ஹிப்போகேம்பஸ்... நினைவாற்றல்... நல்ல தூக்கம்!

மனிதர்களின் இயல்பான, வழக்கமான செயல்பாடுகளுக்கு முக்கிய அடிப்படையாக இருப்பது நினைவாற்றல். குறிப்பிட்ட விஷயம் சரியாக நினைவில் இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தை மீண்டும் செய்வது எளிதாகும்.
ஹிப்போகேம்பஸ்... நினைவாற்றல்... நல்ல தூக்கம்!

மனிதர்களின் இயல்பான, வழக்கமான செயல்பாடுகளுக்கு முக்கிய அடிப்படையாக இருப்பது நினைவாற்றல். குறிப்பிட்ட விஷயம் சரியாக நினைவில் இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தைமீண்டும் செய்வது எளிதாகும். உதாரணத்துக்கு, கல்லூரி இருக்கும் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் முறை கல்லூரிக்குச் செல்லும்போது பிறரிடம் வழிகேட்டு சென்றிருப்போம். இரண்டாவது முறை நம் நினைவில் இருக்கும் வழியில் சென்று கல்லூரியை அடைந்திருப்போம். மூன்றாவது நாளில் இருந்து மற்றவர்களுக்கு கல்லூரிக்கான வழியை சொல்லும் அளவுக்கு அது நம் மனதில் பதிந்திருக்கும். ஒரு வேளை ஒவ்வொரு நாளும் கல்லூரி இருக்கும் இடத்தை
மறந்துவிட்டு, தினமும் அந்த வழியை மற்றவரிடம் கேட்டுத்தான் செல்ல
வேண்டும் என்ற நிலை இருந்தால் எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகேம்பஸ் உதவுகிறது. தற்காலிக நினைவாற்றலின் மையமாக ஹிப்போகேம்பஸ் பகுதி விளங்குகிறது.
ஹிப்போகேம்பஸ் பகுதியானது மூளையின் இரு பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது.
நமது காதுகளுக்கு சற்று மேலே ஹிப்போகேம்பஸ் அமைந்துள்ளது. கடல்குதிரை போன்ற வடிவில் இருப்பதால், அதற்கான கிரேக்கப் பெயரை அடிப்படையாகக் கொண்டு "ஹிப்போகேம்பஸ்' என்ற பெயர் சூட்டப்பட்டது. நினைவாற்றலை அதிகப்படுத்துவது, அதை நிலைப்படுத்துவது, நிரந்தர நினைவாற்றல் பகுதிக்கு அனுப்புவது ஆகிய செயல்பாடுகளில் ஹிப்போகேம்பஸ்முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே, ஹிப்போகேம்பஸ் பகுதியை முறையாகப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
மூளையின் இரு பகுதிகளிலும் ஹிப்போகேம்பஸ் உள்ளதால், எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பொருத்தும் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. இடதுபக்க ஹிப்போகேம்பஸ் பகுதி பாதிக்கப்பட்டால், மொழிசார்ந்த நினைவாற்றல் பாதிக்கப்படும் என்றும், வலதுபக்க பகுதிக்கு பாதிப்பு ஏற்பட்டால், காட்சி சார்ந்த நினைவாற்றல் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்களால் நாம் பார்க்கும் காட்சிகள், காதால் கேட்கும் ஒலிகள், மூக்கால் நுகரும் வாசனை மற்றும் துர்நாற்றம், நாவினால் உணரும் சுவை உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் தற்காலிக நினைவாற்றலாக ஹிப்போகேம்பஸ்
பகுதியில் பதிவு செய்யப்படுகின்றன.
அதன் காரணமாகவே ஒரு முறை பார்த்த காட்சிகளை மீண்டும் பார்க்கும்போது, அந்தக் காட்சிதான் இது என்று நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. கேட்கும் ஒலிகள், பாடல்கள் உள்ளிட்டவையும் ஹிப்போகேம்பஸ் பகுதியிலேயே முதலில் பதிவாகிறது. சுவை, வாசனை உள்ளிட்டவற்றையும் நம்மால் எளிதில் அறிய முடிகிறது.
ஹிப்போகேம்பஸ் பகுதியில் பதிவாகும் தற்காலிகத் தகவல்கள் அனைத்தும் நிரந்தர நினைவாற்றலுக்குக் கடத்தப்படுகின்றன. தற்காலிக நினைவாற்றலில் இருந்து நிரந்தர நினைவாற்றலுக்குத்தகவல்கள் செல்வது நாம் தூங்கும் போதுதான் பெரும்பாலும் நிகழ்கிறது. எனவேதான், தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை வெளிச்சமற்ற இடத்தில் தூங்க வேண்டும் என்று மருத்துவநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிரந்தர நினைவாற்றலில் தகவல்கள் பதிவது சுழற்சி முறையில் நடைபெறு
வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு சுழற்சிக்கும் சுமார் 2 மணி நேரங்கள் தேவைப்படுவதாகவும், 7 முதல் 8 மணி நேரங்களில் அனைத்து சுழற்சிகளும் முழுமையாக நிறைவடைவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தபட்சம் 7 மணி நேரம் உறங்காதவர்களுக்கு நினைவாற்றலில் பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் இரவில் கட்டாயமாக 7 மணி நேரம் உறங்க வேண்டும் எனஅவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விபத்து காரணமாகவோ நோய்காரணமாகவோ அப்பகுதி பாதிக்கப்பட்டால், நினைவாற்றல் பெருமளவில் பாதிக்கப்படும். குறிப்பிட்ட இடங்கள், தெருக்கள், திசைகள் உள்ளிட்டவற்றை நினைவில் கொள்வதில் பிரச்னைஏற்படும். பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் உள்ளிட்டவற்றை நினைவில் கொள்ள முடியாது. புதிய விஷயங்கள் எதையும் நினைவில் பதிவு செய்யமுடியாத சூழல் உருவாகும். ஹிப்போகேம்பஸ் பகுதியின் பாதிப்பு, நினைவாற்றல் விஷயத்தில் நீண்ட காலத்துக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
வயது முதிர்வும் மனஅழுத்தமும் ஹிப்போகேம்பஸ் பகுதியை வெகுவாக பாதிக்கின்றன. எனவே, மனஅழுத்தம் அதிகம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகளை மேற்கொள்வது ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்குவதைத்தடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளையின் ஹிப்போகேம்பஸ்பகுதியை முறையாகப் பராமரித்து நினைவாற்றல் இழப்பைத் தடுப்போம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com