கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முந்தி இருப்பச் செயல் - 42:  தன் மேலாண்மைத் திறன் - 2

ஒருவரை ஏற்க மறுக்கும் உத்திகளாக விமர்சனமும் வெறுப்புணர்வும் அமைகின்றன. நேர்மறை விமர்சனத்திற்கும், எதிர்மறை விமர்சனத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:53 pm

சுப. உதயகுமாரன்

வெறுப்பு 

ஒருவரை ஏற்க மறுக்கும் உத்திகளாக விமர்சனமும் வெறுப்புணர்வும் அமைகின்றன. நேர்மறை விமர்சனத்திற்கும், எதிர்மறை விமர்சனத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

நேர்மறையாக விமர்சிக்கிறவர்கள் உங்கள் கருத்தை, செயல்பாட்டை உங்களுக்கு உதவும் வகையில் திறனாய்வு செய்கிறார்கள்; திறம்பட மாற்றியமைக்க உதவுகிறார்கள். அந்த ஆக்கபூர்வ விமர்சகர்கள் உங்கள் மீதான தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதில்லை. நீங்கள் இன்னும் உருப்படவும், உயரவும் வழி வகைகள் செய்திட விழைகிறார்கள். இப்படி மெய்யாக விமர்சிக்கிறவர்கள், பொய்யாகப் புகழ்கிறவர்களை விட பன்மடங்கு மேலானவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

உங்களை வெறுக்கிறவர்கள் உங்கள் கருத்துகளை, செயல்திட்டங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி, தடுமாறச் செய்கிறார்கள். அவர்கள் உங்கள் பலங்களைக் கண்டு கொள்ளாமல், பலவீனங்களை மிகைப்படுத்துகிறார்கள். 

இந்த வெறுப்பை நேர்மறையாகக் கையாளும் வித்தையை அறிந்து கொள்ளுங்கள். எட்டையபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்கிற புகழ்பெற்ற புலவர் ஒருவர் இருந்தார். தனக்குப் போட்டியாக வளர்ந்து வந்த சுப்பையா (எ) சுப்பிரமணிய பாரதி எனும் சிறுவன் மீது அந்த அரசவைக் கவிஞருக்கு போட்டியும் பொறாமையும், வெறுப்பும் எழுந்தன. 

ஒரு நாள் அரசவையில் ஒரு கவிதைப் போட்டி நடந்தது. ஒரு கவிஞர் பாடலின் கடைசி வரியை மட்டும் சொல்ல, இன்னொரு கவிஞர் அதனை முழுமை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தப் போட்டி. பாரதிக்கு கடைசி வரியை எடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு காந்திமதிநாதனுக்குக் கிடைத்தது. "பாரதி சின்னப்பயல்' 
என்கிற வரியோடு முடியும் கவிதையைப் பாடும்படி எகத்தாளமாய் அவர் சொல்ல, அரசவையே ஏளனமாய் சிரிக்க, பாரதியார் இப்படிப் பாடினார்:

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதிநாதனைப்
பாரதி சின்னப்பயல்.

தன்னை விட வயதில் இளையவன் என்கிற அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்து, மாண்பற்ற கருமையான இருள் போன்ற உள்ளத்தைக் கொண்ட காந்திமதிநாதனைப் பார், அதி (மிகவும்) சின்னப்பயல் என்று பாரதி பாடியதும், அரசவைக் கவிஞர் அவமானப்பட்டுப் போனாராம். 

வெறுப்புப் பேச்சு, வெறுப்புக் குற்றங்கள், வெறுப்பரசியல் என்று நமது உலகம் வெறுப்புணர்வால் பீடிக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், அந்தப் பொறிக்குள் விழாமல் தப்பித்துக்கொள்வது, இன்றைய இளைஞர்களாகிய உங்களுக்குப் பெரும் சவாலாகவே அமைகிறது. 

சாதி, மதம், இனம், மொழி, பால், பாலியல் விருப்பு, வெறுப்பு, தலைமுறை என ஏதாவதொன்றின் அடிப்படையில் சகமனிதர்களை வெறுப்போடு அணுகும் நபர்களை, அமைப்புகளை  உங்களிடம் அண்ட விடாதீர்கள். வெறுப்புக் குழுக்களின் உறுப்பினர்கள், சமூக-பொருளாதாரப் பிரச்னைகளுக்கு பலி கடாக்களைத் தேடுபவர்கள், அச்சுறுத்தலாய் கருதுபவர்களை அழித்தொழிக்க முனைபவர்கள், சமூக அவலம் ஒன்றை துடைத்தெறிய வந்த தூதுவர்களாய் தங்களைக் கருதுபவர்கள் என ஏராளமான மனநோயாளிகள் தங்களின் மனநோயைப் பிறர் மீது திணிக்க வெறிகொண்டு அலைகிறார்கள். அவர்களிடம் அகப்பட்டுக்கொள்ளாதீர்கள்.

தற்பெருமை

கடும் போட்டியும், பொறாமையும், சூழ்ச்சிகளும் நிறைந்த இன்றைய உலகில் உங்களை, உங்களின் திறமைகளை, சாதனைகளை நீங்கள்தான் பிறருக்குச் சொல்லியாக வேண்டும். உயர்கல்விக்காக, வேலை வாய்ப்புக்களுக்காக, பதவி உயர்வுக்காக, சம்பள உயர்வுக்காக  பிறருடன் போட்டியிடும்போது, நீங்களே உங்களைப் பற்றி உரியவர்களிடம் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி, உங்களுக்கான வாய்ப்பினை, உரிமைகளைக் கேட்டுப் பெறுவது முற்றிலும் சரியானது. 

ஆனால், தேவையற்ற இடங்களில், தேவையற்ற நபர்களிடம் உங்கள் தகுதிகளை, திறமைகளை, அருமை-பெருமைகளை, அற்புதச் சாதனைகளை பேசிக் கொண்டிருக்க வேண்டிய  தேவையில்லை.  

தற்பெருமை பேசுவதை எப்போதும் தவிர்த்துவிடுங்கள். விரைந்து கெட்டுப்போகும் தன்மைகளென மூன்றை வள்ளுவம் பட்டியலிடுகிறது. அவற்றுள் ஒன்று தன்னைத்தானே வியந்து போற்றுவது:

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.

தன் புராணம் பாடுவது என்பது தன்னம்பிக்கையின் வெளிப்பாடல்ல; மாறாக உள்ளுக்குள் ஒரு பாதுகாப்புணர்வு இல்லாமலிருப்பதன், உங்களைப் பற்றிய ஒரு சந்தேகம் ஊடாடிக் கொண்டிருப்பதன் அடையாளம். நாம் எவ்வளவு அற்புதமானவர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்தால்தான் நம்மை விரும்புவார்கள் என்கிற எண்ணமே இப்படிப் பேச வைக்கிறது. 

தங்களுக்குள்ளிருக்கும் ஒரு வெறுமையை மறக்கவும் அல்லது மறைக்கவும் சிலர் தங்களைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். வேறு சிலரோ தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்வது போலவே  பேசி, தங்கள் பெருமைகளை கோடிட்டுக் காட்டுவார்கள். 

எவ்வளவு சாமர்த்தியமாக மறைத்து நாம் பேசினாலும், ஒருவர் தன் புராணம் பாடுவது பிறருக்கு எளிதாகப் புரிந்துவிடும். அப்படி தன் புராணம் பாடுகிறவர்களை மரியாதைக் குறைவாக நடத்தாமல், அவரைப் போலவே நீங்களும் பேசிக்கொண்டிருக்காமல், அன்பாகச் சுட்டிக்காட்டுங்கள். 

உங்களைப் பற்றிப் பேசும் தேவை ஏற்படும்போது, உங்களின் முயற்சிகள், உழைப்பு பற்றி பேசுங்கள். எதையும் கூட்டிக் குறைக்காமல், மிகைப்படுத்தல்கள் இல்லாமல், உண்மைகளை மட்டுமே  பேசுங்கள். பிறரை மட்டம் தட்டாமல், அடுத்தவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து, தவறுகளுக்குப் பொறுப்பேற்று, நன்றியுணர்வுடன் நியாயமாகப் பேசுங்கள்.

சோம்பல்

உயிரோடு இருக்கும் நேரமெல்லாம், பணம் பண்ண வேண்டும், வெற்றியின் பின்னால் ஓட வேண்டும் என்றெல்லாம் தவறாகக் கணக்குப் போடாதீர்கள். 

அவ்வப்போது கடற்கரை, மலைமுகடு போன்ற உங்களுக்குப் பிடித்தமான ஓரிடத்திற்குச் சென்று, அல்லது உங்கள் வீட்டின் ஒரு பகுதியில், அல்லது ஒரு மரத்தின் கீழ் அமைதியாக, எதுவுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருங்கள். வாளாவிருப்பதும் ஒரு திறன்தான். சோம்பிக் கிடப்பதும், சும்மா இருப்பதும் வேறு வேறு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சும்மா இருப்பது நேர விரயமாகாது. 

நேர மேலாண்மை குறித்த வகுப்பு ஒன்றை நடத்திக்கொண்டிருந்த ஓர் ஆசிரியர், மேசையின் மீதிருந்த கண்ணாடிக் குவளையில் பெரிய கற்களைப் போட்டு நிரப்பிவிட்டு, ""இந்தக் குவளை நிரம்பிவிட்டதா?'' என்று கேட்டார். மாணவர்கள், ""ஆமாம் நிரம்பிவிட்டது'' என்று சொன்னார்கள். 

அடுத்ததாக ஆசிரியர் கொஞ்சம் சல்லிக் கற்களை உள்ளே  போட்டுவிட்டு, ""இந்தக் குவளை இப்போது முழுவதுமாக நிரம்பிவிட்டதா?'' என்று கேட்டார். இனி என்ன வித்தை காட்டப்போகிறாரோ என்கிற ஆர்வம் மேலெழுந்தாலும், பலரும் குவளை உண்மையிலேயே நிரம்பிவிட்டதாகவே நம்பினர். 

ஆசிரியர் இப்போது கொஞ்சம் மணலை அள்ளி உள்ளே  போட்டார். ""இப்போது குவளை நிரம்பிவிட்டதா?'' என்று கேட்டார். அனைவரும் ஒரே குரலில் ""ஆமாம், குவளை முழுவதுமாக நிரம்பிவிட்டது'' என்றனர். ""இல்லை'' என்று சொன்ன ஆசிரியர், குவளையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார். குவளை அதையும் 
ஏற்றுக் கொண்டது.

""இதிலிருந்து உங்களுக்கு என்ன  புரிகிறது?'' என்று கேட்டார் ஆசிரியர். ஒரு மாணவர், ""ஒரு நாளில் இவ்வளவுதான் வேலை செய்ய முடியும் என்றெல்லாம் கிடையாது, இன்னும் இன்னும் வேலை செய்துகொண்டே இருக்கலாம்'' என்றார். இன்னொரு மாணவரோ, ""உங்களுக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், சிறிய விடயங்களுக்கும் நேரம் ஒதுக்க முடியும்'' என்றார்.

""நேர மேலாண்மையின்  சூட்சுமம் பற்றியதுதான் அந்தப் பயிற்சி'' என்றார் ஆசிரியர்.   உங்கள் நேரக் குவளையில் பெரிய கற்களை முதலில் போட்டுவிட்டு, சிறிய கற்களை, மணலை, தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நேர் மாறாக, சிறிய கற்களை, மணலை, தண்ணீரை முதலில் நிரப்பிவிட்டால், குவளையில் பெரிய கற்களுக்கு இடமே இல்லாமலாகி, பெரும் தவறாகிப் போகும். 

உங்கள் வாழ்க்கையின் பெரிய கற்கள் எவையெவை என்பதைத் தெளிவாகத் தீர்மானித்து அவற்றை உங்கள் நேரக் குடுவைக்குள் முதலில் போடுங்கள். வாழ்வு, உழைப்பு, ஓய்வு -- இவை மூன்றுக்கும் முறையே எட்டு மணி நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, நேர நெருக்கடிகளுக்கு இடமளிக்காது, "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' என்று வழிவகுத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறாமையைக் கடைபிடித்து, அவ்வப்போது ஒரு நேரத் தணிக்கை (டைம் ஆடிட்) செய்துகொள்ளுங்கள். அதே நேரம், நேரம் நேரம் என்று ஓடி நேர நோய்க்கும் (டைம் டிசீஸ்) ஆளாகிவிடாமல், நேர விரயத்துக்கும் இடம்கொடாமல் இனிதாய் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: s‌p‌u‌k2020@‌h‌o‌t‌m​a‌i‌l.​c‌o‌m

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.