புதிய வேலைவாய்ப்பு... மெடிக்கல் கோடிங்!

நோய்கள், நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடுகளின் சேவையும் பெருகியுள்ளன.
புதிய வேலைவாய்ப்பு... மெடிக்கல் கோடிங்!

நோய்கள், நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடுகளின் சேவையும் பெருகியுள்ளன. மருத்துவத்துறை வேகமாக விரிவடைந்து வருவதால், அத்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள், மருத்துவசிகிச்சை பெறுகிறார்கள். இந்நோயாளிகள், மருத்துவக்காப்பீடுகளைப் பெறுகிறார்கள். 

மருத்துவக்காப்பீட்டின் அடிப்படையில் சிகிச்சை பெறும்போது, நோயாளியிடம் காணப்படும் அறிகுறிகள், கண்டறியப்படும் நோய்கள், அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிந்துரைக்கப்படும் மருந்துகள், தேவைப்படும் மேல் சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மருத்துவக்காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும்போது அவற்றையெல்லாம் தொகுப்பது மிகவும் கடினமாகும். அவற்றையெல்லாம் பரிசீலித்து, தகுந்த காப்பீட்டுத் தொகையை அளிப்பதும் சிக்கல் நிறைந்த பணியாகும். நோயாளிகள் தொடர்பான தரவுகள் லட்சக்கணக்கில் குவியும்போது, அவற்றைக் கையாள்வது எளிதல்ல. இந்த சிக்கலுக்குத் தீர்வாகக் கிடைத்துள்ளதே, மெடிக்கல் கோடிங் எனப்படும் புதிய தொழில்நுட்பம்சார்ந்த பணியாகும். 

நோயாளிகள் சார்ந்த அனைத்து விவரங்களையும் மெடிக்கல் கோடிங்குகளாக மாற்றிவிட்டால், லட்சக்கணக்கில் குவியும் தரவுகளைக் கையாள்வது எளிதாகும். நோயாளிகளின் விவரக் குறிப்புகளை அல்லது தரவுகளை, குறியீடுகளாக மாற்றுவதே மெடிக்கல் கோடிங்காகும்.

தேவை: உலக அளவில் மருத்துவ சேவைகளுக்கான தேவை நாளுக்குநாள் பெருகிக்கொண்டே உள்ளது. இந்த தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஏராளமாக குவியும் தரவுகளை கையாள்வதற்குப் போதிய ஊழியர்கள் இல்லாமல் தவிக்கும், சுகாதார பேணல் நிறுவனங்கள், தரவுகளைக் கையாள்வதற்கு மெடிக்கல் கோடிங்குகளைச் சார்ந்துள்ளன. 

குறைவான ஊழியர்களைக் கொண்டு, அதிகப்படியான வேலையை, குறைந்த நேரத்தில் முடிப்பதற்கு மெடிக்கல் கோடிங்குகள் உதவியாக இருக்கின்றன. 

மருத்துவக்காப்பீட்டு அடிப்படையில் நோயாளிகள் சிகிச்சையைப் பெறும்போது, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தகுந்த கட்டணத்தை காப்பீட்டுநிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு, மெடிக்கல் கோடிங்குகள் பெரும் உதவியாக இருக்கும். இது நிறுவனத்தின் வருவாயைத் துல்லியமாக பெருக்க உதவுவதோடு, பொருளாதாரத்திறனை மேம்படுத்தும். மருத்துவக் கட்டமைப்பில் வருவாய் மேலாண்மையைச் செய்வதற்கும் மெடிக்கல் கோடிங்குகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. 

இதன் காரணமாக, மெடிக்கல் கோடிங்குகள் அறிந்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. மெடிக்கல் கோடிங்குகள் பணி, பணியாளருக்கும், நிறுவனத்திற்கும் லாபகரமானதாக இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.

மருத்துவமனைகள், பெருநிறுவனங்களாக (கார்ப்பரேட்) மாறிவிட்டன. 

இந்நிறுவனங்கள், உலக அளவில் செயல்பட தொடங்கிவிட்டன. மருத்துவ மனைகளின் குழுமமாக பெரும் நிறுவனங்கள் உள்ளன. அதனால் தரவுகளை மெடிக்கல் கோடிங்குகளாக மாற்றுவதற்கு அந்தத் தொழிலை தெரிந்தவர்களின் தேவை விரிவடைந்து கொண்டே செல்கிறது. 

இந்த மெடிக்கல் கோடிங் வேலையைச் செய்பவர்கள், தொழிலையும், சொந்த வாழ்க்கையையும் எளிதாகக் கையாள முடியும் என்பது, இந்த வேலையின் கூடுதல் சிறப்பாகும். 

கல்வித் தகுதி: சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் படிப்பைப் பின்புலமாகக் கொண்டவர்களுக்கு மெடிக்கல் கோடிங் வேலையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மருத்துவம் சார்ந்த சொல்லாட்சி, கலைச்சொற்களை அறிந்திருப்பதும் அவசியமாகும். 

விவரங்கள், குறிப்பாக புள்ளிவிவரங்களைக் கூர்ந்து நோக்கும் தன்மை இயல்பாக அமையப் பெற்றிருப்பது கூடுதல் பலமாகும். வேலையில் கைதேர்ந்தவராக உருவாவதற்கு நல்ல தகவல்தொடர்புதிறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தரவுகளை எளிதில் நினைவில் வைத்துக் கொள்வதும், தேவைப்படும்போது அவற்றை நினைவுப்படுத்திக் கொள்வதும், அதுசார்ந்த கேள்விகளைக் கேட்பதற்கான விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பதும் வேலைத்திறனை மேம்படுத்தும். இத்துடன் அடிப்படை கணினி அறிவு மிகவும் அவசியமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com