மாறிவரும் வேலைவாய்ப்புகள்!

கரோனா பெருந்தொற்று மனித   வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மனித சமூகத்தின் இயல்பு வாழ்க்கை உலகம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மாறிவரும் வேலைவாய்ப்புகள்!


கரோனா பெருந்தொற்று மனித   வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மனித சமூகத்தின் இயல்பு வாழ்க்கை உலகம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அனைத்துவகையான தொழில்கள், வணிகம், கல்வி உள்ளிட்ட எல்லாத் துறைகளும் மோசமான வீழ்ச்சியை சந்தித்தன.  வேலையில் இருந்தோருக்கு வேலை பறிபோனது. வேறு சிலருக்கு ஊதியம் குறைக்கப்பட்டது. மேலும் பலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. படித்து முடித்துவிட்டு வேலைச்சந்தையில் இறங்கிய பலருக்கு வேலையே கிடைக்கவில்லை. இப்படி வேலைவாய்ப்புகள் மோசமான போக்கைச் சந்தித்தன.

தற்போது உலக அளவில் கரோனா பாதிப்புகள் குறைந்துவருவதால், மீண்டும் தொழில்கள், வணிகங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இது, வேலைவாய்ப்புச் சந்தையையும் உசுப்பியுள்ளது. இதன் விளைவாக, மின்- வணிகம், சில்லரை வர்த்தகம், ஆட்டோமொபைல் துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக ப்ளூ-காலர் வேலைகள் எனப்படும் உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் வேலைகளுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன.

மின்-வணிகம்:

கரோனா பெருந்தொற்று வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை மாற்றியமைத்துள்ளது.   வீட்டில் இருந்தபடியே தேவையான பொருட்களை வாங்கும் மின்-வணிகம் பெருகிவருவதால், அது சார்ந்த பலசரக்கு அங்காடிகள், விற்பனை முகமைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

வர்த்தக நடவடிக்கைகள் அதிகமாகி வருவதால், மின்-வணிகத்தைச் சார்ந்துள்ள சேமிப்புக் கிடங்குகள், சரக்கு விநியோகம், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப வேலைகளுக்கான தேவைகள் பெருகும் வாய்ப்புகள் உள்ளன.

பொருள் விநியோக ஊழியர்கள், பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொடுப்பதற்கு முன்பு அவற்றைப்  பேக்கிங் செய்பவர்கள்,  நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வருபவர்கள் (பிக்கர்ஸ்) ,  வணிக நிறுவனங்களில் மொத்தமாக வந்திறங்கிய பல்வேறு பொருள்களை தனித்தனியாகப் பிரித்து பேக்கிங் செய்பவர்கள், பொருள் சேகரிப்போர்(பிக்கர்ஸ்), வகைப்பிரிப்போர்(சார்ட்டர்ஸ்) போன்ற உடல் உழைப்பு சார்ந்த இடைநிலை வேலைகளுக்கும் அதிக ஆள்கள் தேவைப்படுகிறார்கள். நிறுவனத்தின் தினசரி இயக்கம், நிதி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற இடைநிலை மேலாண்மை பணிகளுக்கும் வேலைவாய்ப்புகள் ஏராளமாகக் காத்திருக்கின்றன.

சில்லரை வணிகம்: 

2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ஆம் ஆண்டில் சில்லரை வணிகத்துறையில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி 20 சதமாக இருந்தது. நிகழ் நிதியாண்டில் இது 40 சதமாக உயரும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விடுமுறைக் காலங்கள் தொடங்கும்போது தான் சில்லரை வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், அந்த நேரத்திற்கு தேவைப்படும் புதிய திறமையாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள சில்லரை வணிக நிறுவனங்கள் மும்முரம் காட்டவிருக்கின்றன. வேலைக்கு பொருத்தமான திறமைகளுடன் கூடிய ஆள்களை எடுப்பதில் மட்டுமே சில்லரை வணிக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆட்களை வேலைக்கு எடுத்து, பயிற்சி அளிக்கும் பழைய நடைமுறைகள் காலத்தில் கரைந்துவருகின்றன. எனவே, திறமைகளை கையில் தேக்கிவைத்துக்கொண்டு நேர்காணல்களுக்கு செல்வது வேலைவாய்ப்பை உறுதி செய்யும்.  

ஆட்டோமொபைல்:

உலக அளவில்   வாகனத்துறையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள்  வாகனத்துறையில் 6.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சற்றேக்குறைய முடங்கிக் கிடந்த இந்திய  வாகனத்தொழில் 2020-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மீட்சியை நோக்கி பயணப்பட தொடங்கிவிட்டது. இருசக்கரவாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களின் விற்பனையில் மாதத்திற்கு மாதம் விற்பனை அதிகரித்துள்ளதால்,  வாகனத்துறையின் வளர்ச்சி வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இது, புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. 

தகவல் தொடர்புகளால் இணைக்கப்பட்ட கார்கள்(கனெக்ட்டடு கார்ஸ்), தற்சார்பு வாகன இயக்கம்(அட்டானமஸ் டிரைவிங்), பகிர்வுப் பயண போக்குவரத்துகள் (ஷேர்டு மொபிலிட்டி), மின்மயமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற புதிய போக்குகளால் வாகனங்களின் உற்பத்தி வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. போக்குவரத்துத்துறையைப் புரட்டிப் போடக் கூடிய மாற்றங்கள்,  வாகனத்துறையின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகளை அமைத்துத் தந்துள்ளன. இது புதியவேலைவாய்ப்புகளுக்கு வாசல்களைத் திறந்து வைத்துள்ளன. தொழிலகப் பொறியாளர், உற்பத்தி மேலாளர், சேவை பராமரிப்பு பொறியாளர், விற்பனை/வர்த்தக வளர்ச்சி மேலாளர், கணக்காளர் மற்றும் வடிவமைப்பு பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்ள வாகன நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com