இணைய வெளியினிலே...

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர, கோபம் இல்லை
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


நதிக்கு இரண்டு... ஏரிக்கு ஒரு பக்கம்
கடலுக்கு நாற்புறம்... கிணற்றுக்கு வட்டம் சதுரம்
குளத்துக்கு மூன்று கரைக்குள் தான்
இருக்கின்றன நீர் நிலைகள்.
மீறும்போது வெள்ளம்...
தங்கும்போது ஆழம்...
அலையில் வழிந்தோடும் புன்னகைகளுக்காய்
துள்ளும் மீன்களுக்கு,
கரையொன்றும் எதிரியில்லை.
சிறுவெயில் உறிஞ்சி, ஆவியாகும் நீரெல்லாம்
மீண்டும் தவழும் தாயென
நீர் நிலை மடியில்.

ஆசு சுப்பிரமணியன்

இருண்ட காலங்களில்
பாடுவது கூட இருக்குமா?
ஆமாம், அப்போது 
பாடுவது கூட  இருக்கும்...
இருண்ட காலங்களைப் பற்றி.

-பெர்டோல்ட் ப்ரெக்ட்
இந்திரன் ராஜேந்திரன்


பொறாமை சூயிங்கம் போன்றது.
சாரம் தீர்ந்த பின்பும் 
நாக்கில், உதடுகளில், காயம் உண்டாகும்படி
மென்று கொண்டே இருப்பது.

யவனிகா ஸ்ரீராம்


சுட்டுரையிலிருந்து...


முறிந்து வீழ்ந்து
மிச்சமான மரக்கிளையில்,
ஒரு பறவையின் நினைவில்
இன்னமும் பதற்றத்தோடு நடுங்குகின்றன...
இலைகள்.

பழநி பாரதி


எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு
நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர,
கோபம் இல்லை

செண்பகம்

காரணத்தை உருவாக்கி 
நம்மை வெறுக்கும் உறவுகளை விட,
காரணம் இல்லாமல்
நம்மை நேசிக்கும் உறவுகளை மட்டும் 
என்றும் மறந்து விடாதே.

பக்காவில்லன்  

வாழ்வின் அன்றாடங்கள் 
யுத்த காலத்தில் வீசப்படும் குண்டுகளாய்
என்னைப் பயமுறுத்தும் போது...
எனக்கான பதுங்கு குழிகளாய் 
நான் புத்தகங்களையே தேர்ந்தெடுக்கிறேன்.

ராமசாமி கண்ணன்

குழந்தை தன் பொம்மைகளை 
பொம்மை என உணரும் அத்தருணமே, 
மனிதன் துக்கத்தின் முதல் படியை 
மிதித்து விடுகிறான். 

~ பாதசாரி
டி.ஆர்.

வலைதளத்திலிருந்து...


ஒருவர் ஏன் எழுதவேண்டும்? எழுதியே தீர வேண்டும் என்ற வெறியோ, எழுதாமலிருக்க முடியாது என்ற நெருக்கடியோ எப்போது ஏற்படுகிறது? ஏன் ஒருவன் எழுத்தாளனாகிறான்? கவிஞனாகிறான்? கலைஞனாகிறான்? 

மலையாளமொழியின் மகாகவியான கி.சச்சிதானந்தனிடம் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காக எழுதுகிறேன் என்று பதில் சொன்னார். அவருடைய குடும்பத்தில் பரம்பரை நோயாக மனநோய் இருந்து வருவதால் அப்படிப்பட்ட மனநோய் தன்னைத் தாக்கி விடக்கூடாதேயென்று தான் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொன்னார்.  இன்னொரு எழுத்தாளர் தான் நேசித்த பெண்ணுக்காக எழுதத் துணிந்ததாகச் சொன்னார். மற்றொருவர் தன்னை நிரூபிப்பதற்காக எழுதுவதாகச் சொல்கிறார். சகிக்க முடியாத இந்த வாழ்க்கையிலிருந்து ஆசுவாசம் கொள்வதற்காக எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். 

ஒருவர் சமூகத்துக்காக, சமூகத்தை மாற்றுவதற்காக எழுதுவதாகச் சொல்லும் போது எனக்காக மட்டுமே எழுதுகிறேன் என்று ஒருவர் முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது. 

தாழ்வு மனப்பான்மையினால் எழுதுகிறேன் என்று சொல்லும் போது புறவுலக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எழுதுவதாக மற்றொருவர் சொல்கிறார். பணத்துக்காக, புகழுக்காக, காதலுக்காக, விருதுகளுக்காக, சில குறிப்பிட்ட காரியங்களுக்காக எழுதுவதாக, ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்ல முடியும். 

மனித மனதின் கோடிக்கணக்கான பின்னங்களை ஒருவரால் புரிந்து கொள்ள முடிந்தால் இந்தக் காரணங்களையும் ஒருவேளை புரிந்து கொள்ள முடியலாம்.

http://udhayasankarwriter.blogspot.com/
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com