சளைக்காத மனம்... விடாமுயற்சி... வெற்றி!

காலையில் எழுந்து பல்துலக்குவது முதல், இரவில் படுப்பதுவரை தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மனித வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது.  
சளைக்காத மனம்... விடாமுயற்சி... வெற்றி!

காலையில் எழுந்து பல்துலக்குவது முதல், இரவில் படுப்பதுவரை தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மனித வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது.

தற்போது சர்வதேச அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படிக் கையாள்வது என்பது தலையான பிரச்னையாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வேளாண்நிலங்கள், மிருகங்கள் பாதிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அது கழிவுப் பொருளாக மாறும் போது எளிதில் அழிக்க முடிவதில்லை. இந்நிலையில் சர்வதேச அளவில் மக்கி உரமாகும் தன்மையுடைய பிளாஸ்டிக்கிற்கான மூலப்பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது மக்கி உரமாகும் பிளாஸ்டிக்கிற்கான மூலப்பொருள்கள் வந்து விட்டன. எனினும் தற்போது நடைமுறையில் உள்ள பிளாஸ்டிக்கிற்கான மூலப்பொருள்கள் மிகவும் மலிவு விலையில் உள்ளதால், புதிய கண்டுபிடிப்பு மூலப்பொருளைக் கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்க இந்திய அளவில் ஆர்வம் இல்லை எனக் கூறலாம். எனினும் வரும் காலங்களின் அரசாங்கத்தின் கடுமையான உத்தரவுகளால், மக்கி உரமாகும் பிளாஸ்டிக் மூலப்பொருள் பெருமளவில் பயன்பாட்டிற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்திலேயே முதல் முதலாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த டி.அழகுமாணிக்கம் , டி.மகேந்திரன் ஆகிய சகோதரர்கள் மக்கி உரமாகும் தன்மையுடைய பிளாஸ்டிக் மூலப்பொருளைப் பயன்படுத்தி காகிதக் குவளைகளைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார்கள். இதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது:

2002-ஆம் ஆண்டு எங்களது தந்தை பி.தாமோதரன் , கேரிபேக், மாவு உள்ளிட்டவை பேக் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் 2018 ஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பை, காகிதக் குவளைஉள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால்பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால் வியாபாரம் நடைபெறவில்லை.

தொடர்ந்து தொழிலை நடத்த வேண்டிய தேவை உள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பதற்கான மக்கும் தன்மையுள்ள மூலப்பொருள்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

பல்வேறு இணையதளங்களிலும், இது தொடர்பாகத் தெரிந்தவர்களிடமும் கேட்டு இறுதியில் அவை கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடித்தோம்.

ஜெர்மன், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மூலப்பொருள்களைத் தயாரிப்பவர்களிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசினோம். அவர்கள் அனுப்பி வைத்த மாதிரிகளைச் சோதனை செய்து பார்த்தோம். அதில் ஜெர்மன் தொழில் நுட்பம்தான் சிறந்தது எனக் கண்டறிந்தோம்.

பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்க, ஜெர்மனியிலிருந்து கிடைக்கும் மக்காச் சோளத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருள் சிறந்ததாக இருந்தது. இந்த மூலப்பொருள் மூலம் மக்கி உரமாகும் பிளாஸ்டிக் பை போன்றவற்றைத் தயாரிக்கலாம். எனவே இந்த மூலப்பொருளை ஜெர்மனியிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.

ஆனால் இறக்குமதி செய்ய மத்திய அரசின் மாசுகட்டுப்பாட்டுத்துறை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஆகியவற்றில் தடை இல்லாச் சான்று வாங்க வேண்டும்.இது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

சென்னையில் உள்ள மத்திய அரசின்இன்ஸ்டியூட் ஆப் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பெட்ரோல் மற்றும் ரசயானப்பொருள்கள் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் நிறுவனம் ஆகிய இருநிறுவனங்களும் , நாங்கள் இறக்குமதி செய்ய உள்ள மூலப்பொருளை வாங்கி, ஆய்வு செய்து, இது மக்கும் உரமாகும் தன்மை உடைய பொருள் என சான்று பெற்றோம்.

தொடந்து மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலும் மூலப்பொருள்களை விற்பனை செய்ய ஒப்புதல் பெற்றோம். இதற்கு பல நாள்கள் நாங்கள் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியதிருந்தது.தொடந்து 2021 ஜனவரி 11 - ஆம் தேதி விற்பனைக்கு அனுமதி கடிதம் பெற்றோம்.

பின்னர் ஜெர்மன் நாட்டினர் புனேயில் அமைத்துள்ள விற்பனை மையம் மூலம் மூலப்பொருள்களை வாங்கினோம். விருதுநகர் மாவட்டத்தில் நெகிழி பை தயாரிப்பாளர்களிடம் மக்கி உரமாகும் தன்மையுள்ள மூலப்பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினோம்.

ஆனால், தமிழகத்தில் காகிதக் குவளை தயாரிப்பாளர்கள் யாரும் எங்களிடம் மூலப்பொருளை வாங்கவில்லை. எனவே நாமே ஏன் மக்கும் தன்மையுள்ள காகிதக் குவளைகளைத் தயாரிக்கக் கூடாது என்று நினைத்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் தயாரிக்கத் தொடங்கினோம். இந்த காகிதக் குவளைக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிங்களுக்கு அதிகமாக காகித குவளைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கும் காகிதக் குவளை விநியோகம் செய்து வருகிறோம்.

இதுபோன்ற சவாலான தொழில்களைச் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.புதிய தொழில் நுட்பத்தில், புதிய பொருள்களை கொடுத்தால் எளிதில் சந்தைப்படுத்தலாம். எனவே இளைஞர்கள் எந்தத் தொழிலில் தொடங்கினாலும், செய்தாலும், விடாமுயற்சியுடன் சளைக்காமல் உழைத்து வெற்றி பெற வேண்டும்'' என அவர்கள் கூறினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com