பதின் பருவத்தினரைக் கையாள்வது எப்படி?

உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினர் அதிகம் கோபப்படுகின்றனரா? எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைகிறார்களா?
பதின் பருவத்தினரைக் கையாள்வது எப்படி?
Published on
Updated on
3 min read

உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினர் அதிகம் கோபப்படுகின்றனரா? எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைகிறார்களா? அதற்கும் மேலாக வீட்டிலேயே சிறு திருட்டில் ஈடுபடுதல்,அடுத்தவர்களைத் துன்புறுத்துதல், வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய உச்சகட்ட எதிர்மறைப் பழக்கங்களை கொண்டுள்ளனரா? அப்படியெனில் உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினர் ஆரோக்கியமற்ற எதிர்மறை நடத்தைகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.

உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம்.

பொதுவாக டீன்ஏஜ் எனும் பதின் பருவமான 13 வயது 19 வயது வரை குழந்தைகள் வளர்ப்பில் சிக்கலான பருவமாகவே பார்க்கப்படுகிறது.

குழந்தைப் பருவத்திற்கும் வளர் பருவத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் உடலுறுப்புகளின் வளர்ச்சி, பலவித ஹார்மோன்களின் சுரப்பு என ஏற்படும் உடல் மாற்றங்கள், நடத்தையிலும் உணர்ச்சிகர பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த பதின் வயதில் குழந்தைகளைப் பெற்றோர்கள் சரியாகக் கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் காலங்காலமாக தொடர்கின்றன.

பதின் வயதில் பெரும்பாலான குழந்தைகளிடம் கட்டுப்பாட்டை மீறிய எதிர்மறை நடத்தைகள் அதிகம் இருக்கும். இதற்கு உடலியல் மாற்றங்களே முக்கிய காரணம். மேலும், பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு அவர்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம். தனித்துவத்தை தேடும் நோக்கில் மற்றவர்களிடம் மரியாதையின்றி கோபப்பட்டு நடந்து கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.

குறுகிய மனப்பான்மை, பெற்றோருடன் விவாதம் செய்வது, குடும்பத்தினருடன் பேசுவதைத் தவிர்ப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பது, விதிமுறைகளை மீறுதல் என அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். உடலியல் மாற்றங்களால் நிகழும் நடத்தை மாற்றங்கள் இவை என்பதால் இது சாதாரணமானதுதான்.

ஆனால், இதிலும் ஒரு படி அதிகமாக நாம் முதலில் குறிப்பிட்ட எதிர்மறைப் பழக்கங்களை மேற்கொள்வது மிகவும் கவலைக்குரிய அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

இதில் முதல் கட்டம்,வீட்டில் உள்ள பதின் பருவத்தினரிடம் பெற்றோர் மனம்விட்டுப் பேசினாலே இந்த பிரச்னைகள் சரியாகி விடும். ஆனால், இரண்டாவது கட்டத்தில் உள்ள பதின் பருவத்தினரின் நடத்தைகளில் பெற்றோர்களாகிய நீங்கள் எவ்வளவு துரிதமாக சாமர்த்தியமாக செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில் ஆரோக்கியமற்ற நடத்தைகளால் பதின் பருவத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

பதின் பருவத்தினருக்கு புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்தையும் ஒருவித பதற்றத்துடன் அணுகுவது, சிறிய பிரச்னைகளைப் பெரிதாக்குவது, கூச்சல் போடுவது, முற்றிலும் பொறுமையின்றி இருப்பது என எல்லாம் இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சலினால் புகை, மது என தவறான பாதைகளில் செல்கின்றனர். இளைஞர்களை விட பதின் வயதினர்தான் போதைப்பொருள் பழக்கத்திற்கு இன்று அதிகம் அடிமையாகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு அப்போது இருப்பதில்லை.

பதின் வயது மாற்றங்கள் ஆண், பெண் என இரு பாலருக்கும் இருக்கும்.மகன்
அல்லது மகளின் உடல், மனதில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்க்க முடியும்.

கட்டுப்பாட்டை மீறிய பதின் பருவத்தினரை மீட்டெடுக்கும் சில வழிகள் இதோ...

சுதந்திரம் வழங்குதல்: குழந்தைகள் பதின் பருவத்தை அடையும்போது தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் இதில் தலையிடும்போதே அவர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும். அதன் பின்னர் அவர்களைக்கண்காணித்து தவறு இருந்தால் உடனடியாக சுட்டிக்காட்ட வேண்டும். பெரும்பாலான பதின் பருவத்தினர் பிரச்னை முற்றிய பின்னரே பெற்றோரை நாடுகிறார்கள். எனவே, சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.

பொறுமையுடன் கையாளுதல்: பதின் பருவத்தினர்கோபப்பட்டாலும் கத்தினாலும் பெற்றோர்களாகிய நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு பொறுமையாகப் பேசி புரிய வைக்க வேண்டும். முடியாதபட்சத்தில் அவர்களின் முடிவுக்கு நீங்கள் ஒப்புக்கொண்டு பின்னர் படிப்படியாக புரிய வைக்க முயற்சிக்கலாம்.

நண்பர்கள் வட்டத்தை கண்காணித்தல்:

உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரின் நண்பர்கள் வட்டாரம், பள்ளி சூழ்நிலை உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

நண்பர்களின் நடத்தைகளும் உங்கள் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நல்ல பழக்கங்கள் கொண்ட நண்பர்களிடம் மட்டுமே பழகவிட வேண்டும்.

அன்பு, ஆதரவு தருதல்: பதின் வயதினருக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் தேவையானது அன்பும் ஆதரவும். அந்தவகையில் உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரைஇனிமேல் நீங்கள் மரியாதையுடனும் நடத்த வேண்டும். அவர்களுக்காக நேரம் செலவழித்துப் பேசுவது பிரச்னைகளை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பதின் பருவத்தினர் நேர்மையாக இருக்க இது உதவும். வீட்டின் முக்கிய முடிவுகளில் அவர்களை முன்னிலைப்படுத்தலாம். பதின் பருவத்தினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

பிசியாக வைத்துக்கொள்ளுதல்: உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை பிசியாக வைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். நேரடியாக பல விளையாட்டுகளில்அவர்களை ஈடுபடுத்தலாம். அதாவது படிப்பு மட்டுமின்றி, வேறு கலைகளிலும்அவர்களை ஈடுபடுத்துவதால் அவர்களின் திறமையைக் கண்டறிய முடியும். படிப்பு, கலைகளில் நேரம் செலவழிப்பதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற நேரம் கூட இருக்காது.

மனநல ஆலோசனை பெறுதல்:

பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்க்க முடியாத பட்சத்தில், இறுதியாக மன நல ஆலோசகரை அணுகலாம். சாதாரணமாக பதின் பருவத்தினரை ஏதாவது பொது இடத்திற்கு வெளியில் அழைத்துச் சென்று மனநல மருத்துவரிடம் பேச வைக்கலாம். பதின் வயதில் ஏற்படும் சில உணர்ச்சிகள், பெற்றோரிடம் சொல்ல முடியாதவையாகக் கூட இருக்கலாம்.

மருத்துவர்கள் பதின் வயதினரின் நடத்தை மற்றும் உணர்ச்சிகளை அறிவதால் எளிதாக அவர்களைக் கையாள முடியும். தற்போதைய காலத்தில் உடல்நலத்தை விட மனநலம் மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் மறந்துவிட வேண்டாம்.

பதின் பருவத்தில் வரும் மாற்றங்கள் சாதாரணமானவை என்றாலும் அந்த நேரத்தில் பதின் பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துகிறோமோ அதற்கேற்பவை அவர்களின் எதிர்கால குணங்கள், நடத்தைகள் உருவாகின்றன. எனவே, பதின் பருவத்தினரிடம் எதிர்மறை மாற்றங்கள் அதிகரிக்கும்பட்சத்தில் மனநல மருத்துவரின் உதவியோடு அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com