கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! -  23: வழிகாட்டும் வல்லவர்!

வெட்டுக்கிளியும் எறும்பும் மண்பரப்பில் தோட்டங்களில் சுற்றிவரும் ஜந்துக்கள்.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! -  23: வழிகாட்டும் வல்லவர்!


வெட்டுக்கிளியும் எறும்பும் மண்பரப்பில் தோட்டங்களில் சுற்றிவரும் ஜந்துக்கள். சுறு சுறுப்பிற்கு உதாரணமாக எறும்பு இடைவிடாது அங்கும் இங்கும் அலைவதை கூறுவார்கள். கோடைகாலத்தில் எறும்புகள் அணிஅணியாகத் திரண்டு பொருட்களை ஓரிடத்தில் சேமிக்கும்.

"ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி' என்று மணலைச் சேகரித்து தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். ஓர் எறும்பின் சராசரி எடை நான்கு மில்லி கிராம். ஆனால் அது தனது எடையை விட பத்திலிருந்து ஐம்பது மடங்கு எடைக்குமேலாக தூக்க வல்லது. ஆனால் மனிதனோ தனது எடையை விட ஒன்றரை மடங்கு வரை தான் தூக்க இயலும். எறும்புகள் ஒற்றுமையாகப் பணி செய்ய வல்லவை. கூட்டு முயற்சியில் ஒருங்கிணைந்த மூளையோடு செயல்படும். நல்லனவற்றை ஏற்கும். வேண்டாதவற்றைப் புறக்கணிக்கும். "ஒற்றுமையாய் வாழ்வதாலே விளையும்நன்மையே' என்று மனித குலத்திற்கு உதாரணமாக இருப்பது எறும்பு வம்சம். 

வெட்டுக்கிளி சுதந்திரமாக வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல் சுற்றி வரும். எப்போதும் ஆட்டமும் பாட்டமும் தான்! வசந்த காலத்தை முழுமையாக அனுபவி ராஜா அனுபவி என்று சுக போகத்தில் திளைக்கும். கனமழையைத் தொடர்ந்து குளிர் அடிக்கத் தொடங்கும். எறும்புகள்மணல் குடிலில் சேமித்த உணவை உண்டு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வெட்டுக்கிளி போக்கிடமின்றி உயிருக்குப் போராடும். இதே தான் வாழ்க்கையில் முயற்சி செய்து வெற்றி காண்பவர், ஒன்றும் செய்யாமல் முடங்குவோரின் நிலைமைகளும்!

வாழ்க்கையில் எல்லாம் எளிதாக கிடைத்து விடாது. "இலவச உணவு என்பது மாயை' என்ற ஆங்கில வசனம் உண்டு. அது நூற்றுக்கு நூறு உண்மை.

நம்மை நாமே ஒரு பாதுகாப்பான வட்டத்திற்குள் அடைத்துக் கொள்கிறோம். நமது முழுமையான திறமையை நாம் சோதித்துப் பார்ப்பதில்லை. அந்த சிறிய எறும்புக்கு உள்ள வைராக்கியம் நம்மிடம் இருப்பதில்லை. அதற்குக் காரணம் ஒருவித தோல்வி பயம் ஒருவரை ஆட்கொள்கிறது. சுயமாக உருவாக்கியபாதுகாப்பு வளையத்திலிருந்து வெளி வந்தால் உலகில் உள்ள சவால்களை சந்திக்க  எதிர்கொள்ளஒருவித எதிர்மறை சக்தி தடுக்கிறது. வெளி உலகை எதிர்கொண்டவர்கள்தாம் வாழ்க்கையில் வெற்றி படைக்கிறார்கள். அவர்களது வெற்றி ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நன்மை பயக்கிறது.

கோயம்புத்தூர்கிருஷ்ணாராவ் பிரஹலாத் மேலாண்மை உலகில் நன்கு அறியப்பட்டவர். "மேனேஜ்மெண்ட் குரு' என்று போற்றப்பட்டவர். பெற்றோருக்கு ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்து கோயம்புத்தூரில் பள்ளி படிப்பு, சென்னை லயோலா கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்து யூனியன் கார்பைட் பன்னாட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

கிடைத்த வேலையில் நாட்டம் செலுத்தாமல் கிடைக்காத ஒன்றைத் தேடும் மனநிலை பல இளைஞர்களிடம் உள்ளது. முதல் வேலையில் தான் பல புதிய கோணங்களில் படிப்பினைகள் கிடைக்கும்.ஒருவித ஈர்ப்பினால் உந்தப்பட்டு மனதும் புதியனவற்றைப் பதிய வைத்துக் கொள்ளும். அரசு பணியிலும் இதைப் பார்க்க முடியும்.ஓர் அலுவலர் முதல் ஐந்து வருடங்களில் தன்னை ஸ்திரப் படுத்தி முழுவீச்சோடு பணி செய்தால் சிறப்பான மதிப்பீடு அவரைப் பற்றி ஏற்படும். அந்த நல் மதிப்பீடு அவர் எங்கு சென்றாலும் அவரது பணிக்காலம் முழுக்கத் தொடரும். அதற்கு நேர்மாறாக சோம்பியிருந்தாலோ நேர்மை தவறினாலோ அந்த பழி வாழ்நாள் முழுக்க வாட்டும்! 

சி.கே.பிரஹலாத் தனக்குக் கிடைத்த முதல் வேலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதுவே அவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது. மேலாண்மைப் படிப்பில் நாட்டம் கொண்டு அஹமதாபாத் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மேல் படிப்பு என்பது கல்லூரி படிப்போடு நின்றுவிடுவதல்ல. ஒவ்வொருகால கட்டத்திலும் நமது ஆளுமைத் திறனை மேம்படுத்த இடைவிடாது கற்பது. நமது பணிகால பாதையை வளமாக்கும். பிரஹலாத் எடுத்த அடுத்த முடிவு மேல் படிப்பிற்கு அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம் சென்றது. அங்கு இரண்டரை ஆண்டுகளிலேயே பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மை குறித்த அவருடையஆராய்ச்சிக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. முதலில் தன்னை உருவாக்கிய அஹமதாபாத் மேலாண்மை இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அந்த பணியின் போதே பல நூதன ஆலோசனைகளை நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்க அவர் அளித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. 

1977ஆம் வருடம் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர்ந்தார். விடுப்பில் சென்ற ஆசிரியருக்குப் பதிலாக பிரஹலாத் ஒரு மாதம் பாடம் எடுக்க நேர்ந்தது. அவரது தெளிவான வித்தியாசமான உரை, மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. விடுப்பில் சென்ற ஆசிரியர் திரும்பிய பிறகும், மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க பிரஹலாத் தொடர்ந்து விரிவுரையாளராகப் பல்கலைகழகத்தில் பணியாற்றினார். மிக சிறந்த பேராசிரியர் என்று எல்லாராலும் போற்றப்பட்டார். 

பொருளாதாரச்சிந்தனைகள் அதனைச் செயலாக்க நிர்வாக மாற்றங்கள் பல காலகட்டங்களில் எடுக்கப்படுகின்றன. மக்களுக்கு பயனளிப்பு சென்றடைய வேண்டும் என்பது தான் உயரிய நோக்கம். கார்ல் மார்க்சின் "பொதுவுடமை சித்தாந்தம்', ஆதம் ஸ்மித்தின் "தனிமனித பொருளாதார சுதந்திரம்', 1933 இல் உலகம் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க ஜான் கீன்சின் "பற்றாக்குறை நிதியாக்கம்', இவையெல்லாம் சமுதாயத்தில் ஓரளவு நன்மை பயக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அமரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் 1932 இல் மற்றுமொருமுக்கியமான கருத்து தெரிவித்தார். சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறுவனங்கள் செயல்பட்டால் ஏழை மக்களின் தரம் உயரும். அதே வேளையில் அதிகமான மக்களின் தேவைகள் பெருகுவதால் பொருளாதாரச் சுழற்சி மேம்படும். 

பிரஹலாத் பிரமிடின் அடித்தளம் ( பாட்டம் ஆஃப் தி பிரமிட்) அதிக ஜனத்தொகை உள்ள நாடுகளில் ஏழை, நடுத்தரமக்களின் தேவைகளை மையமாக வைத்து புதிய பொருளாதார அணுகுமுறையை 1998 ஆம் வருடம் மேலாண்மை அறிஞர்கள் முன் வைத்தார்.

2004-ஆம் வருடம்"தி ஃபார்ச்யூன் அட் தி பாட்டம் ஆஃப்தி பிரமிட்' என்ற புத்தகத்தில், " ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால் வறுமை ஒழியும்;அதே நேரத்தில் நிறுவனங்கள் அதிகப் பயனும் பெறலாம்' என்ற சித்தாந்தத்தை உலகுக்கு அளித்தார். 

மேலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மையத் திறமை உள்ளது  "கோர் கம்பிடன்ஸ்'. அதனை அடையாளப்படுத்தி நிறுவன வளர்ச்சி மற்றும் பல்நோக்குத் திட்டங்களை மேம்படுத்த நல்ல அணிகலன்களாக அமையும் என்ற அவரது ஆலோசனை பெரிய வெற்றியை ஈட்டி தந்தது. பிரஹலாத் வர்த்தக உலகில் செல்வாக்கு நிறைந்த நிபுணர் என்று இருமுறை அங்கீகாரம் கிடைத்தது, இந்தியாவிற்குப் பெருமை.

2005 ஆம் வருடம் தகைசால் பேராசிரியர் என்ற மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் உயர்ந்த விருது பிரஹலாதுக்கு வழங்கி கொளரவித்தனர். இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. அவரது வழிகாட்டுதல் பல நாடுகளில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர வழி வகுத்தது. தமிழ்நாடு அவரது சேவையை அரசு நிர்வாக ஆளுமைக்கு பெற்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நல்லவர்கள் வல்லவர்கள் போற்றப்பட வேண்டும். 

எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் செல்வத்தை நியாயமான வழியில் எவ்வாறு பெருக்குவது என்பதை நடைமுறைப் படுத்தினார். தமிழ்நாட்டில் பிறந்து உலக அளவில் சாதனை படைத்த பிரஹலாதின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி.

பணம் படைத்தவர் எல்லாரும் செல்வந்தரல்ல. பணக்காரனுக்கும் ஏழைக்கும் என்ன வித்தியாசம்? எந்த ஓர் இளைஞன் தன்னைத் தயார் செய்து கொள்ள பயிற்சி எடுத்து, புதியன பழகி முன்னேற்ற பாதையில் செல்ல துடிக்கிறானோ, அவனே செல்வம் படைத்தவன். இன்னோர்இளைஞன் தனது பிரச்னைகளுக்கு மற்றவர் மீது பழி சுமத்தி பணம் உள்ளவர் திருடர்கள் என்று குறை கூறுவதே தொழிலாகத் திரிந்தால் அவன் பரம ஏழை! 

கழுகைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

உயரப் பறக்கும் கழுகின் குணாதிசயங்கள் ஆளுமைத் திறன்களை வளர்த்துக் கொள்ள அறிய வேண்டியவை. கழுகு எப்போதும் தன்னை உயர்த்தி எட்டாத தூரத்தில் பறக்கும். சாதாரண இனங்களோடு உறவாடாது. தனது சக இனத்தோடு உயரப் பறக்கும். நாம் சாதிக்க வேண்டும் என்றால் எதிர் கொள்ள வேண்டிய சவால்களின் மீது கூர் நோக்கு பார்வை, முனைப்பான கவனம் தேவை. அதற்கு கழுகு உயர பறப்பது போல் உயரிய கோட்பாடோடு தனிமைப்படுத்திக் கொண்டு நல்லவர்கள் ஆலோசனை பெற்று செயல்பட்டால் தான் சாத்தியமாகும். 

கழுகு இறை தேடுகையில் தனது கூர்மையான பார்வையை நாடுகிறது. ஓர் இரையைக் குறி வைத்தால் தனது வலிமையான கூரிய நகங்கள் மேவிய பாதங்களில் இருபது கிலோவிற்கும் மேல்பட்ட ஆடுகளை கவ்விச் செல்கிறது. அதே போல் ஒரு குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் "கருமமே கண்ணாயினார்' என்பதற்கு ஒப்ப எல்லா சக்தியையும் பயன்படுத்தி நிறைவு செய்ய வேண்டும். 

கழுகு வேட்டையாடி உயிருள்ளவற்றை உணவாக்கும்.

செத்தவற்றை தீண்டாது. பழையனவை, தேவையற்றவை, நேரத்தை விரயமாக்கும் விஷயங்களை கழுகு போல் அறவேதவிர்க்க வேண்டும்.

கழுகு முட்டையிடும் முன் மிக உயரத்தில் கூடு கட்டும். குஞ்சு பொறித்தவுடன் அவற்றுக்குத் தேவையான உணவு அளிக்கும். கழுகு குஞ்சுகள் பிறக்கும்போது, வலிமையோடு பிறப்பதில்லை. அவை எல்லாம் பயிற்சியால் பெறப்படுபவை. ஒரு கட்டத்தில் தாய் கழுகு மென்மையான பொருட்களை கூண்டிலிருந்து எடுத்து விட்டு கூர்மையான குச்சிகள் மேல் குஞ்சுகளை இருக்க செய்யும். சௌகரியமாக இருந்த இருப்பிடம் கரடு முரடானதால் குஞ்சுகள் கூண்டின் விளிம்பிற்கு செல்லும். தலை சுற்றும் உயரத்திலிருந்து அண்ணாந்து பார்த்தால் அதல பாதாளம்! என்ன செய்வதென்று நடுங்கும் குஞ்சுகளை தாய்கழுகு கீழே தள்ளி விடும். அரைகுறையாக குஞ்சுகள் பறக்க முயற்சிக்கும். அவை கீழே விழுவதற்குள் தாய் கழுகு குஞ்சைப் பிடித்து கூட்டுக்குக் கொண்டு வரும். மீண்டும் இதே பயிற்சி, ஒரு நிலையில் குஞ்சுகள் சுயமாகப் பறக்க கற்றுக் கொள்ளும். தான் கஷ்டப்பட்டு பயின்றது போல் தனது குஞ்சுகளும் பயில வேண்டும் என்று கழுகு திடமாக நம்புகிறது. எந்தச் சலுகையும் தனது குஞ்சுகளுக்கு அது அளிப்பதில்லை. இது இந்தக் காலத்து பெற்றோர்களுக்கு ஒரு பாடம். தான் கஷ்டப்பட்டதை போல் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று இளையோரை ஒரு பாதுகாப்பு வளையத்தில் போடும் நிலை மாற வேண்டும். களத்தில் விழுந்துபுரண்டால் தான் தன்னம்பிக்கை வளரும்.

கழுகுகள் சூறாவளி காற்று புயல் வந்தால் பயப்படுவதில்லை. மாறாக காற்றின் அழுத்ததை உபயோகித்து மேகங்களுக்கு மேலே சென்று வீசும்காற்றின் வேகத்தோடு இதமாக மிதக்கும். மற்ற பறைவகளோ மரங்களின் இலைகளில் தங்களைப் பாதுகாக்க முற்படும். கழுகு போல் புயல் வருகையில் பிரச்னைகளை எதிர்கொண்டு தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றி தங்களைச் சாதனையாளர்களாக உயர்த்திக் கொள்வார்கள். 

 கழுகு காலத்தால் நலிந்த தன் சிறகுகளை கிள்ளி எடுத்து விட்டு புது சிறகுகள் வளர காத்திருக்கும். காலத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். பயிற்சியில் ஈடுபட்டு புதிப்பித்துக் கொள்ளவேண்டும் என்பதை கழுகு உணர்த்துகிறது.

எறும்பின் வைராக்யம், கழுகின் கம்பீரம் நம்மை வழிநடத்தட்டும்!

சென்ற வார கேள்விக்குப் பதில்: சி பி ஐ 1963ம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்டது. முதல் இயக்குநர் டி.பி. கோஹ்லி இந்த வாரக் கேள்வி: 2021 பொருளாதாரத்திற்கு நோபல் விசேஷ விருது பெற்றவர் யார்?

(விடை அடுத்தவாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com