மின் வாகனங்கள்... 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்!

வாகனங்களில் இருந்து வெளியேறுகிற புகையால்காற்று மாசுபடுகிறது.மூச்சுவிடக் கூட நல்ல காற்று இல்லாமல் போகிறது.
மின் வாகனங்கள்... 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்!
Published on
Updated on
2 min read

வாகனங்களில் இருந்து வெளியேறுகிற புகையால்காற்று மாசுபடுகிறது.மூச்சுவிடக் கூட நல்ல காற்று இல்லாமல் போகிறது. இப்படிப்பட்டசூழ்நிலையை மாற்ற மின்சார வாகனங்கள் பயன்படும் என்பதால்,மின்சார வாகனங்களின் தயாரிப்புக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார கார்கள், பொருள்களை ஏற்றிச் செல்லும் மின்சார வாகனங்கள் என நமது சாலைகளிலும் ஓடத் தொடங்கியுள்ளன.

இந்த மின்சார வாகனங்களை பலர் வாங்குவதற்குத் தயங்குகின்றனர். அதற்குக் காரணம், மின்சார வாகனங்களை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டும்.அதற்கான போதுமான வசதி இப்போது இல்லை. அடுத்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மிக நீண்ட நேரமாகும். மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அப்படியே சார்ஜ் செய்தாலும் நீண்ட தொலைவு வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாது.இடையில் மின்சாரம் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது? இப்படிப்பட்ட சிக்கல்களினால் மின்சார வாகனங்களின் உற்பத்தி எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.

இந்தக் குறையைப் போக்கும் விதமாக மிக விரைவில் - அதாவது 15 நிமிடங்களில் - ஒரு துளி மின்சாரமும் இல்லாத ஒரு மின்சார வாகன பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இருக்கிறது,பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட "எக்ஸ்போனென்ட் எனர்ஜி' என்ற நிறுவனம்.

இந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவரும்அருண் விநாயக், சஞ்சய் பியாலால் இருவரும் ஏற்கெனவே வாகனம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.

பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் குறித்து அருண் விநாயக் கூறியதிலிருந்து...

""மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளது.ஆனால் ஒரு பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது.அந்த பேட்டரியை குறைந்தது 1000 தடவைகளும் அதிகபட்சமாக 2000 தடவைகளும் மட்டுமே சார்ஜ் செய்ய முடியும்.

அதற்குப் பிறகு அந்த பேட்டரியைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய பேட்டரியை மாட்ட வேண்டும். மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்காமல் இருப்பதற்கு பேட்டரியை சார்ஜ் செய்வதில் உள்ள இந்தக் குறைகளே காரணமாக இருக்கின்றன.

அடுத்து பேட்டரியை சார்ஜ் செய்யும்போது மிக விரைவில் பேட்டரி சேதமடைந்து போவதும் நிகழ்கிறது. இதனால் அடிக்கடி பேட்டரியை மாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 50 நிமிடங்கள் ஆகக் கூடிய பேட்டரிகளே இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதில்லை.பல்வேறு நிறுவனங்களிடம் உதிரி பாகங்களை வாங்கி, அவற்றை இணைத்து வாகனமாக உருவாக்கி விற்பனை செய்வதே பெரும் அளவில் நடைபெறுகிறது.அவர்கள் மின்சார வாகனத்துக்குத் தேவையான பேட்டரிகளையும் சொந்தமாகத் தயாரிப்பதில்லை.அவற்றை வெளியே வாங்கி
தங்களுடையவாகனங்களில் பொருத்துகிறார்கள். அப்படி வாங்கக் கூடியபேட்டரியின் தரம் சிறப்பாக இருந்தால்தான் வாகனம் சிறப்பாக இயங்கும்.

இப்போது உள்ள பேட்டரிகள் விரைவில் சார்ஜ் ஆகாமல் இருப்பதற்குக் காரணம், அவை லித்தியம் டைட்டனேட் ஆக்ûஸடு (எல்டிஓ) பேட்டரிகளாக இருப்பதுதான். இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்குப் பொருத்தமான சார்ஜர்கள் இல்லாவிட்டால்,பேட்டரி மெதுவாக சார்ஜ் ஆவதுடன், விரைவில் சேதமடைந்துவிடும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிற பல சார்ஜர்கள் இந்த எல்டிஓ பேட்டரிகளுக்குப் பொருத்தமானதாக இல்லை.

எனவே மின்சார வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றால் புதிய வகையான பேட்டரியும் சார்ஜரும் அவசியம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்.அந்த அடிப்படையில் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம்தான் "ஃபிளெக்சிபிள் எனர்ஜி ஸ்டேக்'தொழில்நுட்பம்.

இப்போதுள்ள எல்டிஓபேட்டரி சார்ஜ் ஆகும்போது அதன் செல்களின் நேர்மின்முனை, எதிர்மின்முனை ஆகியவற்றுக்கிடையே அயனிகள் பயணிக்கின்றன. மிக அதிக வேகத்துடன் சார்ஜ் செய்தால்,இந்த அயனிகளின் வேகம் அதிகரிக்கும்.

இதனால் பேட்டரி சேதம் அடைவதுடன் அதன் தரமும் குறைந்துவிடும். மேலும் சார்ஜரிலிருந்து பேட்டரிக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவும் வேகமும் குறைந்துவிடும்.

எனவே நாங்கள் இந்த எல்டிஓ பேட்டரியை முதலில் மாற்றினோம்.லித்தியம் அயன் பேட்டரியாக அதை மாற்றினோம்.இதனால் பேட்டரி சார்ஜ் ஆகும்போது ஏற்படும் மின்சாரத்தின் வேகம் குறையவில்லை.வேகம் குறையாததால், பேட்டரி சேதம் அடையவில்லை.

ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள சார்ஜர்கள் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது, பேட்டரிக்கு அவை அனுப்பும் மின்சாரத்தின் அளவு, "நிலையான அளவுகளாக' உள்ளன. இந்தத் திறன் உள்ள பேட்டரிக்கு இந்த அளவு மின்சாரத்தை அனுப்பி சார்ஜ் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். இதனால் பேட்டரியின் இயல்பான மின்சாரத்தை ஏற்கும் திறன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதற்கேற்ற அளவில் மின்சாரம் பேட்டரிக்குள் செலுத்தப்படுவதில்லை. அதிக அழுத்தத்துடன், அதிக அளவிலான மின்சாரத்தைப் பேட்டரிக்குள் செலுத்தும்போது, பேட்டரி சேதமடைகிறது. இந்தக் குறைபாட்டைப் போக்க நாங்கள் பேட்டரியின் மின்சாரத்தை ஏற்கும் திறனுக்கேற்ற அளவில் மின்சாரத்தை அதனுள் செலுத்தும் சார்ஜர்களைத் தயாரித்தோம்.

இந்த இரண்டுவிதமான மாற்றங்களினால்,மின்சார வாகனங்களின் பேட்டரி 15 நிமிடங்களுக்குள் 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடுகிறது. பேட்டரி சேதமடைவதில்லை.குறைந்தது 3000 தடவைகள் சார்ஜ் செய்ய முடியும் நிலை உருவாகி இருக்கிறது.

மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவர்கள் தயாரிக்கும் வாகனங்களில் எங்களுடையபேட்டரிகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை இப்போது செய்து வருகிறோம். அதுபோன்று ஏற்கெனவே உள்ள மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிறுவனங்களிடம் எங்களுடைய சார்ஜர்களைப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் செய்து வருகிறோம்.

மின்சார வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக பேட்டரி மற்றும் சார்ஜர்களை விற்பனை செய்வதற்குமான முயற்சிகளிலும் இப்போது இறங்கியிருக்கிறோம்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com