நுழைவுத் தேர்வு... செயல்படுங்கள்... திட்டமிட்டு!

கல்வி, வேலை, தொழில் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் "போட்டி' உள்ளது.
நுழைவுத் தேர்வு... செயல்படுங்கள்... திட்டமிட்டு!


கல்வி, வேலை, தொழில் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் "போட்டி' உள்ளது. அதுவும் "கடும் போட்டி', "போட்டா போட்டி', "உன்னைப்பிடி என்னைப்பிடி' போட்டிகளாக உள்ளன. போட்டி போட்டு வெற்றியைக் கைப்பற்றுவது இப்போது எங்கெங்கும் உள்ள நிகழ்வாகிவிட்டது.

கல்வி நுழைவுத்தேர்வு:

அந்த உணர்வோடு தான் கல்வி சார்ந்த போட்டி நுழைவுத்தேர்வுகளையும் அணுக வேண்டும். அந்த அணுகுமுறையைக் கையாள்வதற்கு துல்லியமான திட்டமிடல் மிக மிக அவசியம். திட்டமிடாமல் எழுதப்படும் போட்டித்தேர்வு, போட்டியில்லாத தேர்வாகத்தான் அமையும்.

எந்தவொரு போட்டித்தேர்வாக இருந்தாலும், அதற்கான திட்டமிடல் 9 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அடிப்படை அணுகுமுறையாகும்.

பெரும்பாலான வெளிநாட்டு உயர்தர கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்கு வைத்திருக்கும் கட்-ஆப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும். எனவே, மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள், மறுதேர்வை எழுதவும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை அளிக்க தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய நடத்தப்படும் ஜி.ஆர்.இ. (தி கிராஜுவேட் ரிக்கார்ட் எக்ஸாமினேஷன் -பட்டதாரி பதிவுத்தேர்வு) மற்றும் பட்டதாரி மேலாண்மை சேர்க்கை தேர்வுக்கு(ஜி.எம்.ஏ.டி. - கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிசன் டெஸ்ட்) மாணவர்கள் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம்.

தேர்வு தயாரிப்புநிலை:

ஜி.எம்.ஏ.டி./ஜி.ஆர்.இ.தேர்வுகளுக்கு தயாராவதற்கு முன்பாக, மாணவர்கள் தங்களுக்கு தாங்களே வெள்ளோட்டத்தேர்வை (மாக் டெஸ்ட்) எழுதுவது நல்லது. வெள்ளோட்டத்தேர்வு எழுதுவதால் தேர்வை எழுதுவதற்கு தேவைப்படும் தயாரிப்பு குறித்த புரிதல் ஏற்படும். தேர்வுக்குரிய பாடப்பகுதியில் எந்த அளவுக்குப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும். மேலும் இந்த வெள்ளோட்டத் தேர்வின் மூலமாக மாணவர்கள் தங்களுடைய தயாரிப்பு நிலையைத் தெரிந்து கொள்ள முடியும். உடனே போட்டித் தேர்வு எழுதுவதா? அல்லது இன்னும் கூடுதல் பயிற்சி செய்து அடுத்த முறை போட்டித் தேர்வை எழுதுவதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தேர்வை எழுதும் முனைப்பு உள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் இந்த வெள்ளோட்டத் தேர்வினால் தெரியவரும்.

பயிலும் முறை:

படிப்பு நேரத்தை வகுத்துக்கொண்டு அதன்படி திட்டமிட்டு பயிலும் முறை மாணவர்களிடையே காணப்படுகிறது. வேலைக்குச் செல்பவர்கள் போட்டித் தேர்வு எழுத முயற்சி செய்யும்போது, அவர்களுடைய வேலைப்பளுவினால் மனச்சோர்வு ஏற்படும். என்றாலும் திட்டமிட்டு பயிலும் முறையை அவர்கள் தவறாமல் பின்பற்றினால் வெற்றி கிடைப்பது நிச்சயம். அன்றாட வாழ்க்கை பரபரப்பானதாக இருந்தாலும், அதையும் தாண்டி, மாணவர்கள் தங்கள் படிப்பு நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

சீரான கற்றல்:

போட்டி நுழைவுத்தேர்வுகளில் பல்வேறு பாடங்கள் தொடர்பான கேள்விகள் இடம் பெறும். ஒரு பாடத்தில் சிறந்து விளங்கும் ஒரு மாணவரால், மற்றொரு பாடப்பிரிவில் சிறந்திருக்க முடியாது. எளிதாகப் படிக்கக் கூடிய பாடங்கள் தொடர்பான வினாக்களுக்கு விரைந்து பதில் அளித்துவிடலாம். கடினமாக உணரும் பாடப் பிரிவுகள் தொடர்பான வினாக்களுக்கு தடுமாறும் நிலை ஏற்படும். எனவே எளிதானதோ, கடினமானதோ எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும், மாணவர்கள் தேவையான அளவுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்வதால், தேர்வு நேரத்தில் கடினமான பாடப்பிரிவுகளுக்கு பதில் அளிக்க அதிகம் நேரம் செலவிடுவதைக் குறைக்க முடியும்.

தனிப்பயிற்சி வகுப்பு:

போட்டி நுழைவுத்தேர்வுக்கு தனிப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமல்ல. தனிப்பயிற்சி வகுப்புகள் கற்றதை மீளாய்வு செய்வதற்கு உதவியாக இருக்கும். இதற்கு நேரத்தையும், பணத்தையும் செலவிட வேண்டும் என்றாலும், தனிப்பயிற்சி வகுப்புகளில் தினமும் கலந்துகொள்வது தேர்வுக்கான சவால்களை எதிர்கொள்வதற்கும், தேவையான தகவல்களைப் பெறவும் உதவும். மேலும் போட்டித் தேர்வில் புதிதாக வந்துள்ள மாற்றங்களையும் தெரிந்து கொள்ள இயலும்.

முன்கூட்டியே தேர்வு:

போட்டி நுழைவுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறும் முனைப்பில் இருப்பார்களே தவிர, சேர்க்கை பெற விரும்பும் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் தேதி, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதியில் கவனம் செலுத்தத் தவறிவிடுவார்கள்.

போட்டித்தேர்வு எழுதுவதை பரபரப்பாக்கிக் கொள்ளக் கூடாது. இத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் பல்கலைக்கழக சேர்க்கைக்கு உதவுமே தவிர, வேறு எங்கும் பயன்படாது. எனவே, சேர்க்கை பெறவிரும்பும் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது நல்லதாகும். கல்லூரி சேர்க்கை தேதிக்கு முன்பாகவே நுழைவுத் தேர்வுகளை தேர்ந்தெடுத்து எழுதுவது அவசியமாகும். போட்டித் தேர்வை முன்கூட்டியே எழுதுவது, பதற்றத்தை குறைப்பதோடு, கல்லூரியில் சேர்வதற்கு மட்டுமே கவனம் செலுத்த உதவும். ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால், சேர்க்கைக்கு முன்பாக மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ளவும் தனித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, அளவுக்கு அதிகமாக உழைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொள்ளாமல், இயல்பாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவது கட்டாயமாகும்.

நேர மேலாண்மை:

போட்டி நுழைவுத்தேர்வுகள், நேரமேலாண்மையை அடிப்படையாக கொண்டவையாகும். குறித்த நேரத்தில் சிக்கல்களை அணுகி
தீர்வுகாணும் மாணவரின் திறனைக் கண்டறியவே இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. விரைவான சிந்தனை, பகுப்பாய்வு மனப்பான்மை, தெளிவு போன்றவை இப்போட்டித்தேர்வுகளில் சோதிக்கப்படுகிறது. தேர்வு எழுதும்போது சரியான விடையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதுவது அவசியம். வினாத்தாளின் வெவ்வேறு பகுதிகளுக்கு விடையளிக்க ஒவ்வொரு பகுதிக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி விடையளிக்க மாணவர்கள் பயிற்சி பெறவேண்டும்.

இதுவரை பகிர்ந்து கொண்டவை யாவும் தேர்வுக்கான முதல்படியாகும். தேர்வுக்கு பிறகும் பல கூறுகளில் கல்வி நிறுவனங்களை திருப்திப்படுத்தி, சேர்க்கையை பெற நேரலாம். நேர்காணல்கள் உள்ளிட்ட பல படிநிலைகள் இருக்கலாம். அவற்றுக்கு தகுந்தபடி, பிறரை கவரும் வகையில் விண்ணப்பங்களை தயார்செய்வது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com