அணுசக்தி பழக்கங்கள்!

வெற்றி என்பது நமது அன்றாட பழக்க வழக்கங்களின் கூட்டுத்தொகை; நம் வாழ்வில் திடீரென்று ஒருநாள் மட்டும் நடக்கும் மாற்றமல்ல.
அணுசக்தி பழக்கங்கள்!


வெற்றி என்பது நமது அன்றாட பழக்க வழக்கங்களின் கூட்டுத்தொகை; நம் வாழ்வில் திடீரென்று ஒருநாள் மட்டும் நடக்கும் மாற்றமல்ல.

-  ஜேம்ஸ் கிளியர் 

சமீபத்தில் நான் வாசித்த துணுக்கு ஒன்றை கேட்டால், நீங்களும் வாய்விட்டு சிரிப்பீர்கள். வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம், ""வாங்க! என்ன... காப்பி, கீப்பி குடிக்கிறீங்களா?''  என்று வீட்டுக்காரர் கேட்கிறார். வந்த விருந்தாளிக்கோ நாக்கெல்லாம் கிண்டல்.  ""போன தடவை வந்தப்ப "கீப்பி' கொடுத்தீங்க... இந்தத் தடவையாவது "காப்பி' கொடுங்க''  என்று வந்த வீட்டிற்குள் சிரிப்பு மத்தாப்பை கொழுத்தி வீசியிருக்கிறார்.

நமது பேச்சு வழக்கில் நம் பலரது வார்த்தைகளில் எப்படி "காப்பி'யோடு சேர்த்து "கீப்பி'யும் வருகிறதோ, அப்படித்தான் மனிதர்கள் நம் அனைவரது பேச்சிலும் செயலிலும் ஏதாவது பழக்கம் வழக்கம், பலமாகவோ, பலவீனமாகவோ தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. பெரும்பாலும்,  அது அனிச்சை செயலாகவே மாறிவிடுகிறது. 

""என்னங்க... இப்படியொரு வார்த்தையைச் சொல்லிட்டீங்க? அல்லது இப்படியொரு காரியத்தை செஞ்சுட்டீங்க?'' என்று நாம் கேட்கும்போது, ""பலர் நான் எங்க அப்படி சொன்னேன்? அல்லது அப்படி செஞ்சேன்?''  என்று திகைப்புடன் பேசுவதெல்லாம் அவர்களிடம் வழக்கமாக இருந்து அவர்கள் அறியாமலேயே அவர்களிடமிருந்து வெளிப்பட்ட இந்த "அனிச்சை செயல்' பழக்கங்களால்தான்.

அந்தவகையில் நம் ஒவ்வொரு வரிடத்திலும் நிறைய பழக்க வழக்கங்கள் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக நம்மோடு வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றும் அணுவாற்றல் கொண்டவை. அணுசக்தி எப்படி அழிவுப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுகிறதோ, அதே  அளவிற்கு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும் பயன்படுவதைப் போல, பழக்க வழக்கங்களும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்களைக் கொண்ட இருமுனை கூர்மை கொண்ட கத்திகள். பார்த்து... பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே மனித மனம் எல்லாச் செயல்களிலும் எது சுலபமான, இலகுவான வழியோ, முறையோ... அதையே தேர்ந்தெடுக்கும். அத்தகைய மனம்  தங்களிடமுள்ள தீய பழக்கங்களை விரட்டி, நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள அவ்வளவு எளிதாக முயலாது.

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர், அவரது "அணுவைப் போன்ற பழக்கங்கள்' (ஆட்டமிக் ஹேபிட்ஸ்)  என்கிற சுயமுன்னேற்றப் புத்தகத்தில் ஒருவரது நடத்தையில்... பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நான்கு வகையான அடிப்படை வழிமுறைகளைச் சொல்கிறார்: 

1.மாற்றத்திற்கு உட்படுத்தப் படவேண்டிய உங்களது பழக்கத்தை வெளிப்படையாக்குங்கள். 

2. ஈர்க்கும் தன்மையுடையதாக ஆக்குங்கள்

3. எளிமையானதாக ஆக்குங்கள்

4.திருப்திகரமானதாக ஆக்குங்கள் என்பவையே அவை. இப்படியொரு செயல்திட்டத்திற்கு மூன்று வாரங்கள் அதாவது,  21 நாட்களை வலுவான அடித்தளம் அமைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டு, அதற்கடுத்து 90 நாட்களுக்கு அவகாசம் எடுத்து அப்பழக்கத்தை முழுமைப்படுத்தியும், முழுமையான பழக்கமாக நம்முள் அது குடிகொண்டுவிட்டதா என்பதை பரிசோதிக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த மொத்த புத்தகத்தையும் மூன்றே வரிகளில் அல்லது மூன்று பிரதான கருத்துக்களாக சுருக்கினால், அதை நாம் இப்படித்தான் சொல்ல முடியும். 

1) ஓர்அணுவாற்றல் கொண்ட பழக்கம் என்பது மிகவும் சிறிதானது; எளிதானது. ஆனால், அதே நேரம் மிகப்பெரும் மாற்றங்களை நாளடைவில் செய்யக் கூடிய பேராற்றல் கொண்டது. 

2) தீய பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள முடியாமல் மறுபடியும், மறுபடியும் அதையே செய்வது... நமக்கு அவற்றைப் பிடித்திருக்கிறது என்பது காரணமல்ல. அவற்றை மாற்றிக் கொள்ள நாம் தேர்வு செய்யும் வழிமுறைகள் தவறு என்பதுதான்.

3)நமக்கு முக்கியத்துவமற்றதாக தோன்றும் சிறு சிறு செய்கைகள் மற்றும் பழக்க வழக்க மாற்றங்கள், நாளடைவில் பிறர் போற்றத்தக்க, கவனிக்கத்தக்க, அசாத்திய ஆற்றலை வழிப்படுத்தும் பெருஞ்செயலாக வளர்ந்து நிற்கும்.

மேலும், அணுவாற்றல் பழக்கங்கள் பற்றி பேசும்போது ஜேம்ஸ் கிளியர் ஐம்பெரும் சிந்தனைகளை நம் முன் சமர்ப்பிக்கின்றார். அவை: 

1)பழக்க வழக்கங்கள் நமது சுய முன்னேற்றத்திற்கான கூட்டு வட்டி அல்லது பெரு லாபம். 

2) உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால்... 
இலக்குகளை தீர்மானிப்பதை விடுத்து, உங்களது அன்றாட செயல்களிலும் பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்துங்கள்.

3)நமது பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க சிறப்பான வழி ஒன்றிருக்கிறது என்றால், அது நமது கவனம் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்கிற இலக்கை கடந்து, நாம் என்னவாக விரும்புகிறோம் என்பதில் இருக்க வேண்டும்.

4)அப்படி நமது பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டியதற்கு முக்கியமாக நமது பழக்கத்தை வெளிப்படையாகவும், ஈர்ப்புடையதாகவும், எளிமையானதாகவும், திருப்திகர மானதாகவும் மாற்ற வலியுறுத்துகிறார் கிளியர். 

5)ஒருவரது நடத்தையை வடிவமைப்பதில் அவரது சுற்றமும் சூழலும் கண்ணுக்கு தெரியாத பெரும்பங்கினை வகிக்கிறது என்பதையும் நமக்கு நினைவுறுத்துகிறார். 

ஒருவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் நிமிடங்கள் எல்லாம் ஏற்கெனவே ஒருவர் கவனம் செலுத்திய, செயல்படுத்திய சிறு சிறு அன்றாட, தொடர்ச்சியான பழக்கங்கள் தேக்கி வைத்த அபார சக்தியின் வெளிப்பாடுதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் காலத்தையும், நேரத்தையும் நமது கூட்டாளியாக்கும். தீய பழக்கங்கள் காலத்தையும் நேரத்தையும் நமது எதிரியாக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பழக்க வழக்கங்கள் எனும் அணுகுண்டு நமக்கு நல்ல நன்மை செய்யப்போகிறதா? அல்லது தீமை செய்யப் போகிறதா? என்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் மட்டுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com