கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 3: சகலம் டா வின்சி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 3: சகலம் டா வின்சி

ஒரு ஜோசியர், மந்திரம் தந்திரம் தெரிந்தவர், வாக்கு சாதுரி, வைத்தியர்  இதில் ஏதாவது ஒரு கலை தெரிந்தாலே பிழைத்துக் கொள்ளலாம்.

ஒரு ஜோசியர், மந்திரம் தந்திரம் தெரிந்தவர், வாக்கு சாதுரி, வைத்தியர் இதில் ஏதாவது ஒரு கலை தெரிந்தாலே பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே நபரிடம் இரண்டு அல்லது மூன்று கலைகள் காண்பதரிது என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் எழுதி வைத்தனர்.

"தம்மில் தம் மக்கள் பெரியர்' என்பதற்கேற்ப பெற்றோர்கள் தம் குழந்தைகளை சகலகலா வல்லவர்களாக்க விழைகிறார்கள். வரவேற்க வேண்டும். ஆனால் அதே சமயம் சுமை இல்லாமல் சுய உந்துதலோடு கலைகளை கற்க வாய்ப்பளிக்க வேண்டும். வரும் வாய்ப்பினை வாளேந்திய வீரனைப்போல் சுழற்றிப் பயின்றால்உன்னதம் அடையலாம்.

பல கலைகளைக் கற்று சகல கலா வல்லவன் என்று தன் பெயரை நிலை நாட்டிய மாமனிதர் ஐரோப்பியர் லியோனார்டோ டா வின்சி. ஐரோப்பிய சரித்திரத்தில் ஐந்திலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை நடுவாந்திர காலம் என்று கணக்கிடப்படுகிறது. அந்த காலத்தில் ரோமாபுரி அரசு கவிழ்ந்து ஐரோப்பிய நாடுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வன்முறை, கலகம், இனவெறி, பொருளாதாரச் சீரழிவு ஆகியவை சமுதாயத்தை நிலைகுலைய செய்தன. அந்த இருண்ட காலச் சுழற்சியிலிருந்து மீண்டு ஒரு மறுமலர்ச்சி சமுதாயத்தில் ஏற்பட்டது. புதிய கண்டுபிடிப்புகள், ஓவியம், சிற்பக்கலை ஆதரிக்கப்பட்டுகலைஞர்கள் பல அற்புதமான படைப்புகளைஅளித்தனர்.


மறுமலர்ச்சி காலத்தில் 1452- இல் இருந்து 1519 வரை வாழ்ந்தவர் டா வின்சி. பிரமிக்கத்தக்க வகையில்ஓவியம், பொறியியல், விஞ்ஞானம், கணிதம், சிற்பம், கட்டட கலை, புவியியல், தொழில்நுட்பம் , மருத்துவம், நகர வடிவமைப்பு... இன்னும் பல கலைகளைப் சொந்த முயற்சியில் பயின்று சாதனை படைத்தவர் லியோனார்டோ. அவரது வாழ்க்கைப் பயணம் இளைஞர்கள் எல்லாருக்கும் ஒரு படிப்பினையாகவும், "முயற்சி திருவினையாக்கும்' என்பற்கு உதாரணமாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

டா வின்சியின் பிறப்பே அவருக்கு எதிரியாக அமைந்திருக்கக்கூடும். பணக்காரருக்கும் ஒரு விவசாயியின் மகளுக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பினால் ஏற்பட்ட பிறப்பு அவருடையது. அந்தக் கால சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட உறவு. தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு தந்தையின் இல்லத்தில் வளர்ந்தார் டா வின்சி. முறை தவறிய பிறப்பு என்பதால் பள்ளிக்குச் செல்ல முடியாது. கல்வி கற்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆயினும் சிறுவன் டா வின்சிக்கு எல்லாவற்றையும் அறியவேண்டும் என்ற துடிப்பும் எல்லையில்லா ஆர்வமும் இருந்தது. தந்தையும் சிறுவனின் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தார். பள்ளிக்கூடம் செல்லாமலேயே தன்னார்வத்தால் பல கலைகளைக் கற்றறிந்தது மட்டுமல்ல, அவற்றில் உச்சத்தை அடைந்ததுதான் அவரின் தனி சிறப்பு.

டா வின்சி, தான் பார்த்தது, உணர்ந்தது எல்லாவற்றையும் குறிப்பெடுத்து எழுதுவது வழக்கம். இவ்வாறு ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்புகள் - டாவின்சிகுறியீடுகள் (டா வின்சி கோட்) இந்நாள் வரையில்நிபுணர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. 1506 -ஆம் வருடத்திலிருந்து 1510 ஆம் வருடம் வரை அவர் எழுதிய குறிப்புகளை, மைக்ரோசாப்ட் அதிபர்பில் கேட்ஸ் 1994 -ஆம் வருடம் சுமார் 200 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கினார்! டாவின்சி குறியீடுகள் அவரது கற்றல் முறையை விளக்குகிறது. அதுவே நம் எல்லோருக்கும் எந்த நிலையிலும் நம் அறிவை வளர்க்கமுடியும் என்ற வழிகாட்டுதல் அளிக்கும்.

கற்றலுக்கு அடிப்படை அறிய வேண்டும் என்றஆர்வம். அறிவுப்பசியே முதல் படி. அடுத்து படித்ததைப் பற்றி ஆழ்ந்த சிந்திப்பு. பிழைகளைத் திருத்தி அனுபவத்தின் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி. மூன்றாவதாக நாம் பார்ப்பது, உணர்வதைக் கூர்மையாக்குதல். மேலெழுந்தவாரியாக அணுகாமல் ஆழ்ந்து ஈடுபாட்டோடு எடுத்த முயற்சியில் லயிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை உணர்தல், விஞ்ஞான நோக்கோடு கலைகளை அணுகுதல், திடமான உடல் வலிமை பேணுதல், இறுதியாக முழுமையின் மாட்சி உணர்தல் என்று ஏழு வகையான யுக்திகளை டா வின்சி கடைப்பிடித்து சகல கலா வல்லமை பெற்றார்.

ஏன் நாமும் டா வின்சி ஆகலாம்! ஒவ்வொருவரிடமும் அந்த சக்தி உள்ளது. அது அமிழ்ந்து விடாமல் மெருகேற்றுவது நமது கையில் உள்ளது. ""சாதனையாளர்கள் நினைத்ததை சோர்வடையாமல் முழு வீச்சோடு உழைத்து முடிப்பார்கள். அதுவே நடக்கும் என்று உட்கார்ந்து விடுவதில்லை'' என்கிறார் டா வின்சி. இதைத்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா' என்றார்.

நமக்குத் தெரியாத விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. கற்றலில் மனச்சோர்வு என்பதே இல்லை. ஆர்வம் ஊற்றெடுக்க வேண்டும்.

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு' என்றார் வள்ளுவர். ஒருவிஷயத்தில் ஆர்வம் பெருக வேண்டும் என்றால் முனைப்புடன் கேள்வி கேட்க வேண்டும். அறிவுப்பூர்வமான கேள்விகள் மாற்றுச் சிந்தனையை வளமாக்கும். ஒருபிரச்னையை பல கோணங்களிலிருந்து ஆராயும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தனியார், அரசு பணிகளுக்கான நேர்காணலில் கவனிக்கப்படுகிறது.

உபயோகிக்கப்படாததால் துருப்பிடிக்கும் இரும்பு, தேங்குவதால் அசுத்தமாகும் தண்ணீர், அதேபோல் சோம்புவதால் பாழடையும் மூளை என்கிறார் டா வின்சி. கற்பதை அனுபவம் மூலம் சோதித்துப் பார்க்கும் பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும். ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் எழக்கூடிய ஆபத்துகளை எதிர்கொள்ள திட்டமிடுகையில் சோதனை ஓட்டம் செய்து அதில் ஏதாவது பழுது இருந்தால் திருத்திக் கொண்டு களத்தில் இறங்குவார்கள். இது எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும் .

டா வின்சி ஓவியம் ஒன்றை வரைந்து விட்டு தூரத்திலிருந்து திரும்பத் திரும்ப பார்த்து திருத்துவாராம். இதைத்தான் நிபுணர்கள் முழு வடிவ சிந்தனை என்
கிறார்கள் - "டிசைன் திங்கிங்'. "மோனா லிசா' ஓவியம் டாவின்சியின் பிரசித்திபெற்ற ஓவியம். அதை அவர் 16 ஆண்டுகள் வரைந்து அதிலும் திருப்தி அடையவில்லை என்பது உச்சத்தை அடைய அவர் எடுத்துக் கொண்ட இடைவிடா முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

விமானம், ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே டா வின்சி அதை வடிவமைத்தார். அதுமட்டுமல்ல, உயரத்திலிருந்து

தரையிறங்குவதற்கு முக்கோண பாரசூட்டை வடிவமைத்தார். ஏட்ரியான் நிக்கோலஸ் என்பவர் 2000 -ஆம் ஆண்டு டா வின்சி வடிவமைத்த அதே முக்கோண பாரசூட் மூலம் தரையிறங்கி டா வின்சியின் கண்டுபிடிப்பை நிரூபணம் செய்தார்.

பார்த்து உணர்வதில் மூன்று வகையுண்டு. உணர்வில்லாமல் பார்ப்பது ஒரு வகை; சிலர் காண்பித்தால் தான் பார்ப்பார்கள், பலர் பார்க்காமல் செல்வார்கள். ஆர்வத்துடன் பார்ப்பவர் ஒரு சிலரே. ""நமது ஐம்புலன்கள் ஆன்மாவின் தூதர்கள்'' என்கிறார் டா வின்சி. உணர்வில்லாப் பார்வை, புரியாமல் கேட்பது, உணர்ச்சியின்றி தொடுவது, ருசி அறியாமல் உண்பது, விழிப்புணர்வுன்றி நடமாடுவது, சிந்திக்காமல் பேசுவது இவையெல்லாம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் தடைக்கற்கள்.

நல்ல யோசனை உதயமாக வேண்டுமென்றால் பல யோசனைகளை நாம் கற்பனை செய்ய வேண்டும். அதிலிருந்து தான் வெற்றி தரும் வழிகாட்டுதல் கிடைக்கும்.

சிருஷ்டியில் மனித ரூபம் அபூர்வமானது.
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
என்பது திருமந்திரம்.

மனித உடலின் அழகைப் போற்றிய டா வின்சி ஆண், பெண் உருவங்களை பல வடிவங்களில் ஓவியமாகவும் சிற்பமாகவும் வடித்து ஆனந்தம் அடைந்தார். தனது உடலையும் பேணிக்காத்து நடக்கும்போதே புதுப்பொலிவுடன் மிடுக்காக நடப்பார் என்று டா வின்சி சரிதை எழுதிய "கத்தே' குறிப்பிட்டுள்ளார். அவர் வாழ்ந்த ஃப்ளோரன்ஸ் நகரில் டா வின்சி தெருவில் நிமிர்ந்து அழகுடன் நடப்பதைப் பார்ப்பதற்கு மக்கள் கூடுவார்களாம்! ஆனால் தற்கால இளைஞர்கள் கண்டதையெல்லாம் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல், கைபேசியில் கூனிக் குறுகி செல்வதைப் பார்த்தால் "இளமைப் பிராயத்தை இழந்தீரே'என்று மனம் வெதும்புகிறது.

அமெரிக்க ராணுவத் தலைமையகம் "பெண்டகன்', 17 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள மூன்றரை கோடி இளைஞர்களில் 70 சதவிகிதம் பேரை ராணுவப் பயிற்சிக்கு தகுதியற்றவர்கள் என்று தன் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், உடல் பருமன், முறையற்ற வாழ்க்கையால் பல உடல் உபாதைகள். மதுபழக்கம் ஒரு சாபக்கேடு. இளமையைச் சூறையாடும் அரக்கன்.

எளிமையே நுட்பத்தின் அளவுகோல். சிக்கலானவற்றை எளிமைப்படுத்துவதற்கு அதிகமாக உழைத்தால்தான் முடியும். இதை முழுமையாக உணர்ந்த டா வின்சி, கூர்மையாகச் சிந்தித்து ஏசுநாதர் தனது தூதர்களோடு உண்ணும் கடைசி இரவு உணவு ஓவியத்தை (லாஸ்ட் சப்பர்) தத்ரூபமாக வடிவமைத்தார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ""எளிமையாக ஒரு கருத்தைக் கூற முடியவில்லை என்றால் அதனை ஆழ்ந்து அறிந்து கொள்ளவில்லை'' என்கிறார்.

எளிமையே நுட்பத்தின் கடைக்கோடி வெளிப்பாடு என்ற அதே கருத்தின் அடிப்படையில் இளைஞர்கள் கையில் தவழும் ஐ போனை வடிவமைத்தார் ஆப்பிள் கணினி அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ். கையாள எளிமை; ஆனால் அதன் பின்னணியிலோ பிரமிக்கத்தக்க தொழில் நுட்பம்!

தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
அறிவு தேடலின் சாராம்சம் பாரதியார் கவிதையில்!
போன வார கேள்விக்குப் பதில்:

"பேலே' பெயர் எட்சன் அராண்டஸ் "டோ நாசிமெண்டோ . பிரேசில் நகரில் தெரு கால்பந்து "பெலடா' எனப்படும். அதில் சிறு வயதிலிருந்தே விளையாடியதால் "பேலே' என்று பெயர் வந்தது.

இந்த வார கேள்வி:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் "நாசா' செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட விண்வெளிக்கலத்தின் பெயர் என்ன ?
(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர் : மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com