செல்வாக்கு செலுத்தவிருக்கும்... புதிய மார்க்கெட்டிங் முறைகள்!

உலகமயமாக்கல் விசையோடு செயல்படத் தொடங்கிய பிறகு, நுகர்வுக் கலாசாரம் பரவலாகியுள்ளது.
செல்வாக்கு செலுத்தவிருக்கும்... புதிய மார்க்கெட்டிங் முறைகள்!
Updated on
2 min read


உலகமயமாக்கல் விசையோடு செயல்படத் தொடங்கிய பிறகு, நுகர்வுக் கலாசாரம் பரவலாகியுள்ளது. நுகர்வுக் கலாசாரத்தின் அடித்தளமாக சந்தைப்படுத்துதல் இருப்பதால், சந்தைப்படுத்துதலின் சந்தைவாய்ப்பு விரிந்து கொண்டே உள்ளன. இதனால் புதுமையான சந்தைப்படுத்துதல் அணுகுமுறைகள் சந்தை வீதிகளில் வலம் வந்தவண்ணம் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுக்குசந்தைப்படுத்துதல் உள்ளாகியுள்ளது.

நிலையான மாற்றங்களுக்கு ஆட்பட்டு வரும் சந்தைப்படுத்துதலில் புதிய போக்குகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படுவது உண்டு. அண்மையில் எடுத்த ஆய்வில்,சந்தைப்படுத்துதலின் போக்குகள் மாறப்போவது தெரியவந்துள்ளது.

நுகர்பொருள்களைச் சந்தைப்படுத்துதலுக்கான செலவுகளை உயர்த்த முடிவு செய்துள்ளதாக 51 சதவீத சந்தைப்படுத்துதலாளர்கள் (மார்கெட்டர்) தெரிவித்துள்ளனர்.

அப்படியானால், இந்தச் செலவுகள் எங்கே செல்லும்? பழைய சந்தைப்படுத்துதல் முறைகளில் மீண்டும் முதலீடு செய்யவிருக்கிறார்களா? அல்லது புதிய முறைகளில் கவனம் செலுத்த உள்ளார்களா? போன்ற கேள்விகள் சந்தைப்படுத்துதல் துறையில் இருப்போரின் மூளையைக் குடைந்து கொண்டிருக்கும்.

இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ள நுகர்பொருள்களைச் சந்தைப்படுத்துவோரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு எந்தவகையான சந்தைப்படுத்துதல் அணுகுமுறைகளைக் கையாளப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. உலக அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பி2பி (வர்த்தகம்வர்த்தகம்), பி2சி (வர்த்தகம் நுகர்வோர்) பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் 1067 சந்தைப்படுத்துதலாளர்கள் கலந்துகொண்டனர். இன்ஃப்ளூயென்சர் மார்க்கெட்டிங் முதல் விர்ச்சுவல் ஈவன்ட்ஸ் வரையில் வணிக நிறுவனங்களின் பிராண்டுகளை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

2022ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் புதுமையான சந்தைப்படுத்துதல் போக்குகள், சந்தைப்படுத்துதலுக்கானசெலவினங்களை முதலீடு செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து உலகசந்தைப்படுத்துதல் சந்தையில் ஆழங்கால் பதித்த சந்தைப்படுத்துதலாளர்கள்மேற்கொண்ட ஆய்வில் 5 முக்கியமான போக்குகளைத் தெரிவித்துள்ளனர்.

குறுவடிவ காணொலிக்கு முன்னுரிமை, வருவாய் தரக்கூடிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதல், ஒலி பொருண்மைக்கு முக்கியத்துவம், சமூகப்பொறுப்புணர்வுக்குகூடுதல் முக்கியத்துவம், தொடரும் பிணைப்பு சந்தைப்படுத்துதல் உத்திகள் ஆகியவையாகும்.

குறுவடிவ காணொலிக்கு முன்னுரிமை சந்தைப்படுத்துதலில் புதிய வரவாக 2020ஆம் ஆண்டு அறிமுகமான குறுவடிவ காணொலிக்கு மவுசு குறையவில்லை. குறு வடிவ காணொலி பொருண்மைகளை வழங்குவதில் டிக்டாக்முதலிடத்தில் இருந்தது. இது தடைசெய்யப்பட்டுள்ளதால், இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவை வாடிக்கையாளர்களிடையே வேகமாகப் பிரபலமடைந்து வருகின்றன. குறுவடிவ காணொலிகளை அதிகம் பேர் பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது பிராண்டுகளை நுகர்வோர்களிடம் கொண்டு செல்லும் சிறந்த சந்தைப்படுத்துதல் வாய்ப்பாக உருவெடுத்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் குறுவடிவ காணொலியில் அதிக முதலீடுகளில் ஈடுபட வணிகநிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சந்தைப்படுத்துதலில் 33 சத முதலீடுகள்,

குறுவடிவ காணொலிகளுக்குச் செலவிடப்படுகின்றன. 2022இல் மேலும் பல புதிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யவுள்ளன.

சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம் என்பதால், நுகர்வுப்பொருள்களை சந்தைப்படுத்துதலில் குறுவடிவ காணொலிகள் முன்னுரிமை பெறுகின்றன. இதனால் 2022ஆம் ஆண்டில் பிராண்டுகள் குறித்து விழிப்புணர்வு 49 சதவீதமும், விற்பனைபொருள்களுக்கு போதுமான விளம்பரம் 44 சதவீதமும், நிறுவன வருவாய் 43 சதவீதமும் அதிகரிக்கவுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதல் விற்பனைப் பொருள்களின் பயன்களைப் பற்றிய தகவல்களை,பிரபலங்கள் அல்லது வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் மூலம் சொல்லிசந்தைப்படுத்துவதுதான் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதல் ஆகும். தற்போது நுகர்வோருக்கான சந்தைப்படுத்துதலில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதலின்செல்வாக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. 2022ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்குவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதலைப் பயன்படுத்த பலரும் திட்டமிட்டுள்ளனர்.2021ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதல்முறைக்கு நல்ல வருவாய் கிடைத்ததால், இதையே தொடர பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

ஆடியோ உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம்:

இந்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்துதல் முறையில் காணொலிகள் தான் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எனினும், இதில் ஆடியோவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நுகர்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பாட் காஸ்ட்ஸ் (வலையொலி) அல்லது இணைய வானொலியின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. 2022ஆம் ஆண்டில் இது 43 சதவீதமாக உயரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூகப்பொறுப்புணர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம்:

விற்பனைப் பொருள்கள் தொடர்பாக நிறுவனங்கள் அல்லது பிராண்டுகள் வெளிப்படையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். பொருள்களைக் கொள்முதல் செய்யும்போது நம்பகத்தன்மையை முதன்மையானதாக வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.

கரோனா பெருந்தொற்று காலத்தில், நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டுமென வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். சமூக பொறுப்புணர்வோடு நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றுவாடிக்கையாளர்கள் விரும்புவதால், இதற்கான செலவுகளை 45 சதவீதம் உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தொடரும் இன்பவுண்ட் சந்தைப்படுத்துதல் உத்திகள்

விற்பனைப் பொருள் அல்லது சேவை குறித்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து சந்தைப்படுத்துவதே இன்பவுண்ட் சந்தைப்படுத்துதல் ஆகும். குறுவடிவ காணொலி சந்தைப்படுத்துதலுக்கு அடுத்தபடியாக இந்த இன்பவுண்ட் சந்தைப்படுத்துதலுக்கே வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது.

கடந்த காலங்களில் நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர்களை தங்கள் பிராண்டை நோக்கி ஈர்ப்பதில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த இன்பவுண்ட் சந்தைப்படுத்துதலைத் தொடர நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. விற்பனைப் பொருள்களைக் கொள்முதல் செய்திடும் ஒவ்வொரு நிலையிலும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிப்பது இன்பவுண்ட் சந்தைப்படுத்துதலின் முக்கிய அம்சமாகும். இதற்காகவே வாடிக்கையாளர்களைக் கவர்தல், மகிழ்வித்தல், செயல்படுதல் ஆகிய உத்திகளை நிறுவனங்கள் கையாள்கின்றன.

2022ஆம் ஆண்டில் பிராண்டுகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் புதுமையான சந்தைப்படுத்துதல் அனுபவம் கிடைக்கவிருக்கின்றன.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து காணொலி/ஒலிதுணுக்குகளை வெளியிடுவது, இன்பவுண்ட் சந்தைப்படுத்துதல் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என 2022ஆம் ஆண்டு புதுமையான சந்தைப்படுத்துதல் ஆண்டாக மலரவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com