உடலுக்கு வேலை கொடு!

கரோனா தொற்று வந்தாலும் வந்தது;  எல்லாரும்  வீட்டில் உட்கார்ந்திருக்கும்படி ஆகிவிட்டது.
உடலுக்கு வேலை கொடு!

கரோனா தொற்று வந்தாலும் வந்தது; எல்லாரும் வீட்டில் உட்கார்ந்திருக்கும்படி ஆகிவிட்டது. அதிலும் பொது முடக்கக் காலத்தில் வீட்டை விட்டு வெளியே தலைகாட்டக் கூடாது என்று சொல்லிவிட்டதால் வீட்டுக்குள்ளேயே எல்லாரும் முடங்கிக் கிடக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்னும் சிறிது நாளில் அவர்கள் படித்த கல்விக்கூடம் எங்கிருக்கிருக்கிறது என்பதை மறந்துவிட்டாலும் வியப்படைவதற்கில்லை. ஆன்லைன் வகுப்புகளில் அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

வேலைக்குப் போகாமல், வீட்டில் சும்மா இருப்பவர்கள் நாள் முழுக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, செல்லிட பேசிகளுக்குள் மணிக்கணக்காகப் புதைந்து கிடப்பது என்றிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் இருந்ததைவிட, அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்கிறார்கள். அங்கே இங்கே அசையக் கூட அவர்களால் முடிவதில்லை.

மொத்தத்தில் கரோனா தொற்று நம்மைச் சும்மா இருக்க மட்டும் சொல்லவில்லை, நாள் முழுவதும் உட்கார்ந்திருக்கவும் சொல்கிறது. ""இவ்வளவுநாள்கள் தேவையாகவோ, தேவையில்லாமலோ "அலையோ அலை' என்று அலைந்தோம். இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்னை?'' என்று கோபமாகக் கேட்காதீர்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் பிரச்னை இருக்கிறது.

மனித உடல் என்பது எப்போதும் செயல்படக் கூடியது. அப்படிப்பட்ட தன்மையோடு இருக்கும்படி அது உருவாக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து அசைவற்று இருந்தால், அது நமது வயிற்றின் சுற்றளவு அதிகமாகிவிடுகிறது. அது மட்டுமல்ல, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படவும் காரணமாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது கூடுதலாக ஓர் உண்மையும் தெரிய வந்திருக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் மூளையும் பாதிக்கப்படுகிறது என்பதே அது. அது மனநலத்தைப் பாதிக்கிறது. மன அழுத்தத்தை உருவாக்குகிறது என்கிறார்கள்.
பிரேஸில் நாட்டில் 937 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இந்த 937 பேரும் பொருள்கள் வாங்க வெளியே செல்வது, எப்போதாவது மருத்துவமனைகளுக்குச் செல்வது தவிர, ஒருநாளில் 10 மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்து கொண்டே இருந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவருமே "சும்மா இருப்பதே சுகம்' என்று சொல்லவில்லை. நிறைய மனஅழுத்தம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்படி உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இளம் வயதினரால் தங்கள் ஆன்லைன் கல்வியில் கூட மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் போகிறதாம். மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறதாம்.

எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தால் உடல் ஓய்வு பெற்று புத்துணர்ச்சி அடையும் என்று நாம் நினைத்ததற்கு மாறாக, உடல் சோர்வடைந்துவிடுகிறதாம்.

சுவிட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஓர் ஆராய்ச்சியை அண்மையில் மேற்கொண்டது. 40 ஆயிரம் ஸ்விட்சர்லாந்து மக்கள் அதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மனிதர்கள் எவ்வளவு நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களோ, அவ்வளவு நேரம் மன அளவில் அவர்களுக்குப் பிரச்னையாகவே இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலை செய்து கொண்டிருக்கலாம். ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்கலாம். துணி தைக்கலாம். டிவி பார்க்கலாம். இசை கேட்கலாம். இப்படி எந்த வேலையையும் உட்கார்ந்து கொண்டே செய்தாலும் அது மன அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகஅவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

""நாம் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, நமது உடலில் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்துவிடுவதே இந்த மனநலப் பிரச்னைகளுக்குக் காரணம். ரத்த ஓட்டம் குறைந்துவிடும்போது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறைந்துவிடுகிறது. மூளை நரம்பணுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான வேதிப் பொருள்களின் அளவும் இதனால் குறைந்துவிடுகின்றது'' என்கிறார் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் குழுவைச் சேர்ந்த மேட்ஸ் ஹால்க்ரீன்.

மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்தும் பகுதி. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. மூளை பாதிக்கப்படுகிறது. நினைவாற்றலும் குறைந்துவிடுகிறது.

கரோனா காலத்தில் மக்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டாலும், மக்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற அறிவுரையையும் அது வழங்கியிருக்கிறது.

எனவே இளைஞர்களாகிய நாம், எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருக்காமல், இடையிடையே எழுந்து வீட்டுக்குள்ளேயே நடப்பது, தினம்தோறும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, வீட்டில் தோட்டம் இருந்தால் அந்த வேலைகளில் ஈடுபடுவது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படி உடலுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே உட்கார்ந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் மனஅழுத்தம், மறதி, உடல் பருமன், பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com