

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் ஒவ்வொருவரையும் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பதில் மாற்றமில்லை.
தொடர்ந்து தனியாளாக முயற்சி செய்வதைக் காட்டிலும், தொழில் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வழிகாட்டிகளையும், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் முறையாகத் தெரிந்துகொண்டு அந்த வழியில் முயற்சியை மேற்கொண்டால் ஒவ்வோர் இளைஞனும் சாதனையாளராக மிளிர முடியும்.
தொழில் தொடங்குவது தொடர்பான பல்வேறு தகவல்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு தேவையான முதலீட்டைப் பெறுவதற்கான வழிகள் தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பார்கள். இதனால் அவர்களின் தொழில் தொடங்கும் கனவு சிதைந்து போகக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.
அத்தகைய இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது மத்திய அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.
தெரிந்து கொள்ளலாம்
பொருளாதார வசதி இல்லாத இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆக விரும்பினால், அவர்களுக்கு கைகொடுக்க தயாராக இருக்கிறது பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்(பிஎம்இஜிபி)
இத்திட்டத்தின் மூலம், ஒருவர் என்னென்ன தொழில்களைத் தொடங்க முடியும்?அதற்கு அரசு என்னென்ன உதவிகளை வழங்குகிறது என்பன போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். அதோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. தொழில்களைத் தொடங்குவதற்கான முதலீட்டைப் பெறவும் இத்திட்டங்கள் உதவுகின்றன.
என்ன நோக்கம்?
அனைவருக்கும் அரசுத்துறைகளிலேயே வேலைவாய்ப்பை வழங்க முடியாத நிலையில், தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இது.
நாள்தோறும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி அதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவதே இதன் நோக்கமாக உள்ளது.
பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கி
தருதல் இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து, கிராமப்புறங்களிலேயே தொடர்ந்து நிரந்தரமாக அங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்வதும், கிராமப்புற மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
திட்ட மதிப்பு எவ்வளவு?
உற்பத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு குறைந்தபட்சம் ரூ. 25 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இத்திட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
மானியம்:
பொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவீதம் மானியமாகப் பெற முடியும். நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15 சதவீதம் மானியமாகப் பெறலாம்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், பெண்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 35 சதவீதமும், அவர்கள் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவீதமும் மானியமாகப் பெறலாம்.
சொந்த முதலீடு:
இருப்பினும் ஒரு தொழிலைத் தொடங்கும்போது தொழில் தொடங்க நினைப்பவர், அவருடைய முதலீட்டையும் போட வேண்டும். அப்போதுதான் தொழில் முனைவோர்களுக்கு அந்தத் தொழிலை மேலும் மேலும் வளர்க்கும் விடாமுயற்சி இருக்கும்; அக்கறை இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு சொந்த முதலீடு ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவசியம் இருக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது.
பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் குறைந்த
பட்சம் 5 சதவீதமும் சொந்த முதலீடு இருக்க வேண்டும்.
என்ன வயது இருக்க வேண்டும்?
18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. வருமான வரம்பும் இல்லை.
கடனுதவி:
இந்த வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் - டிஐஐசி) மூலமாக கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவார்கள்.
படித்த வேலையில்லாத இளைஞர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றை அணுகி விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்க முடியாது?
மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகியவை தரும் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் ஏற்கெனவே கடன் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு
உருவாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
படித்துக் கொண்டிருப்பவர்கள் அதாவது கல்வியை நிறைவு செய்யாதவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது. ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு இந்த வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் முதலீட்டைப் பெற இயலாது.
எந்தத் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியாது?
வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை, மளிகை கடை, பொருட்களை வாங்கி, விற்கும் தொழில்) தொடங்க இந்த வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ஒருவர் விண்ணப்பிக்க இயலாது.
இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள் (பீடி, சிகரெட், மது) தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு தொழில்கள், மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்க இந்த வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்:
1.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் .
2.தொழிலின் திட்ட அறிக்கை.
3.கல்வித் தகுதி சான்றிதழ். கல்வித் தகுதி சான்றிதழ் இல்லையெனில் வயது ஆதாரச் சான்றிதழ்.
4.குடும்ப அட்டை அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஓர் ஆதாரம்.
5.தொழில் செய்யவிருக்கும் இடத்திற்கான நில பத்திர நகல்/வாடகை ஒப்பந்த பத்திரம்/
குத்தகை ஒப்பந்த பத்திரம்.
6.கட்டடம் கட்டுவதற்கு கடன் தேவைப்படின் மதிப்பீட்டுடன் கூடிய கட்டட வரைபடம்.
7. இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் விலைப்புள்ளி
8. விண்ணப்பதாரர் சிறப்பு பிரிவினர் என கோரும் பட்சத்தில் அதற்கான சாதிச் சான்றிதழ்
9. தொழில் சம்பந்தமான பயிற்சிகள் முடித்திருப்பின் அதற்கான சான்றிதழ்
மேலும் விவரங்களுக்கு:www.kvic.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.