புதிய உலகத்தில் பறக்கப்போகும் முதல் ஹெலிகாப்டர்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரக திட்டத்தில் புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது. "பெர்சிவரன்ஸ்' என்றால் விடாமுயற்சி என்று பொருள்.
புதிய உலகத்தில் பறக்கப்போகும் முதல் ஹெலிகாப்டர்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரக திட்டத்தில் புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது. "பெர்சிவரன்ஸ்' என்றால் விடாமுயற்சி என்று பொருள். 2020-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி செலுத்தப்பட்ட இந்த விண்கலத்தின் லேண்டர் (ஆய்வு வாகனம்) கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியில் தரையிறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் வகையில் ஏற்கெனவே அமெரிக்கா 4 விண்கலங்களை அனுப்பியுள்ள நிலையில், இது 5-ஆவது விண்கலம் ஆகும். இதுவரையிலான செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அங்கிருந்து கல், மண் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பெர்சிவரன்ஸ் அதைச் செய்யப் போகிறது என்பதும், பெர்சிவரன்ஸ் ஆய்வு வாகனத்துடன் ஒரு ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டிருப்பதும் இதன் சிறப்பம்சம்.

"இன்ஜெனியூட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் சுமார் 2 கிலோ எடை கொண்டது. பெர்சிவரன்ஸ் ஆய்வு வாகனத்தின் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. பூமியைத் தவிர்த்து மற்றோர் உலகத்தில் பறக்கப் போகும் முதல் ஹெலிகாப்டர் இதுதான்.

ஆய்வு வாகனம் தரையிறங்கியதுமே ஹெலிகாப்டர், ஏற்கெனவே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் ரீகொன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் மூலம் நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்துக்கு தகவலையும் வெற்றிகரமாக அனுப்பியது. தொடர்ந்து 30 முதல் 60 நாள்களுக்கு ஆய்வு வாகனத்திலேயே இந்த ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டிருக்கும். செவ்வாயின் தரைப்பரப்பில் பொருத்தமான "ஹெலிபேட்' கண்டறியப்பட்டதும் ஹெலிகாப்டரை ஆய்வு வாகனம் விடுவிக்கும். அதன் பின்னர் 30 நாள்கள் ஹெலிகாப்டருக்கு சோதனைக் காலமாகும். மைனஸ் 130 டிகிரி ஃபாரன்ஹீட் குளிரில் ஹெலிகாப்டரின் உபகரணங்கள் தொடர்ந்து செயல்பட்டுவிட்டால், அதன் முதல் பறக்கும் சோதனை தொடங்கப்படும்.

இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரில் 6 லித்தியம்-அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகள் இப்போது ஆய்வு வாகனத்தின் மின் விநியோகத்திலிருந்து ரீசார்ஜ் ஆகும். செவ்வாயின் தரைப்பரப்பில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்ட பின்னர், அதில் இணைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் பேட்டரிகள் மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளும். திட்டமிட்டபடி ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கி, வட்டமடித்துவிட்டாலே திட்ட நோக்கத்தில் 90 சதவீதம் நிறைவேறிவிடும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம் இன்னும் துல்லியமான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com