கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முந்தி இருப்பச் செயல் - 41: தன் மேலாண்மைத் திறன் - 1

பெற்றோர் படைத்து, வளர்த்து ஆளாக்கிவிட்டிருக்கும் உங்களை அழித்தொழிக்க ஆயிரமாயிரம் விடயங்கள் சமூகத்தில் அடுக்கடுக்காய் இருக்கின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

சுப. உதயகுமாரன்


பெற்றோர் படைத்து, வளர்த்து ஆளாக்கிவிட்டிருக்கும் உங்களை அழித்தொழிக்க ஆயிரமாயிரம் விடயங்கள் சமூகத்தில் அடுக்கடுக்காய் இருக்கின்றன. இவற்றில் சிக்கிக் கொள்ளாமல் உங்களைக் காத்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஒரு சிறு தவறு கூட உங்களின் மாண்பை, கண்ணியத்தை, கவுரவத்தை, நற்பெயரை, வாய்ப்புகளை, வருங்காலத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் ஆபத்து இருக்கிறது. அதோடு வாழ வேண்டிய நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.

என் தலைமுறையின் இளமைக்காலம் போலல்லாமல், உங்களின் கவனத்தைத் திசை திருப்பும் விடயங்கள், தவறு செய்யத் தூண்டும் விடயங்கள் ஏராளமாகப் பல்கிப் பெருகிக் கிடக்கின்றன. வாழ்க்கை உங்களை நோக்கி எறிந்து கொண்டிருக்கும் "கூக்ளி' ஆச்சரியங்களைப் போலவே, உங்களை விரும்பாத சிலர் சதி வலைகளையும் பின்னிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு திறமைமிக்க செப்படி வித்தைக்காரர் போல, அத்தனை பிரச்னைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் கையாண்டாக வேண்டும். இந்த வினோதமான, சில நேரங்களில் விபரீதமான, விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் நிலையாக, உறுதியாக நின்றாக வேண்டும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை ரயிலில் நிலைகுத்தி நிற்பதற்கான சில அடிப்படைத் திறன்களைப் பார்ப்போம்.

காதல்/காமம்: வாழ்வின் எந்தக் காலத்தையும்விட இளமைப்பருவத்தில்தான் ஐந்தவிக்கும் திறன் அவசியம் தேவைப்படுகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களின் மேலாண்மை இளமைப்பருவத்தில் இன்றியமையாததாக இருக்கிறது. உண்பது, குடிப்பது, பேசுவது, பார்ப்பது, முகர்வது, கேட்பது என அனைத்திலும் கவனமாக இருப்பது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் பலர் சிகரெட் புகைத்தல், புகையிலை மெல்லுதல், மது அருந்துதல், பலான படங்கள் பார்த்தல் என பல்வேறு அழிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஹார்மோன்களும், காதலும், காமமும் களிநடம் புரியும் இப்பருவத்தில் மெய் மேலாண்மைத் திறன் அத்தியாவசியத் தேவையாகிறது.

காதலும், காமமும் வாழ்வில் அடிப்படையானவைதான் என்றாலும், அவை காலம் கருதி, கவனமாக மேலாண்மை செய்யப்பட வேண்டியவை. கூட்டுக்குடும்பம், குடும்ப நண்பர்கள், வயதான வழிகாட்டிகள் போன்ற ஆதரவு அமைப்புகள் எல்லாம் அருகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்கள் பெரும்பாலும் தனித்துவிடப்படுகிறீர்கள்.

உணர்வுகளைத் தூண்டும் படங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள், திரைப்படக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையதளங்கள் என இளைஞர்கள் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகிறீர்கள். குடும்பப் பின்னணி பலமாக இல்லாதவர்கள், பலவீனமானவர்கள், பொறுப்பற்றவர்கள் பலரும் சிக்கல்களுக்கு உள்ளாகிறீர்கள்.

இதனால் பெண்களைப் பின்தொடர்தல், பாலியல் தொந்தரவுகள் செய்தல், ஒருதலைக்காதல், ஓடிப்போதல், காதல் தோல்வி, பதின்பருவ கர்ப்பம், கருக்கலைப்பு, தற்கொலை, ஆணவக்கொலை என ஏராளமான பிரச்னைகள் எழுவதை தினமும் நாளிதழ்களில் படிக்கிறோம்.

வேலையின்றி, வருமானமின்றி, உரிய மனப்பக்குவமின்றி, பல்வேறு குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வழியின்றி, கண்களை மூடிக்கொண்டு காதலில் விழுவோர், காமத்தில் சிக்குவோர் நிலை பரிதாபகரமாகிப் போகிறது. கருணை, கரிசனம், கடமையுணர்வு போன்ற விழுமியங்கள் ஏதுமில்லாத அரசுத் துறைகளுக்கு, இவர்களின் கதைகள் வெறும் "கேஸ்கள்' மட்டுமே.

பெற்றோர், உடன்பிறந்தார், உற்றார், உறவினர், நண்பர்கள் என யாரும் எதுவும் செய்ய முடியாத ஒரு நெருக்கடியான சூழலுக்குள் இவர்கள் தள்ளப்படுகிறார்கள். அப்போது ஒவ்வொரு கதையும் கட்டப்பஞ்சாயத்து, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், ஆள்கடத்தல், ஆணவக்கொலை செய்தல் என ஒவ்வொருவிதமான முடிவை நோக்கிச் செல்கின்றன.

கையறுநிலைக்குத் தள்ளப்படும் இளைஞர்கள் பெற்றோரிடமிருந்து, உற்றாரிடமிருந்து, சமூகத்திடமிருந்து விலகியோடி, தங்களை மாய்த்துக் கொள்கின்றனர். கோபம், குற்ற உணர்வு, பழிவாங்குதல், தண்டித்தல் போன்ற கடுமையான உணர்வுகளோடு காதல் தோல்வி, அல்லது காதலரின் தோல்வி என்று கதை முடித்து வைக்கப்படுகிறது.

இன்றைய இளைஞர்களுக்கு யாரும் எந்தவித உதவிகளும் செய்வதில்லை. பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வி கற்றுக் கொடுப்பதில்லை. அங்கே ஆற்றுப்படுத்துநர் யாரையும் பணிக்கு அமர்த்துவதில்லை. ஆசிரியர்களுக்கு பதின்பருவத்தினரோடு பழகும் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு பாலியல் பற்றி மட்டுமல்ல, எதைப்பற்றியும் பேசுவதே இல்லை.

நேர்மறை ஆதரவு அமைப்புக்களுக்குப் பதிலாக, எதிர்மறை அழிவுசக்திகள் ஆட்டம் போடுகின்றன. கபட மதகுருமார்களும், போலி மருத்துவர்களும், பொல்லா வழக்குரைஞர்களும், நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களும், தன்னலமிக்க அரசியல் சக்திகளும் பிரச்னைக்குள்ளானவர்களிடம் பிடுங்கித் தின்கின்றனர் அல்லது அவர்களைப் பிய்த்து எறிகின்றனர்.

இப்படி ஊரார் இகழும் ஒருவராக வாடி அழிய வேண்டுமா, அல்லது ஊர் மெச்சுகிற ஓர் ஆளுமையாக வாழ்ந்து தழைக்க வேண்டுமா என்பது முழுக்க முழுக்க உங்கள் கைகளில் இருக்கும் விடயம். இந்த மாபெரும் பொறுப்பை எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.

கோபம்: இது இளம்பருவத்தின் இன்னொரு பெரிய பிரச்னை. கோபம் தவறான, மோசமான உணர்வல்ல. எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படிச் சொல்கிறார்: "எனது கோபத்தில் நிறைய நியாயம் உண்டு. என் உள்ளே கோபம் உருவாவது குறித்து எனக்குக் கவலை இல்லை. கோபம் என்கிற நல்லுணர்ச்சி இல்லாவிட்டால், நான் மானம் அற்றுத் திரிகிற பேடியாகிவிடுவேன். நான் கோபமே கொள்ளாதிருக்குமளவுக்கு இந்த உலகம் ஒன்றும் யோக்கியமாக இல்லை'.

இத்தகைய கோபம், அறச்சீற்றம், இல்லாமல் மோகன்தாஸ் காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ், நெல்சன் மண்டேலா போன்ற ஒப்பாரும், மிக்காரும் இல்லாத் தலைவர்கள் ஒருபோதும் உருவாகியிருக்க மாட்டார்கள். அவர்கள் எல்லாருமே கோபத்தை சமூக மாற்றத்துக்கான மூலதனமாகப் பயன்படுத்தினார்கள்.

புத்தபிரான் சொன்னார்: "கோபத்தில் உழல்வது என்பது எரிந்து கொண்டிருக்கும் கரிக்கொட்டையை கைக்குள் வைத்துக் கொண்டு யார் மீது எறியலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றது. இறுதியில் உங்கள் கைதான் எரிந்து போகும்'.

ஆம், கோபம் நெருப்பைப் போன்றது. இதை தேவைப்படும் இடங்களில் மட்டும் தேவையான அளவு கவனமாகப் பயன்படுத்தி சாதனைகள் படைக்கலாம். மாறாக, காணும் இடங்களில் எல்லாம், கட்டுப்பாடுகள் இன்றி, கவனமின்றிக் கையாண்டால், பெரும் குற்றங்களுக்குள் சிக்கிச் சீரழியும் அவலநிலை உருவாகிவிடும்.

எப்போதாவது கோபமடைவது வேறு, எப்போதும் கோபமாய் இருப்பது வேறு. நீங்கள் கோபப்படும்போது, அடுத்தவரை அடிக்கிறீர்களா? அல்லது கையில் கிடைப்பதைத் தூக்கி எறிகிறீர்களா? அல்லது எதையாவது காலால் எட்டி உதைக்கிறீர்களா? பிறரோடு பழகும்போது, பொறுமை இழக்கிறீர்களா? அவர்களுக்கு மிரட்டல் விடுக்கிறீர்களா, அல்லது மோசமான வார்த்தைகளால் திட்டுகிறீர்களா? வாழ்க்கை உங்களை நியாயமாக நடத்தவில்லை என்கிற எண்ணம் உள்ளுக்குள் எழுகிறதா? "ஆம்' என்பது உங்களின் பதிலானால், கோபம் மட்டுமே உங்களுடைய ஒரே முக்கியமான உணர்வாக இருந்தால், நீங்கள் உடனடியாக அதனை மேலாண்மை செய்தாக வேண்டும்.

எது உங்களைக் கோபப்படுத்துகிறது என்பதைக் கண்டுணருங்கள். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பம் கோபத்தை உருவாக்குவதில்லை; நீங்கள் அதைக் குறித்து எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதுதான் கோபத்தைக் கிளறுகிறது.

கோபமடையும்போது, உங்கள் உடல் எப்படி மாற்றமடைகிறது என்பதை அவதானியுங்கள். முறைப்பது, பற்களைக் கடிப்பது, உடல் தசைகள் இறுகுவது, உள்ளங்கைகள் வியர்ப்பது போன்றவை கோபத்தால் உடலில் எழும் மாற்றங்கள்.

உங்கள் கோபத்துக்கு மற்றவர்களைக் குறை சொல்வதைவிட, நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். ஓர் இடைவேளை எடுத்துக் கொண்டு, பல்வேறு தீர்வுகளைப் பற்றி சிந்தியுங்கள்.

கோபம்தான் உங்கள் பிரச்னை என்று கண்டுபிடித்துவிட்டால், கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்:

முகத்திலிருந்து அந்த முறைப்பை நீக்கிவிட்டு, அதனை ஆயாசமாக வைத்திருங்கள்.

ஆழமாக மூச்சுவிட்டு, உடல் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு, அமைதியாகப் பேசுங்கள்.

பிறரைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் விருப்பத்தை விட்டொழியுங்கள்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிறரை மரியாதையோடு நடத்துங்கள்.

உங்களை எது பாதிக்கிறது என்பதை நேரடியாக, துல்லியமாக, அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

இந்த ஒட்டுமொத்த விவாதத்தையும் ஏழே வார்த்தைகளில் நறுக்கெனச் சொல்கிறது வள்ளுவம்:

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

சினம் இருக்கும் இடத்தில் காதல், காமம் போன்ற வார்த்தைகளையும் இட்டு நிரப்பித் தெளிவடையலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.