

தெற்காசிய அளவிலான சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு 2022-ஆம் ஆண்டுக்கான "லிபர்டி இந்நோவேஷன் அண்ட் டெக்னாலஜி பாலிசிதோன் 2022' என்ற பெயரில் அகில இந்திய அளவில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் போட்டியை அறிமுகப்படுத்தியது. "டெக்லிபர்ட்டி' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதற்கட்ட போட்டி, அறிவுசார் போட்டி, திறன் சார் போட்டி, நிபுணர்கள் நேர்காணல் என போட்டிகள், முதல் கட்டம் மற்றும் இறுதிசுற்று என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் சென்னை ஐ. ஐ. டி, கொல்கத்தா மற்றும் தில்லியில் பயிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவியர் குழுவினர் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் "கிரிப்டோ கரன்சி' எனப்படும் எண்ம நாணயங்கள் முதலீடு குறித்த அரசின் கொள்கைகள் எப்படி வகுக்கப்பட வேண்டும் என்பது குறித்து, அகில இந்திய அளவில் மாணவர்களிடத்தில் போட்டி நடத்தி, அதன் மூலம் சிறந்த ஆலோசனைகளை சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு பெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் "ஸ்டூடண்ஸ் பார் லிபர்டி' என்ற லாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி பயிலும் போது தங்களுக்கான கற்கை நெறியில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு வகையான போட்டிகளை மாணவர்களிடத்தில் நடத்தி வருகிறது.
இதில் இறுதி சுற்று மார்ச் 27-ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.இந்த இறுதிப் போட்டியில் மாணவர்கள் எட்டு குழுக்களாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் அருண் விஜய் , சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற தீக்ஷô கெலாட், மத்திய அரசின் டிஜிட்டல் பொருளாதார கொள்கைக்கான ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றும் முனைவர் ஜெய்ஜித் பட்டாச்சாரியா என மூவர் கலந்துகொண்டனர். இவர்கள் நடுவர்களாகவும் பணியாற்றினர்.
மார்ச் 26 மற்றும் 27 என இரண்டு தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் மூன்று வெவ்வேறு துறை நிபுணர்களிடம் கலந்துரையாடல், பயிற்சி பட்டறை, இணைய வழி உரையாடல், தொழில்நுட்ப விளக்க உரை போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் அறிவித்தனர். இதில் முதல் பரிசை ஐ ஐ. டி சென்னையைச் சேர்ந்த பிபுல் குப்தாமற்றும் கொல்கத்தா நீதி அறிவியல் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரஷாஸ்தி மிஸ்ராகுழுவினர் தட்டிச் சென்றனர்.
டெல்லி ஜாமியா ஹாம்தர்த் பல்கலைக் கழக மாணவர் அன்மோல் ரத்தன் சிங், தில்லி கிரோரி மால் கல்லூரி மாணவர் சாஹஜ் சிங், டெல்லி லேடி ஸ்ரீராம்பெண்கள் கல்லூரி மாணவியான ஸ்ரீஜன் கெளர் ஆகியோர் அடங்கிய குழு இரண்டாவது பரிசையும், டெல்லி விவேகானந்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ப்ரொபஷனல் ஸ்டடீஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சாஹர்ஷ் பிரன்ஜுஸ்வானி மற்றும் சிவம் இஸ்ஸாக் ஆகியோர் மூன்றாவது பரிசையும் வென்றனர்.
"டெக் லிபர்டி' குறித்து சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், கல்வி மற்றும் ஆய்வு குறித்த பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான வால்டர் சைலேஷ் பேசிய போது - ""2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் லாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு அமைப்பாக சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு உருவானது. மாணவர்கள் மட்டுமே இந்த அமைப்பில் நிர்வாகிகளாக பணியாற்ற இயலும். இந்த அமைப்பு தற்போது அனைத்து கண்டங்களிலும் விரிவடைந்திருக்கிறது.
சமூகம், பொருளாதாரம், கல்வி கற்றல் என மாணவர்கள் நேரடியாக பங்களிப்பு
செய்யும் அனைத்து விஷயங்களிலும் எத்தகைய மாற்றங்கள் தேவை? என்பது குறித்தும், எம்மாதிரியான கொள்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்தும் சிறந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
தற்போது நாங்கள் தெற்காசிய நாட்டை மையப்படுத்தி இயங்கி வருகிறோம். மேலும் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களை கொண்டு கலந்துரையாடல் நிகழ்வு, பயிற்சிப்பட்டறை விவாதம், இணையவழி கூட்டம்.. வாசிப்பை மேம்படுத்துவது என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி, மாணவர்களிடத்தில் அவர்களது தேவை குறித்த புதிய கொள்கைஉருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
தற்போதைய சூழலில் கிரிப்டோகரன்சி குறித்த விழிப்புணர்வு அனைத்து நிலை
களும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் தனிமனித சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காகவும் "டெக் லிபர்டி' என்ற பெயரில் அகில இந்திய அளவில் மாணவர்களுக்கான போட்டியை அறிவித்தோம். இதில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் மட்டுமல்லாமல் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.