'சைக்' சிறுகோளின் சொத்து மதிப்பு!

ஒரு சிறுகோளின் மதிப்பு 10 ஆயிரம் குவாட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
'சைக்' சிறுகோளின் சொத்து மதிப்பு!


ஒரு சிறுகோளின் மதிப்பு 10 ஆயிரம் குவாட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? (ஒரு குவாட்ரில்லியன் என்பது ஆயிரம் டிரில்லியன், ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி). இந்தத் தொகையை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். இரும்பு, தங்கம், நிக்கல் போன்ற 97 சதவீதம் அடர்த்தியான உலோகத்தை அந்தச் சிறுகோள் கொண்டிருக்கலாம் என்பதால் அவ்வாறு மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய ஆய்வு ஒன்றில் அந்த அளவு மதிப்புமிக்க உலோகங்கள் அதில் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

"16 சைக்' என்ற அந்தச் சிறுகோள் 1852-ஆம் ஆண்டு இத்தாலிய வானியலாளர் ஒருவரால் கண்டறியப்பட்டது. அளவில் பெரிய அந்தச் சிறுகோளில் மதிப்புமிகு உலோகங்கள் இருப்பதாகக் கருதப்பட்டு வந்தது. அந்தக் கணிப்பை தவறு என கூறுகிறது புதிய ஆய்வு. 

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வு முடிவுகள் "தி பிளானட்டரி சயின்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வின்படி, அச்சிறுகோளானது "பென்னு' போன்ற மிகச் சிறிய சிறுகோள் போன்ற குப்பைகளின் குவியலாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அச்சிறுகோள் 82.5 சதவீதம்  உலோகம், 7 சதவீதம் குறைந்த -இரும்பு பைராக்ஸின், 10.5 சதவீதம் கார்பனேசியஸ் கான்டிரைட் ஆகியவற்றைக் கொண்ட நுண்ணிய இடிபாடுகளின் குவியலாக இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சிறுகோள் உலோகங்களைக் கொண்டிருப்பதாக தெரியவந்தாலும் அடர்த்தி குறைந்த மதிப்பீடுகளை தரவுகள் காண்பிக்கின்றன. இது கார்பனேசியஸ் கான்டிரைட் தனிமங்களைக் கொண்ட பிற சிறுகோள்களுடன் "சைக்' சிறுகோள் மோதியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

சூரியனைச் சுற்றிவரும் இந்தச் இந்தச் சிறுகோளை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அடுத்த ஆண்டு ஆகஸ்டில் ஓர் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவுள்ளது. அந்த விண்கலம் 2026-ஆம் ஆண்டு முற்பகுதியில் "சைக்' சிறுகோளை அடையும். அந்த விண்கலத்தின் ஆய்வுக்குப் பின்னரே "சைக்' சிறுகோளின் "சொத்து மதிப்பு' பற்றி கூடுதல் தகவல்கள் நமக்கு தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com