் குறித்து பேசும்போது வீண் பேச்சுகள் தவிர்க்கப்படும்.  

கவனத்தைத் திசை திருப்புங்கள்!  

உங்களின் முன்னிலையில் யாரேனும் மற்றவரைப் பற்றி பேசினால் அதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி,  அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பி விடுவதாகும். உங்கள் சக பணியாளர்கள் கிசுகிசுப்பதை நீங்கள் கவனித்தால், அந்த உரையாடலில் சேர வேண்டாம்.  

வெளிப்படையாக இருங்கள்!  

வதந்திகளைத் தவிர்க்க, உங்களுடைய குறிக்கோள்கள், உணர்வுகளுக்கு நேர்மையாக இருங்கள். உங்களுடைய பொதுவான நடவடிக்கைகளே உங்களை யார் என்று பிறருக்கு காட்டிவிடும். அலுவல்ரீதியாக மற்றவரிடம் ஏதும் கூற வேண்டுமானால் அதனை நேரடியாக தெரிவித்து விடுங்கள். வேலையில் உண்மையாக, நேர்மையாக இருங்கள். அலுவலகத்தில் போட்டி, பொறாமையால் கூட வதந்திகள் பரவலாம். ஆனால், உங்களுடைய நோக்கங்களில் தெளிவாக வெளிப்படையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மற்றவர்களை மதிப்பிடாதீர்கள்! 

ஒருவர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்களும் அவ்வாறு இருப்பது அவசியம். 

மற்றவர்களைப் பற்றி நீங்கள் பேசாமல் இருந்தால் உங்களைப் பற்றி பேசுவதை மற்றவர்கள் நிறுத்தி விடுவார்கள். 

சக ஊழியரைப் பற்றி வேறொருவர் பேசினால் கூட, நீங்கள் அதைக் கண்டுகொள்ளக் கூடாது. உங்களிடம் சிலர் ரகசியத் தகவல்களைக் கூறினாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அதனை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. அலுவலகத்தில் யாரிடமும் அதிகமாக உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. சக ஊழியர்களை மதிப்பிட வேண்டாம். மனிதன் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் குணம் கொண்டவன். நம்பிக்கைக்குரிய ஒரு சிலரைத் தவிர்த்து மற்றவர்களை அலுவலக நண்பர்களாக மட்டும் வைத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com