தமிழக மாணவருக்கு... உலக அளவில்  விருது!

இங்கிலாந்தின் இளவரசி டயானா 1997 - இல் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.
தமிழக மாணவருக்கு... உலக அளவில்  விருது!

இங்கிலாந்தின் இளவரசி டயானா 1997-இல் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அதற்கு முன்பாக இங்கிலாந்தில் அவர் சமூக சேவைகள் செய்து கொண்டிருந்தார். அதனால் அவருடைய நினைவாக "டயானா விருது' என்ற பெயரில் சமூக சேவை செய்யும் இளம் வயதினருக்கு உலக அளவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 9 வயது முதல் 25 வயதுள்ள இளைஞர்கள் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2020-ஆம் ஆண்டுக்கான டயானா விருது, இந்தியாவைச் சேர்ந்த 20 இளம் வயதினருக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே ஒருவர் மட்டுமே அந்த விருதைப் பெற்றுள்ளார். அவர் சென்னையைச் சேர்ந்த கவின் வேந்தன் என்ற 18 வயது இளைஞர்.

கல்லூரியில் சேர காத்திருக்கும் கவின் வேந்தன் இந்த விருதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கவில்லையாம். கவின்வேந்தனுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் விருதுக்காக இவர் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். விருது பெறும் அளவிற்கு கவின் வேந்தன் செய்த சமூகநலப் பணிகள் எவை? என்று அவரிடம் கேட்டோம்:

""நான் எட்டாவது படிக்கும்போதே படிப்புடன் கூடவே மேடைப் பேச்சு, கவிதை எழுதுவது, விளையாடுவது இவற்றில் எல்லாம் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போது நான் படித்த பள்ளியில் பியர் எஜுகேஷன் என்ற ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அதாவது, படிப்புத் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு அவர்களுடன் படிக்கும் சக மாணவர்கள் 1 மாதம் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடங்களைச் சொல்லிக் கொடுப்பவனாக நான் அப்போது இருந்தேன். நாங்கள் சொல்லிக் கொடுத்த மாணவர்கள் எல்லாரும் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

ஆனால் அடுத்த ஆண்டு பள்ளிக்குச் செல்லும்போது அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வில் வெற்றி பெற்ற - ஆனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்த - பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தியிருந்தார்கள்.

நான் என்சிசியில் இருந்ததால், குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தில்லிக்குச் சென்றிருந்தேன். பல மாநில மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அவர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களின் நிலையைத் தெரிந்து கொண்டேன். இந்நிலையை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு "சொசைட்டி ஃபார் மோட்டிவேஷன் இன்னோவேட்டிவ் லீடர்ஷிப் அண்ட் எம்பவர்மென்ட் ஆஃப் யூத்' (எஸ்.எம்.ஐ.எல்.இ.வொய்) என்ற அமைப்பைத் தொடங்கினேன். இந்த அமைப்பில் என்னையும் சேர்த்து 40 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இளம் வயது மாணவர்களை அறிவாலும், திறமையாலும், மனதாலும் மேம்பட்டவர்களாக மாற்றுவதே எங்களுடைய பணி.

இப்போது, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுடைய திறமை மதிப்பிடப்படுகிறது. அவர்களுக்குள் புதைந்திருக்கும் பல திறமைகள் வெளியே தெரிவதில்லை. பள்ளிக்கூடம் தாண்டி மாணவர்களை யோசிக்க வைக்க வேண்டும்.

படிப்பு முடிந்தவுடன், மாணவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்புதான் அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகத்தில் வாழும்போது அவர்கள் சந்திக்க நேர்கிற பிரச்னைகளை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, அவற்றைத் தீர்க்க வேண்டும். தானும் முன்னேற வேண்டும். பிறரையும் முன்னேற்ற வேண்டும். இதற்கு பள்ளியில், கல்லூரியில் கற்றுத் தருகிற பாடங்கள் மட்டும் போதாது. அவர்களுக்கு வாழ்க்கைக் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். மாணவர்களுக்குத் தலைமைப் பண்பு, சமுதாயப் பொறுப்பு, சிறந்த மனநலம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்ற பயிற்சிப் பட்டறைகளை எங்களுடைய அமைப்பின் மூலமாக நடத்தி வருகிறோம். கரோனா தொற்றுக்குப் பிறகு ஸþம் மீட்டிங் மூலம் அவற்றை நடத்துகிறோம்.

"படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது' என்ற கருத்து பரவலாக உள்ளது. மாணவர்கள் தாம் வாழ்கிற சமுதாயத்துக்குத் தேவையான பணிகளில் படிக்கும் காலத்தில் இருந்தே ஈடுபடும்போதுதான், சமூகத்துடனான அவர்களுடைய தொடர்பு வலுப்பெறும். படித்து முடித்தவுடன் சமுதாயத்தில் இணைந்து அவர்களால் பணியாற்ற முடியும்.

மாணவர்கள் சமூகப் பணி செய்வதற்கு முன்பாக சமூகத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக, மாணவர்கள் கலந்துரையாடல் மன்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். ஏதாவது ஒரு சமூகப் பிரச்னையை எடுத்துக் கொண்டு அது தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது, அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டறிவதே இதன் நோக்கம். அரசியல், மதம் கலக்காதவகையில் பிரச்னைகளை அலசி ஆராய்வதும், தீர்வு கண்டுபிடிப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறோம். 25-க்கும் மேற்பட்ட கல்விநிலையங்களில் உள்ள மாணவர்களுடன் தொடர்பு கொண்டு இதை நடத்தி வருகிறோம்.

இதற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சமூகப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பை ஏற்படுத்தி, அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்யும் பணியினையும் செய்து வருகிறோம். இதனால் மாணவர்களின் தலைமைப் பண்பு அதிகரிக்கிறது.

மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் மாணவர்கள் தங்களுடைய மனதில் உள்ளவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாததே. வயதில் மூத்த பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில், சக வயதுள்ள மாணவர்களிடம் அவர்களால் பகிர்ந்து கொள்ளமுடியும்.

எங்களுடைய அமைப்பில் உள்ள மாணவர்களுக்கு மனநல ஆலோசகருக்கான பயிற்சிகளைத் தந்திருக்கிறோம். அவர்கள் மனஅழுத்தம் உள்ள பிற மாணவர்களிடம் பேசி, அவர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்கிறார்கள்.

நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும் நாங்கள் செய்துவரும் பணிகள் செய்யப்படுமானால், மதிப்பெண்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு அவை உதவியாக இருக்கும். இதற்காக "ஸ்மைலி கிளப்' களை எல்லாப் பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும்; அந்தந்தப் பள்ளிகளில் உள்ள மாணவர்களே அதை நடத்தும்படி செய்ய வேண்டும் என்பதே இப்போதைய எங்களுடைய எதிர்கால இலக்கு'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com