பிரச்னைகள்... அறிவியல்... தீர்வு!

அறிவியல் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு வழிவகுக்குமா? என்று கேட்டால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல இயலாது.
பிரச்னைகள்... அறிவியல்... தீர்வு!

அறிவியல் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு வழிவகுக்குமா? என்று கேட்டால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல இயலாது. அதேசமயம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அறிவியல் சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கும்.  

நோய், பசி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களில் அறிவியலை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அவற்றை எதிர்த்துப் போராட அது உதவியாக இருக்கும் .

ஆனால், அறிவியல் தானாக செயல்படாது. அறிவியலை நாம்தான் செயல்படுத்த வேண்டும்.

பொதுவாக, ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வது எளிது. அதைச் செயல்படுத்துவது கடினம். ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டவர்கள் எல்லோருமே அதை செயல்படுத்துவார்கள் என்று சொல்லிவிட முடியாது. உலகத்தின் செயல்பாடுகள் முழுவதையும் கணக்கில் கொண்டு நுட்பமாகப் புரிந்து ஒருங்கிணைக்கும் பணியை செய்வதுதான் அறிவியல். "எனக்கு இந்த அறிவியல் புரிந்து விட்டது' என்று நாம் சும்மா இருந்தால் அதனால் பயன் இல்லை. அதை செயல்படுத்தினால் தான் பயன் கிடைக்கும். உதாரணமமாக, உடற்பயிற்சி செய்தால் என்னவெல்லாம் பலன் கிடைக்கும் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். இது எளிது. ஆனால் அதை அவர் வழக்கமாக தினமும் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இது மிக கடினம். 

அறிவியல் உண்மையில் எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்காது. அதேசமயம் அறிவியலால் ஒருவருக்குக் கிடைக்கும் அறிவை முறையாக பயன்படுத்தினால் பிரச்னை தீரும். 

உதாரணமாக வழக்கமாகச் செய்யக் கூடிய ஒரு  பணிக்கு புதிதாக ஒரு கருவியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால் அந்த அறிவியலைப் பயன்படுத்தி அந்தக் கருவியை இயக்க தெரிந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும். அதேபோல அறிவியலால் உருவாக்கப்பட்ட மாத்திரைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து பயன்படுத்தினால் உடல் நோய் குணமாகும். தெரியாமல் பயன்படுத்தினால் பிரச்னைகள் உருவாகும். 

சரியான செயல்பாடுகள் இல்லாததால் மனிதர்கள் மிகப் பெரும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அறிவியல் மற்றும் அறிவியல் அறிவின் தெளிவுடன் செயல்பாடுகள் இருந்தால் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 

அறிவியல் செயல்பாடுகளால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு தேவையான புதிய நுட்பங்களை அறிவியல் செயல்பாடு நமக்குத் தந்துள்ளது. இந்த அறிவியல் செயல்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 ட்ரில்லியன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் வாழும் ஒவ்வொரு வரும் நாள்தோறும் ஏழு வேளை  அரிசி உணவு சாப்பிடும் அளவிற்கு இந்த அளவு உள்ளது. அதேபோல் கோதுமை, சோளம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியும் பல மடங்கு பெருகி உள்ளன. இருந்தபோதும் பல இடங்களில் மில்லியன் கணக்கில் மக்கள் பசியால் வாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி என்றால் அறிவியல் செயல்பாடுகள் மூலம் போதிய உணவு உற்பத்தி இருந்தும் அதை அனைவரிடமும் கொண்டு செல்வதற்கான அறிவியல் செயல்பாட்டை நாம் பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. 

உணவு அறிவியல் என்று ஓர் அறிவியல் இருந்தபோதும் அதை முறையாகப் பின்பற்றாததால் பல இடங்களில் உணவு விநியோகம் சரியாக நடைபெறுவதில்லை. உணவின் பெரும்பகுதி மனிதர்களால் வீணடிக்கப்பட்டு வருகிறது. வளம் கொழிக்கும் நாடுகள் தங்களுடைய  தேவையைவிட அதிக அளவில் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளுக்கு உணவு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் வாங்கி குவித்துள்ள உணவுப்பொருட்களின் பெரும்பகுதி பயனற்றதாக மாறிவிடும். அதைத் தூக்கி எறியும் அவலமும் நேரிடும். சில திறமையற்ற நிர்வாகங்கள் காரணமாக உணவு விநியோகத்தில் குளறுபடி ஏற்படுகிறது.

அடுத்தது, அறிவியல் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? என்பதை தெளிவாகக் கற்றுக் கொடுக்கும். ஆனால் அதைச் செயல்படுத்த வேண்டியது நமது கடமை. அதை சிலர் பின்பற்றக் கூடும். சிலர் அதைப் பின்பற்றத் தயாராக இருக்க மாட்டார்கள். புவி வெப்பம் அதிகரித்து வருகிறது என அறிவியல் சொல்லும். அதை சமநிலைப் படுத்த வேண்டியது மனிதர்களின் கடமை. அதற்கான வழிமுறைகளையும் அறிவியல் கற்றுக் கொடுத்துவிடும். அதை நாம் நன்றாக கற்றுக் கொள்வோம். ஆனால் செயல்படுத்தத் தவறிவிடுவோம். அதன் பின் அறிவியலால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிவியல் மேல் பழி போடுவோம். 

(முள் குத்திவிட்டது என்று சொல்வதுபோல). 

சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்கு அறிவியலால் புதிய தொழில்நுட்பத்துடன் கார்களை வடிவமைக்க முடியும். ஆனால், அந்தக் கார்களை வாங்கி பயன்படுத்துவது மனிதர்கள்தானே? அவர்கள் தானே அந்த முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் அந்த அறிவியல் செயல்பாட்டை பயன்படுத்தாவிட்டால் சுற்றுச்சூழல் மேலும் மாசடைய தானே செய்யும்?  

அறிவியல் தொடர்பான புரிதல் பலருக்கு இருந்தாலும் கூட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள உணர்வுகள் அறிவியலைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மருத்துவ வளர்ச்சி மிகப்பெரும் உயரத்தை எட்டிய போதும் மருத்துவத்தையும் தாண்டிய சக்தி உலகில் இருப்பதாக இன்னும் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய உணர்வுபூர்வமான விஷயங்களால் சில நேரங்களில் அறிவியல் செயல்பாடுகள் பின்னுக்குச் சென்று விடுகிறது என்பதை உணர முடியும் மருத்துவர்கள் சிலர் கூட எங்களால் முடிந்தவற்றை செய்துவிட்டோம். இனிமேல் ஏதாவது நடந்தால் அது  மெடிக்கல் மிராக்கிள் என்று  சொல்வார்கள்.  

அன்பு, உறவு, கலை, இசை, இலக்கியம், ஆன்மீகம், காதல் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அனைத்தும் அறிவியலுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கூட அறிவியல் அடிப்படையில் பார்க்க முடியும்.  உலகின் எந்தவொரு பிரச்னையையும் நாம் அறிவியல் அடிப்படையில் பார்த்து, அதற்குத் தீர்வு காண முடியும் என்பதே உண்மை. அறிவியல்ரீதியிலான பார்வையை நாம் வளர்த்துக் கொள்வதே இதற்கு ஒரே வழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com