சவால்களை சமாளித்த செவ்வாய் கிரக ஹெலிகாப்டர்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் "இன்ஜெனியூட்டி' ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தனது முதல் பயணத்தைத் தொடங்கி சுமார் 7 மாதங்கள் ஆகின்றன.
சவால்களை சமாளித்த செவ்வாய் கிரக ஹெலிகாப்டர்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் "இன்ஜெனியூட்டி' ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தனது முதல் பயணத்தைத் தொடங்கி சுமார் 7 மாதங்கள் ஆகின்றன.

செவ்வாய் கிரகத்துக்கு "பெர்செவரன்ஸ்' விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட அந்தச் சிறிய ரக ஹெலிகாப்டர், பூமிக்கு வெளியே மற்றொரு கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையைப் பெற்றது.

ஆரம்ப கட்டத்தில் 625 மீட்டர் தூரமும், 12 மீட்டர் உயரமும், 169.5 விநாடிகளும் இன்ஜெனியூட்டி பறந்தது. ஆனால், கடந்த செப்டம்பரில் புதிய சவாலைச் சந்தித்தது அந்த ஹெலிகாப்டர். 

பருவகால மாறுபாடு காரணமாக மெல்லிய வளிமண்டலத்தில் பறப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டது இன்ஜெனியூட்டி. பெர்செவரன்ஸ் விண்கலம் கடந்த பிப்ரவரியில் குளிர்காலத்தின் பிற்பகுதியின்போது ஜெசேரோ பள்ளத்தாக்கில் தரையிறங்கியது. அதன் பின்னர் கோடைக் காலம் வந்ததும் செவ்வாயின் வளிமண்டல அடர்த்தியானது பூமியின் வளிமண்டலத்தில் 1.5 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைந்தது. ஏற்கெனவே மெல்லிய வளிமண்டலத்தில் பறக்கும் ஹெலிகாப்டருக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது.

இதற்கு இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் இறக்கைகளின் சுழலும் வேகத்தை 2,500 ஆர்பிஎம்இலிருந்து 2,800 ஆர்பிஎம் ஆக அதிகரிப்பதன் மூலம்  தீர்வு காண முயன்றனர் பொறியாளர்கள். செப்டம்பரில் இந்த முயற்சி நடைபெற்றது. ஆனால், ஹெலிகாப்டர் "டேக் ஆஃப்' ஆகாததால் அதிகச் சுழலும் வேகமானது கவலையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே அதன் ஆயுள் காலத்தை விட அதிக அளவு இயங்கிய நிலையில், ஹெலிகாப்டரின் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. இருப்பினும், ஹெலிகாப்டரின் இயக்கத்தை பூமியிலிருந்து கட்டுப்படுத்தும் பொறியாளர்கள், அதன் சிறிய கட்டுப்பாட்டு மோட்டாரில் இருந்த கோளாறைக் கண்டறிந்ஹது அதை சரிசெய்தனர். 

அக். 24ஆம் தேதி ஹெலிகாப்டரின் இறக்கைகள் 2,700 ஆர்பிஎம் வேகத்தில் சுழலவிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்போது ஹெலிகாப்டர் 5 மீட்டர் உயரம் எழுந்து, கிடைமட்டமாக 2 மீட்டர் நகர்ந்தது. இதையடுத்து, செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் ஹெலிகாப்டரை நீண்ட தொலைவு பறக்கச் செய்வதற்கான நம்பிக்கையைப் பொறியாளர்கள் பெற்றனர். அதன்படி, இன்ஜெனியூட்டியின் 15ஆவது பறக்கும் சோதனை கடந்த வாரம் நடத்தப்பட்டது. அதில் 128.8 விநாடிகள் 400 மீட்டர் தொலைவுக்கு பறந்தது ஹெலிகாப்டர். இதுவரை ஒட்டுமொத்தமாக செவ்வாயில் 3 கி.மீ. தொலைவு பறந்துள்ளது இன்ஜெனியூட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com