கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 43: வாழ்வே மாயம்!

"இளமையே உன்னை ஆராதிக்கிறேன்' என்றார் ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர்.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 43: வாழ்வே மாயம்!

"இளமையே உன்னை ஆராதிக்கிறேன்' என்றார் ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர்.

    குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்கு
    கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
    பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
    பின்னுமந் நிலைபெற வேண்டீரோ?' 

என்று பாரதியார் கற்பனை நகரின் வளத்தை பாடுகையில் இளமைப் பருவம் நிலைக்க வேண்டுகிறார்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்; 

இளைஞர்கள்தாம் நாட்டின் உழைப்பாளிகள்; நாட்டின் எதிர்காலம் என்பதெல்லாம் பேச்சளவிலும், மேலெழுந்த வாரியான சில திட்டங்களுடனும் நின்று விடுகிறது. 

இளைஞர்கள்  மேம்பாட்டிற்காக  அரசும் சமுதாயமும் என்ன செய்கிறது? என்ன செய்ய வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பு அவ்வப்போது பட்டியலிட்டு வலியுறுத்தி வருகிறது.

இளைஞர்களுக்கு என்ன தேவை, எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். அந்தந்த சமூகத்தை சார்ந்த சில பாதிப்புக்களால் தேவைகள் மாறுபடும். 

சிஎஸ்ஐஎஸ் என்ற சர்வதேச தனியார் தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சமுதாயம் சார்ந்த பிரச்னைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அந்த அமைப்பினர் 21 -ஆம் நூற்றாண்டின் "மில்லினியல்ஸ்' என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களின் ஆசாபாசங்கள் எதிர்ப்பார்ப்புகளைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டார்கள். பல  நாடுகளின் இளைஞர்கள் தங்கள் கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள்.

ஆய்வு செய்து இளைஞர்கள் கூறிய கருத்துகளின் சாராம்சமாக நான்கு நிலைப்பாடுகள் முன்னிலை படுத்தப்பட்டன.

முதலாவதாக வேலையில் அமர்வது. நல்ல வேலை என்பது கனவாகவே உள்ளது. படிப்பு முடிந்து உடனே வேலை கிடைக்கும் என்பது எட்டாக் கனியாக இருக்கிறது. ஆதலால் சுயமாகத் தொழில்  தொடங்கி மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கக்கூடிய நிலையில் தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு அவர்களுக்கு தேவை: முதலீடு, வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் வியாபாரதளத்திற்கு அறிமுகம். மேலும் வணிகம் செய்வதில் குறுக்கீடோ, தடங்கலோ இருக்கக் கூடாது. "ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்' என்பது முழுமையாக நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கை. இரண்டாவதாக கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். 

இந்த காலகட்டத்தில் இளைஞர்களை முழுமையாகத் தயார் செய்யும் கல்வித் திட்டம் அமைக்க வேண்டும். 

சமச்சீர் கல்வி எல்லா வகையிலும் தரத்தை குலைத்து மாணவர்களை திண்டாட வைத்தது. பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் தாய்மொழியிலேயே ஒரு கடிதம் புனைவதற்கு அருகதையற்றவராகத்  திண்டாடுகிறார்கள்.  மாணாக்கர்களால் எந்தப் போட்டி தேர்விலும் வெற்றி பெற முடியவில்லை. புரிதலில் செழுமை, வேலை செய்வதற்கு ஏற்ற திறமைகள். வாழ்வியலுக்கு உகந்த திறன்கள் ஆகியவற்றை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மூன்றாவதாக இளைஞர்கள் முதன்மைப்படுத்துவது ஊழலற்ற நிர்வாகம்.  ஊழல் நிர்வாகத்தால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. ஊழல் அரசுகளால் சுற்றுப்புறச்சூழல் கெடுகிறது, மக்களுக்கு சுகாதாரம், மருத்துவ வசதி சென்றடைவதில்லை. மோசமான கட்டமைப்புகளால் சாலைப் பாதுகாப்பு பாழாகிறது. 

அரசாளுமையிலும் தனியார்துறையிலும்  வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல் முறைகள் வேண்டும். தொழில் நுட்பத்தில் தேர்ந்த இளைஞர்களால் இது உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தெரிவிக்கிறார்கள்.

பொத்தம் பொதுவாக வன்முறைக்கும் சமுதாயத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு இளைய தலைமுறையினர் குற்றம் சாட்டப் படுகிறார்கள். ஆனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே. இரண்டு வருடங்களாக கரோனா தாக்கத்தில் கல்விக்கூடங்களுக்குச் செல்ல முடியாது, விளையாட வசதியும் இல்லாமல் அதிகம் கஷ்டப்பட்டவர்கள் இளைஞர்கள். பயங்கரவாத வன்முறைச் சுழலில் ஈர்க்கப்படும் இளைஞர்கள் குறைவுதான். எல்லாரும் அமைதியான வாழ்க்கையைத் தான் விரும்புகிறார்கள். உலக நடப்புகளைப் பார்த்தால் தங்களது எதிர்காலம் சூனியமாகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் என்பது நான்காவது நிலைப்பாடு. இது சர்வதேச அளவிலான கள ஆய்வு. "யூஎஸ்எய்ட்' என்ற அமெரிக்க சர்வதேச வளர்ச்சி அமைப்பின் ஆதரவில் 2019 - ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் "யூத் போல்' - "இளைமையே பேசு' என்ற தலைப்பில் இளைஞர்களிடம் அவர்களின் கருத்துகள் கண்டறியப்பட்டன.

இந்தியாவில் 35 கோடி மக்கள் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள உழைக்கும் வர்க்கம் உள்ளது.  நாட்டை வளமையாக்குவதற்கு வேண்டிய அமானுஷ்ய சக்தி அவர்களிடம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. சுய கௌரவம், தன்னம்பிக்கை,தனி மனித வளர்ச்சிக்கும்  முன்னேற்றத்திற்கு அத்தியாவசியம். 

இளம் வயது ஆண், பெண்களுக்கு  கல்விக்கூடங்கள், வேலை செய்யும் இடங்கள், சமுதாயத்தில், தம் வீடுகளில் சந்திக்கக் கூடிய பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காண ஊக்கம் அளிக்க வேண்டும். இதற்கு எளிதாக தகவல் பெற வசதி, பாலியல் வேறுபாடுகள் பற்றிய சரியான புரிதல், எல்லாரும் சமம் என்ற எண்ணம் வளர்த்தல், சமத்துவம், கண்ணியம் காப்பாற்ற நேர்மையான நட
வடிக்கை, இவற்றை சமுதாயத்தோடு இணைந்து அரசின் திட்டங்கள் செயல்பட வேண்டும்.

எல்லாருக்கும் தரமான கல்வி , திருமணம் முடிப்பதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடல், சுயமாக பொருள் ஈட்டும் நிலையை இளையவர்கள் அடைய பெரியவர்கள் வழிகாட்டுதல் ஆகியவை இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு வெற்றிப் படிகள். 

அரசின் கொள்கைகள் இளைய சமுதாயத்திற்கு பாதுகாப்பான, சுகாதாரம் நிறைந்த , சந்தோஷமான அர்த்தமுள்ள  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சிறந்த வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.

2019 - இல் நடந்த ஆய்வு 27 மாநிலங்களிலும் நான்கு யூனியன் பிரதேசங்களிலும் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் இளையவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 10 வயதிலிருந்து 24 வயது இளைஞர்களுக்கு உடல்நலம், பள்ளிகளில் கிடைக்க வேண்டிய சேவைகள் ஆகிய இரண்டையும் தான் முக்கியமாகக் கருதுகிறார்கள். 

உடல் நலத்தைப் பாதிப்பது, போதைப் பொருட்கள்,  புகையிலையைப் பயன்படுத்துவது மற்றும் மது அருந்துதல் ஆகியவையே.  இதை இளைஞர்கள் உணர்கிறார்கள். போதைப் பொருட்கள் கல்விக்கூடங்கள் அருகில் நடமாடுவதை தீவிரமாக நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக கூறுகிறார்கள். மேலும் பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும், கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தும் மாணவர்களிடம் மேலோங்கியுள்ளது.

பெண்களின் மாதவிலக்கு பற்றிய தகவல்கள், மாதவிலக்கில் வரும் பிரச்னைகள், வலிகளைச் சமாளிப்பது குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்பவை இளம் பெண்களின் கோரிக்கைகள்.

அவசர உலகில் மன அழுத்தம், உடல் நல பாதிப்பு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 

ரகசியமான, மலிவான மன ஆரோக்கியத்துக்கான சேவைகள் இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். கம்ப்யூட்டர் சேவைகள், நல்ல நூலகங்கள், உணவுப் பாதுகாப்பு, விளையாட திறந்தவெளி மைதானங்கள், ஸ்திரமான சாலைகள், சீரான மின்சாரம், போக்குவது வசதிகள், சுகாதாரமான பொது கழிப்பறைகள், சுத்தமான காற்று, குடி நீர், சுற்றுப்புற சூழல் இவையெல்லாம் வேண்டும் என்று இறைஞ்சுகிறார்கள் இளைய தலைமுறையினர்.

மொத்ததில் உடல் நலப் பாதுகாப்பு , சுகமான சூழல் மற்றும் சேவைகள் பெற வசதி, அதற்கு தேவையான தகவல்களைத் தான் இளைஞர்கள் கேட்கிறார்கள். 
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் நமது வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும்; கேள்வி கேட்க வேண்டும். நமது கட்டமைப்புகள் ஏன் தரமின்றி இருக்கின்றன, கல்வி பாடத்திட்டத்தை பற்றி சர்ச்சை ஏன் ஓய்ந்தபாடில்லை, ஏன் இன்னும் கழிப்பறைகள் இன்றி மக்கள் அவதிப்படுகிறார்கள், ஏன் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை, ஏன் இன்னும் சுகாதாரமான குடி நீர் உறுதி செய்யப்படவில்லை, ஏன் இன்னும் மின் அழுத்த வேறுபாடின்றி சீரான மின்சாரம் வழங்க முடியவில்லை? என்பன போன்றவை முக்கியமான கேள்விகள்.

வருடா வருடம் சம்பிரதாயமாக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இலவசங்களுக்கு தான் முக்கியத்துவம்.   சில சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. 

இளைஞர்களை மையமாக வைத்து ஓர் அறிவிப்பும் இருக்காது.   பட்ஜெட் விவாத முடிவில் இளைஞர்களுக்கான சேவைகள் விவாதமின்றி முடிக்கப்படும்!
கல்விக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படுவதாக விவரங்கள் கொடுக்கப்படும். ஆனால் அவை நிர்வாக செலவிற்குத்தான் சரியாக இருக்கும்! அதுவும் நகரங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மிகவும் குறைவான மாணவர்கள். சென்னை நகரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மொத்தமே நூறு மாணவர்கள் தான்! அதற்கு காரணம் அரசுப் பள்ளிகளின்  கல்வி தரத்தில் பெற்றோர்களுக்கு நம்பிக்கையில்லை. 

தில்லியில் அரசுப் பள்ளிகளை தனியார் உதவியோடு தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கையை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். 

இங்கிலாந்து நாட்டின் ஆளுகையில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் கூட்டமைப்பு "காமன்வெல்த்'. இந்த கூட்டமைப்பின் செயலகம் உலக  நாடுகளில் இளைஞர்களின் வளர்ச்சிக் குறியீட்டை கணிக்கிறது. 

181 நாடுகளில் வாழும் 15 வயதிலிருந்து  29 வயதுள்ள 180 கோடி இளைய சமுதாயத்தின் வாழும் நிலை,  கல்வி, அரசியல், பொதுச் சேவைகளில் ஈடுபடுதல், வளர்ச்சி, உடல் நலம், நல்வாழ்வு,  வேலை வாய்ப்பு  ஆகிய   ஆறு அளவுகோல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியா 122 - ஆவது இடத்தில் உள்ளது. 15.64% எல்லா குறியீடுகளிலும் முந்தைய நிலையை விட உயர்ந்திருக்கிறது என்பது தான் ஒரு ஆறுதல்!

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வின் 2020- இல் வெளியிட்ட தகவல்படி இளைஞர்கள் வாழ உகந்த இடம் ஜெர்மனி. அடுத்து நியூசிலாந்த், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன்.  சிங்கப்பூர் வேலைவாய்ப்பு, சுத்தம் சுகாதாரம், பாதுகாப்பு இவற்றில் முதலிடம். 

காமன்வெல்த் நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் உயர்ந்துள்ளன. இன்னும் இருபது ஆண்டுகளில் ஆப்பிரிக்க இளைஞர்கள்  உலகில் 40% சதவிகிதம் இருப்பார்கள்.

இளைஞர்கள்  வேலை பார்ப்பதற்கு ஆசியா கண்டத்தில் சிறந்த இடம் தாய்லாந்து, ஆப்பிரிக்காவில் மொராக்கோ. தொழில் செய்ய முனையும் இளைஞர்களை வரவேற்கும் நாடு நியூசிலாந்து. 

ஈஸ் ஆப் டூயிங்க் பிசினஸ் குறியீட்டில் நியூசிலாந்து நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் பணியாளர்களை தேர்வு செய்கையில் நேர்மைக்கும் உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என்பார்கள். "நேர்மையைத் தேர்வு செய் திறமைகளுக்கு பயிற்சி கொடு' (செலக்ட் த ஹானஸ்ட், ட்ரெய்ன்  த ஸ்கில்) என்பது அவரது நிறுவனத்தின் தாரக மந்திரம். நல்லியல்புகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

வாழ்வே மாயம்; அதில் இளமை ஓர் ஒளிக்கீற்று போல் தோன்றி மறைவது. இளமைப் பருவத்தில் எல்லாம் கற்றுணர வேண்டும். 

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: இந்திய ரிசர்வ் பேங்க் ஏப்ரல் 1 , 1935 - இல் மும்பையில் நிறுவப்பட்டது.

இந்த வாரக் கேள்வி: காமன்வெல்த் எந்த வருடம் எங்கு அமைக்கப்படது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com