
உலகெங்கிலும் வேலைவாய்ப்புகள் தலைகீழ் மாற்றங்களைக் கண்டுவரும் நிலையில், சட்டத்துறை இதற்கு விதிவிதிக்கல்ல.
நீங்கள் ஒரு வழக்குரைஞராகிவிட்டால், பணிச்சுமைகள் அதிகரிக்கும். மேலும் உங்களை திறமையான வழக்குரைஞராக அடையாளப்படுத்திக் கொள்ள ஏராளமான வழக்குகளில் வாதிட வேண்டியிருக்கும். வெறும் சட்டப்படிப்பு மட்டும் அல்லாமல், துறைசார்ந்த பல்வேறு திறமைகளை சட்டம் பயிலும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
நிபுணத்துவம் மிக்க வழக்குரைஞராக மிளிர்வதற்கு பல படிகளைக் கடந்து வர வேண்டியிருக்கிறது.
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு அல்லது சி.ஏ., இன்ஜினியரிங், பிசினஸ் போன்ற ஏதாவதொரு பட்டத்தை படித்து முடித்த பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயில்வது முதற்படி. அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், தேசிய சட்டப் பள்ளிகள் அல்லது தனியார் கல்லூரிகள் போன்ற மூன்று வகையான கல்வி நிறுவனங்களில் இருந்து உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்யலாம். 12-ஆம் வகுப்புக்கு பிறகு, கலை இளங்கலை - சட்ட இளங்கலை என்ற 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். சட்டத்தில் இளங்கலை படிப்பு 3 ஆண்டுகள் மற்றும் முதுகலை படிப்பு 2 ஆண்டுகள் படிப்பாகும்.
சட்டப் பள்ளிகளில் சேர்க்கை:
மாநில அரசுகளால் நிறுவப்பட்டு, இந்திய வழக்குரைஞர் கவுன்சிலால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் சட்டக்கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களாகும். தற்போது, இந்தியாவில் 23 தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள் உள்ளன.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இருந்து சட்டத்தில் பட்டம் பெற விரும்பினால், நீங்கள் பொது சட்டப்படிப்பு சேர்க்கை தேர்வை (காமன் லா அட்மிஷன் டெஸ்ட்) எழுத வேண்டும்.
மற்ற சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு இந்திய சட்டப் பள்ளி சேர்க்கை தேர்வை எழுத வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட சட்டக்கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு வேறு சில நுழைவுத்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அவற்றில் சில: தேசிய சட்டப் பல்கலைக்
கழகத்தில் சேர்வதற்கு, அகில இந்திய சட்ட நுழைவுத்தேர்வு, சிம்பயோசிஸ் சட்டப் பள்ளிக்காக சிம்பயோசிஸ் நுழைவுத்தேர்வு.
நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் நடத்தும் பள்ளிகளில் இருந்து 10 + 2 அல்லது அதற்கு ஈடான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை பெறுவதற்கு குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
திறனறிதல், சட்ட ரீதியான பகுத்தறிவு, தரவு விளக்கம், அடிப்படைக் கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் தேர்வில் இடம்பெற்றிருக்கும்.
துறைசார் நிபுணத்துவம்:
இந்தியாவில் சட்ட மாணவர்கள் ஒரு வழக்குரை ஞராக வாழ்க்கைத்தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய குழப்பம், எந்த துறையில் சிறப்பு நிபுணத்துவம் பெறுவது என்பது தான். நீங்கள் வழக்குரைஞர் பணியில் சேர விரும்பினால், நிபுணத்துவம் பெறுவதற்கு ஏராளமான துறைகள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான துறையில், ஆர்வமாக செயலாற்றக்கூடிய துறையில் நிபுணத்துவம் பெற முனைப்புக் காட்டுங்கள். துறைசார் நிபுணத்துவம் பெறுவதற்கு, இன்றைக்கு இந்தியாவில் பிரபலமடைந்து வரும் சில சட்ட உட்பிரிவுகள் வருமாறு:
மருத்துவச் சட்டம்:
மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அவர்களின் நோயாளிகளுக்கான சட்ட உரிமைகள் மற்றும் பொறுப்புகள் இதில் அடங்கும்.
சுற்றுச்சூழல் சட்டம்:
நிலம், காற்று, நீர் மற்றும் மண் வளங்களைப் பாதுகாக்கும் பணி இதில் அடங்கும். இந்தச் சட்டங்களை மீறினால், அபராதம், சமூகப்பணி, சிறைவாசம் போன்ற பல்வேறு தண்டனைகளுக்கு வழிவகுக்கும்.
வேலைவாய்ப்புப் சட்டம்:
தொழிலாளர் சட்டம், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான உறவை மத்தியஸ்தம் செய்கிறது.
நுகர்வோர் சட்டம்:
சந்தையில் உண்மையான தகவல்கள் பரிமாறப்பட்டு, நியாயமான வர்த்தக போட்டியை உறுதிசெய்யும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சர்வதேசச் சட்டம்:
நாடுகளுக்கிடையேயான உறவுகள் ஒரு சிக்கலான விவகாரம். உலகமயமாக்கல் மற்றும் உலகளாவிய உறவுகளை மேம்படுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச சட்ட நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெறுவது என்பது சுங்கவரிகள், கட்டணங்கள் மற்றும் ஒப்பந்தங்களைக் கையாளத் தெரிந்திருப்பதோடு, நாடுகளுக்கு இடையே கடைபிடிக்கப்படும் மரபுகளையும் அறிந்திருப்பது அவசியம்.
நிர்வாகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம்:
மாநில அரசு மற்றும் மத்திய அரசின் விவகாரங்களைக் கையாளும் ஒரு சிறப்புப்பிரிவாகும் இது. சட்டவிதிகளை உருவாக்கும் அதிகாரம் மட்டுமல்லாமல், சட்டத்தை இயற்றுவது, செயல்படுத்துவது ஆகியவற்றுக்கு பொறுப்பேற்கும் கடமையை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.
குடும்பச் சட்டம்:
இது திருமணம், விவாகரத்து, பிரிவினை, தத்தெடுப்பு, சிறார்களின் பாதுகாப்பு, நிலம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சொத்துப் பிரிப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்கள் தொடர்பான சட்டங்களைக் கையாள்கிறது.
குற்றவியல் சட்டம்:
குற்றவியல் சட்டம், சிலநேரங்களில் தண்டனைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது, பல்வேறு அதிகார வரம்புகளில் உள்ள பல்வேறு விதிமுறைகளைக் குறிக்கிறது. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க தவறினால், கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவம் தனித்தன்மைவாய்ந்த சட்டமாகும் இது.
சிவில் சட்டம்:
சிவில் சட்டங்கள் என்பது தனிப்பட்ட உரிமைகளை அமல்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, குடும்பங்கள் மற்றும் அவதூறுகளைக் கையாளும் சட்டங்கள் ஆகும்.
கார்ப்பரேட் சட்டம்:
ஒரு பெருநிறுவன வழக்குரைஞராக இருப்பது, மிகப்பெரிய பெருநிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும்; பெரிய நிறுவனங்களின் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றின் அமலாக்கம், பெருநிறுவன சலுகைகள் மற்றும் பொறுப்புகள் போன்ற முக்கியமான நிறுவன சிக்கல்களைச் சமாளிக்க வாய்ப்பளிக்கிறது. பலரும் விரும்பும் சட்டத்துறை பிரிவாக இது அமைந்துள்ளது.
வரிச் சட்டம்:
வருமான வரி, ரியல் எஸ்டேட் வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற பல்வேறு துறைகளில் விதிக்கப்படும் பல்வேறு வரிகள் இந்தியாவில் உள்ளன. வரிகளைக் கணக்கிடுவது சிக்கலான தன்மை கொண்டதாக இருப்பதாலும், விற்பனை அல்லது தனியார் வருமானக் கணக்கீடு போன்ற அது தொடர்பான பல்வேறு பிரச்னைகள் காரணமாகவும், இந்தியாவில் வரிச்சட்ட வழக்குரைஞர்களின் தேவை அதிகரித்துள்ளது.
அறிவுசார் சொத்துச் சட்டம்:
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் தொடர்பான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை இந்த சட்டத் துறை கையாள்கிறது. இது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை, பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரைகள் போன்றவையாக இருக்கலாம். இந்த துறை, வழக்குரைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இந்த துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
சைபர் சட்டம்:
அண்மைக் காலத்தில் நிபுணத்துவம் பெறுவதற்காக வழக்குரைஞர்களிடையே புதிதாக சேர்ந்துள்ள துறையாகும் இது. சைபர் சட்டங்கள், கணினி உலகில் இணையவழியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் சட்ட அம்சங்களைப் பற்றியதாகும். சைபர் குற்றங்கள், ஒரு தனிநபருக்கு எதிராக, சொத்துக்கு எதிராக அல்லது அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படலாம். சமூகத்தில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட்டுகள், அரசுத் துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் சைபர் சட்டங்களைகையாளும் வழக்குரைஞர்களுக்கான வாய்ப்புகளைக் காணலாம்.
ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல்(ஜாக்) மற்றும் பாதுகாப்பு சேவைகள்:
ராணுவத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை தலைவராக, ராணுவம் தொடர்பான அனைத்து சட்ட விவகாரங்களுக்கும் ஜாக் ஆலோசகராக செயல்படுவார். தலைமை ஆலோசகராக, ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் பிறராணுவத் தீர்ப்பாயங்களில் தலைமை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டியது இவருடைய பணி. நீதிமன்ற நடைமுறைகளை வகுக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்லாது, பாதுகாப்பு சேவைகள் சட்டத்திலும் "ஜாக்'கள்
முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
புதிய துறைகள்:
வேகமாக மாறிவரும் உலகச்சூழலில், அதிகரித்து வரும் புதிய தேவைகளை கருத்தில்கொண்டு, இந்தியாவில் உள்ள சட்டப் பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தில் புதிய பாடத்திட்டங்களை சேர்த்து வருகின்றன. விமானச் சட்டம், என்.எல்.எஸ்.ஐ.யூ. கல்லூரியில் பொதுக் கொள்கை, என்.யு.ஜே.எஸ். கல்லூரியில் தொழில்முனைவோர் நிர்வாகம் மற்றும் சிம்பியோசிஸ் சொசைட்டி சட்டக் கல்லூரியில் தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. புதிய படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்ற அமர்வுகள், பத்திரிகைகளில் எழுதுதல் மற்றும் கட்டாய இன்டர்ன்ஷிப் போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.