வேலை வாய்ப்புகளை வழங்கும் வேதிப் பொறியியல்!

இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பை வழங்கும் படிப்பாக வேதிப் பொறியியல் உள்ளது.
வேலை வாய்ப்புகளை வழங்கும் வேதிப் பொறியியல்!

இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பை வழங்கும் படிப்பாக வேதிப் பொறியியல் உள்ளது. வேதிப் பொறியியல் (கெமிக்கல் என்ஜினியரிங்) என்பது வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் அறிவியல் (நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல்), பயன்பாட்டு கணிதவியல் மற்றும் பொருளியல் ஆகிய துறைகளின் கோட்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற ஒரு பொறியியல் துறையாகும்.
வேதிப்பொருள்கள், மூலப்பொருள்கள், வாழும் செல்கள், நுண்ணுயிர்கள் மற்றும் ஆற்றல் ஆகியனவற்றை பயனுள்ள பொருள்களாகவும் உற்பத்திப் பொருட்களாகவும் மாற்றுவதற்குத் தேவையான செயல்முறைகளை வேதிப் பொறியாளர்கள் செய்கின்றனர்.
இந்த வேதியியல் பரிவில் பொறியியல் துறையில், உயிரிவேதிப் பொறியியல், உயிரிமூலக்கூறு பொறியியல், வேதித் தொழில்நுட்பவியல், மின் வேதியியல், மூலக்கூறு பொறியியல், எண்ணெய் சுத்திகரிப்பு, வெப்ப இயக்கவியல், தாள் பொறியியல், நெகிழிப் பொறியியல் என பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும், வேதிப் பொறியியல் சார்ந்து பாலிமர் பொறியியல், பிளாஸ்டிக் / ரப்பர் தொழில்நுட்பவியல் ,வேதியியல் மற்றும் மின் வேதியியல் பொறியியல்,பெட்ரோலியம்
பொறியியல், பெட்ரோகெமிக்கல் பொறியியல், செராமிக் பொறியியல், பயோகெமிக்கல் பொறியியல், மருந்தியல் தொழில்நுட்பவியல், உணவுத் தொழில்நுட்ப வேதிப்பொறியியல் போன்ற பிரிவுகளும் உள்ளன.
தொழில்நுட்பவியல் பிரிவில், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியியல், உயிரி வேதியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி கணிதம், பொருளாதாரம் ஆகியவற்றின் துணைகொண்டு மக்களுக்கு தேவையான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் பணி நடைபெறுகிறது. நானோ டெக்னாலஜி மற்றும் உயிர் பொறியியல் ஆகிய துறைகளுக்கு வேதிப்பொறியியல் துறையே அடித்தளமாக விளங்குகிறது.
பெட்ரோலிய சுத்திகரிப்பு, மருந்துத் தொழிற்சாலைகள், உயிர் எதிர்ப்பொருள் மற்றும் பாலிமர் தயாரிப்பு போன்ற மனித வாழ்க்கையின் முன்னேற்றத்துடன் தொடர்புடைய பல துறைகளில் வேதிப்பொறியியலின் பங்களிப்பு முக்கியமானது.
மனிதனுக்குத் தேவைப்படும் உணவு, ஆற்றல், மருந்து ஆகியவற்றை வழங்குவதில் இத்துறை பெரும்பங்கு வகிப்பதால், வேதிப் பொறியியல் படித்தவர்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், ஐஐடி - சென்னை மற்றும் ஐஐடி - கான்பூர், ஆந்திரா யுனிவர்சிட்டி, சண்டீகர் யுனிவர்சிட்டி, பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் வேதிப்பொறியியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் பி.இ மற்றும் பிடெக் பாடப்பிரிவுகள் உள்ளன.
ஆராய்ச்சி, பொருள் உற்பத்தி, சாயங்கள், தொழிற்கூட/ஆய்வுக்கூட மேலாண்மைத்துறை போன்ற ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறைகளிலும், ஆபத்தான கழிவுப் பொருள் கையாளுதல், தர உறுதி, டாக்சிகாலஜி ஆகிய தரக்கட்டுப்பாட்டுத் துறைகளிலும் இப்பொறியாளர்களுக்குப் பணிகள் காத்திருக்கின்றன.மேலும், உணவுப் பதனிடல், உரம்,சர்க்கரை, மருந்து, சிமென்ட், செயற்கை நூலிழை, கனிமங்கள், செராமிக்ஸ், பெட்ரோலியம் போன்ற தயாரிப்பு தொடர்பான துறைகளில் இத்துறை பொறியாளர்களின் தேவை இருக்கிறது.
பாலிமர் டெக்னாலஜி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பைத் தரும் கல்வியாக உள்ளது. பிளாஸ்டிக், ரப்பர், பெயிண்ட்ஸ், ஃபோம் போன்ற அனைத்தும் பாலிமர்களே. சுற்றுச்சூழலியல், மெட்டீரியல் சயின்ஸ், ஆர்கானிக் வேதியியலும் தொழில்நுட்பவியலும், பாலிமர் வேதியியல், மோல்டிங் எஞ்சினியரிங், பாலிமர் பொருட்கள் போன்ற பாடங்கள் இப்பிரிவில் கற்றுத் தரப்படுவதால் அத்துறைகளில் வேலை வாய்ப்பு பெற முடியும்.
வேதியியல் மற்றும் மின்வேதிப் பொறியியல் படிப்பவர்கள், உலோகங்களைத் தூய்மைப்படுத்துதல், பாட்டரிகள், எரிசெல்கள், உணர்பொறிகள், மின்படிவு, துரு முதலிய மின்வேதி வினைகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து படிப்பார்கள் என்பதால், ஏராளமான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிக்குச் செல்ல முடியும்.
அதுபோல், பெட்ரோலியம் பொறியியலும், பெட்ரோகெமிக்கல் பொறியியலும் படித்தவர்களுக்கு வளைகுடா நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அது போல், கெமிக்கல் தொழிற்சாலைகள், மது உற்பத்தி கூடங்கள், மத்திய, மாநில அரசுப் பணிகள், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள பணிகள் போன்றவற்றிற்கு இத்துறையில் பட்டம் பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.
எனவே, நமக்கு ஏற்கெனவே தெரிந்த 4 பொறியியல் பாடப்பிரிவுகளை மட்டும் தேர்வு செய்வதை விட்டுவிட்டு, இது போல் வேலை வாய்ப்பை தரும் பொறியியல் பிரிவை மாணவர்கள் தேர்வு செய்தால் வேலை வாய்ப்பு நம் வீட்டு வாசல் கதவை தட்டும் என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com