படைப்பாற்றல்... எங்கெங்கும்!

படைப்பாற்றல் என்றதும் நம் கண் முன் நிற்பது கலையும் இலக்கியமும் தான்.ஓவியர்கள், எழுத்தாளர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் போன்றோர் படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்துவார்கள்
படைப்பாற்றல்... எங்கெங்கும்!

படைப்பாற்றல் என்றதும் நம் கண் முன் நிற்பது கலையும் இலக்கியமும் தான்.ஓவியர்கள், எழுத்தாளர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் போன்றோர் படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பொறியியல், அறிவியல், கட்டடக்கலை, நகைச்சுவை, வணிகம், கணக்கு பதிவியல், தரவு திறனாய்வு, மென்பொருள் மேம்பாடு போன்ற துறைசார்ந்தவர்களிடம் படைப்பாற்றலை எவரும் எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட ஒருசிலரால் தான் படைப்பாற்றல் திறனுடன் விளங்க முடியும் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நம்மிடம் ஒளிந்து கொண்டு ஒளிரும் படைப்பாற்றல் திறனை நம்பாமல், அதனை உணர்ந்து, அத்திறனை மேம்படுத்த இயலாது.

படைப்புத் திறன்:

"உலகில் புதிதாக எதையாவது உருவாக்கும் கற்பனையே படைப்புத் திறன்' என்று கூறுகிறார்கள், "படைப்பாக்க தன்னம்பிக்கை' என்ற நூலை எழுதிய டாம் கெல்லி மற்றும் டேவிட் கெல்லி சகோதரர்கள். ""அது புதிய பொருளாக, நடைமுறையாக, திட்டமாக இருக்கலாம்'' என்கிறார்கள்.

படைப்பாற்றல் என்பது புதிய கருத்துகளை, கருத்துருக்களை, அல்லது பொருட்களை ஆக்க கூடிய சிந்தனையையும், அதைச் செயற்படுத்தக்கூடிய ஆற்றலையும் குறிப்பதாகும். படைப்பாற்றல் சிலருக்கு இயல்பாக அமைந்தாலும், பெரும்பான்மையானோர் இதைப் படிப்பறிவாலும் பட்டறிவாலும் பெறுகின்றனர்.

படைப்பாற்றல் என்பது கலை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரியதன்று. விஞ்ஞானிகள், வணிகத்துறை சார்ந்தவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலைநுட்பம் சார்ந்த படைப்பாற்றல் உள்ளவரைப் போலவே சிந்திக்கப் பழகலாம். படைப்பாக்க அணுகுமுறை இருந்தால் எல்லாத் தொழில்திறன்களும் மேம்படும் என்பதே உண்மை.

புதுமை படைத்தலில் தொழில்நுட்பம், வணிகம், மனிதம் ஆகிய மூன்று கூறுகள் பங்காற்றுகின்றன. தொழில்நுட்பரீதியாகச் சிந்திக்க பெரும்பாலான விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். புதியன படைக்கும் பெரும்பாலான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வணிக நோக்கில் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் ஆகட்டும், வணிகமாகட்டும், கலைத்துறையாகட்டும் எல்லாமே மனிதர்களை அடிப்படை
யாகக் கொண்டவையே. அவர்களின் அக, புறத் தேவைகளை நிறைவேற்றுபவையே. மனிதர்களின் தேவை, ரசனை ஆகியவற்றுக்கு ஏற்ற பொருள்களை, சேவைகளை அளிப்பதே எல்லாருடைய பணியும். இந்தப் பணியைப் படைப்பாற்றல் தன்மையுடன் செய்யும்போது, அந்தப் பணி அழகுடையதாகிவிடுகிறது. பிறரை ஈர்க்கும் திறன் உள்ளதாக மாறிவிடுகிறது. பள்ளிகளில் படைப்பாக்கத்திறனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். முக்கியத்துவம் தராவிட்டால், குழந்தைகளின் படைப்பாக்கத்திறன் முளைவிடாமலேயே போய்விடுகிறது. சொந்தமாகச் சிந்திக்கும் திறன் தனக்கு இல்லை என்று தவறான முடிவுக்கு குழந்தை வந்துவிடுகிறது.

புதியன உருவாக்கு:

புதிதானவற்றை உருவாக்க வேண்டும் என்று ஒருவர் நினைப்பது, அவரது படைப்பாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான முதல்படி. படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் அனுபவங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல வேண்டும்.

மனதில் பல யோசனைகள், வடிவமைப்புகள் தோன்றினால், அவற்றில் எதையாவது ஒன்றை, குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடியவற்றை தேர்ந்தெடுத்து அதை செய்து பார்க்க வேண்டும். புதிய யோசனை, செயல்படுத்தக்கூடியதா?

என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் புதிய யோசனைகளில் காலத்தையும், பணத்தையும் விரயமாக்கக் கூடாது. செயல்
படுத்தக் கூடிய அல்லது பிறரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய பொருள் அல்லது சேவையை செய்து பார்த்தால், அதில் புதிய அனுபவங்கள், சிந்தனைகள் பிறக்கலாம்.

சிறிய வெற்றி, முக்கியம்:

எந்தவொரு பெரிய வெற்றிக்கும் சின்னஞ்சிறு வெற்றிகள் முக்கியமானதாக அமையும். அது ஒருவரின் செயல்பாட்டை ஊக்குவித்து,

தன்னம்பிக்கையை மேம்படுத்தும். எந்தப் பணியை எடுத்துக் கொண்டாலும், அதை எதற்காகச் செய்கிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு ஈடுபடுங்கள். உங்கள் மேஜையை சுத்தமாக்குவது அல்லது கணினியில் உள்ள கோப்புகளைத் தொகுப்பது என எதுவாக இருந்தாலும், அவற்றை எதற்காகச் செய்கிறோம் என்கிற புரிதல் அல்லது நோக்கம் அவசியமாகும். கோப்புகளுக்கு பெயர்ச்சூட்டுவது அல்லது அவற்றை ஒரு கோப்புறையில் (ஃபோல்டர்) சேமிப்பது என எதுவாக இருந்தாலும், அது உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் செய்கை நிறுவனத்திற்கும் உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

தோல்வி பயம் கூடாது:

புதிய படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதற்கான மனத்தடையாக இருப்பது தோல்வி பயம் தான். தோல்விகள் இல்லாமல் புதிய முயற்சிகள் வெற்றி பெறாது. நமது வளர்ச்சிக்கு தோல்விகள் முட்டுக்கட்டையாக இருந்துவிடக்கூடாது என்பதை படைப்பாற்றல் திறன் கொண்டோர் உணர்ந்திருப்பார்கள். மாறாக, தவறுகளில் இருந்து கற்றுத்தேர்ந்து, அடுத்த கட்டத்தை நோக்கி மனத்தளர்வில்லாமல் பயணிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

மனதில் தோன்றும் புதிய யோசனைகள் அல்லது கற்பனைகளை, வடிவமைப்புகளாக உருவாக்கிப் பார்ப்பது, ஒருவரின் படைப்பாற்றல் திறனை விரிவுப்படுத்திக்கொண்டே இருக்கும். படைப்பாக்க முயற்சிகளை சோதனைகளாகக் கருத வேண்டும். அப்போதுதான் பிறரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி அந்த முயற்சி அமையாவிட்டால், புதிய முயற்சிகளில் இறங்கிவிட மனம் உற்சாகமாக கிளர்ந்தெழும்.

பிஞ்சு மனநிலை:

எந்தவொரு புதுமையான முயற்சியையும் புதியவர்களைப் போல அணுக வேண்டும். புதிய முயற்சிகளில் எழும் சிக்கல்களை புதிய கோணத்தில் பார்ப்பதோடு, மாற்றுச் சிந்தனையோடு கையாள வேண்டும். புதிய இடத்தில்
பயணிக்கும் பயணி, தான் பார்ப்பதை, கேட்பதை, நுகர்வதை கூர்ந்து கவனிப்பதை போல, நமது முயற்சிகளைக் கையாள வேண்டும். பிற துறைசார்ந்தவர்களின் கருத்துகளைக் கேட்டறியலாம். புதிய யோசனை எங்கிருந்து, எவரிடமிருந்து உருவெடுக்கும் என்பதை யாராலும் ஊகிக்க
முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com